Monday, November 17, 2014

கிளி மகாதேவா ஆச்சிரம சிறுவர் இல்லத்தில் நடந்த பேராசிரியை மனோ சபாரத்தினத்தின் நினைவுநிகழ்வு!



ஆழ்ந்தகன்ற புலமையாளராகவும் துணிச்சல் மிக்க நிர்வாகியாகவும் சமூக உணர்திறன் மிக்க செயற்பாட்டாளாராகவும் பரிவு நிறைந்த வழிகாட்டியாகவும் வாழ்ந்து நிலைத்த ஓர் உன்னத ஆளுமைதான் அவர்கள்.
கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்துப் பிள்ளைகளுடன் அவரின் 31ஆம் நாள் நினைவுகள் ஆராதிக்கப்பட்ட தருணத்தில் சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் இரா. இராஜேஸ்கண்ணன் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில் அரவணைப்பில் தாய்; அதட்டல் மிகுவார்த்தைகளில் அதிகாரி; தெளிவுமிகு சிந்தனையில் புலமையாளர்; சிறுமை கண்டு பொங்குகையில் போராளி; முகமனற்றப் பேச்சினிலே நடுநிலையாளர்; நிலையறிந்து உதவுகையில் சேவகி; கண்ணயராக் கவனிப்பில் வழிகாட்டி என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவராக கல்வி சமூக மேம்பாட்டின் தாயாக பேராசிரியர் மனோ சபாரத்தினம் வாழ்ந்திருந்தார்.
ஸ்கொட்லாந்தின் எடின்பரோப் பல்கலைக்கழகத்தின் கலாநிதிப் பட்ட ஆய்வு அனுபவங்களின் வழியாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தினை கட்டமைத்து அதன் முதலாவது பீடாதிபதியாக இருந்து அப்பல்கலைக்கழக வளர்ச்சியின் முன்னோடியாக அரும்பணியாற்றினார்.
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வசதி வாய்ப்புக்களை விடுத்து கிழக்குப் பிரதேச உயர்கல்வி மேம்பாட்டுக்கென தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்தார்.
நெருக்கடி மிகுந்த காலங்களில் மாணவர் நலன் சார்ந்தும் சமுதாய நலன் சார்ந்தும் இவர் ஆற்றிய பணிகள் இன்றுவரை நினைவு கூரப்படுகின்றன. அந்நாட்களில் இராணுவத்திரால் கொண்டு செல்லப்படவிருந்த 47 பல்கலைக்கழக சமூகத்தினரை அவர்களோடு துணிச்சலாக வாதிட்டு மீட்டெடுத்த சம்பவம் தமிழ்ப் பரீட்சகர்கள் பாரபட்சமாக நடக்கிறார்கள் என்ற இனவாத நோக்கிலான அமைச்சர் சிறில் மத்திய பூவின் கருத்துக் எதிராகப் போர்க் கொடி தூக்கி பாராளுமன்றம் வரை பேச வைத்து சாதித்தமை தனக்கான உயர் பதவி வாய்ப்பு அநீதியான முறையில் மறுக்கப்பட்ட வேளையிலும் கூட தொடர்ந்து இரண்டு தடவைகளுக்கு மேல் பீடாதிபதியாகக் கடமைபுரிந்து மாணவர்கல்வி மேம்பாட்டுக்காய் உழைத்தமை என பலவற்றைக் குறிப்பிட முடியும்.
இவரது புலமை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் பல சர்வதேச ஆய்வேடுகளில் பதிவுபெற்றுள்ளன. கல்வி விரிவாக்கம் தொடர்பாக இவர் கொண்டிருந்த ஆர்வத்தின் பயனாக திறந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கான பல நூல்களை எழுதியிருந்தார். அவ்வாறே தமிழை அறிவியல் மொழியாக்கும் உயர் நோக்கில் உயிர்ப் பல்வகைமை என்ற நூலினையும் வெளியிட்டிருந்தார். சுவாமி விபுலானந்தரின் கல்வியில் தரிசனம் பற்றிய ஆய்வு நோக்கிலான பேருரை இவரின் கல்விச் சிந்தனையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. அறிவுத் துணிவுடன் பணியாற்றி வந்த இவர் முன்னேறத் துடிக்கும் பெண்களுக்கு முன்மாதிரி ஆளுமையாக அமைந்தார்.
மட்டக்களப்பில் மன்று நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிய காலத்தில் சமூக உணர்திறன் மிக்க பல சூழலியல்சார் திட்டங்களை தூரநோக்குடன் வகுத்து செயல்படுத்தினார். கிழக்கின் கரையோரம் எங்கும் பாதுகாப்பு அரணாக நிமிர்ந்துள்ள கன்னா மரங்களும் சவுக்கு மரங்களும் அவரின் அயராப் பணிக்கு சாட்சியாக விளங்குகின்றன என்றார்.
இத்தகைய பல்பரிமாண ஆளுமை கொண்ட பேராசிரியர் மனோ சபாரத்தினம் அவர்களுடைய வெற்றிடம் மீள் நிரப்ப முடியாத பெறுமானங்களினால் ஆனது. அவரின் நினைவுகளைச் சுமக்கும் ஒவ்வொருவரின் மனங்களிலும் அவை நிலைத்து வாழும். இவ்வா ராதனை நிகழ்வின் போது அவரின் வாழ்வினை இலக்கியமாகப் பேசும் பேராசிரியர் என். சண்முகலிங்கனின் என் அக்காவின் கதை என்னும் நூலும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjq5.html

No comments:

Post a Comment