Friday, April 3, 2015

கால்வாயில் குதித்து சிறுமி தற்கொலை- ஹக்கலயில் மண்சரிவு அபாயம்



உடப்புஸ்ஸல்லாவ ருபஹா கொல்எல்பிட்டிய பகுதியிலுள்ள கால்வாயொன்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட 14வயது சிறுமியின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக உடப்புஸ்ஸல்லாவ பொலிஸ் பொறுப்பதிகாரி சுமித் வல்பொல தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுமி நேற்றைய தினம் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பும் வழியில் தனது சக நண்பிகளை அனுப்பிவிட்டு இந்த கால்வாயில் குதித்து உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
அப்பகுதியில் சென்ற ஒருவர் சிறுமியின் புத்தகப் பையைக் கண்டு பெற்றோரிடம் தெரிவித்த பின்னரே உயிரிழந்த சிறுமியின் சடலம் கிராம மக்களினால் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர், இன்று பிற்பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த சிறுமி கால்வாயினுள் குதித்ததில் மூச்சு திணறியே உயிரிழந்துள்ளார் என சட்டமருத்துவ அதிகாரி தெரிவித்ததாக உடப்புஸ்ஸல்லாவ பொலிஸ் பொறுப்பதிகாரி சுமித் வல்பொல சுட்டிக்காட்டியுள்ளார்.
காதல் விவகாரம் தொடர்பில் இந்த சிறுமி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதுடன், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உடப்புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஹக்கலயில் மண்சரிவு அபாயம்
நுவரெலியா வெலிமட வீதியின் ஹக்கல பகுதியில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதியில் பயணம் செய்யும் வாகன சாரதிகள் மிகவும் அவதானத்துடன் பயணிக்க வேண்டும் என நுவரெலிய பொலிஸார் வாகன சாரதிகளிடம் கேட்டு கொண்டுள்ளனர்.
மழைகாலங்களில் இப்பகுதியில் அடிக்கடி மண்சரிவு ஏற்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment