தமிழ்த் திரையுலகம் மறந்து போன மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான ருத்ரையா சற்று முன்னர் சென்னை, தனியார் மருத்துவமனை ஒன்றில் உடல்நலக் குறைவால் மரணடைந்தார்.
நல்ல சினிமாவை நேசிக்கும் தமிழ் ரசிகர்களுக்கு ருத்ரையா என்ற இயக்குனரை என்றுமே மறக்க முடியாது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடித்த ‘அவள் அப்படித்தான் (1978),’ சந்திரஹாசன், நந்தகுமார், கிருஷ்ணகுமாரி நடித்த ‘கிராமத்து அத்தியாயம் (1980)’ ஆகிய படங்களை இயக்கியவர்.
அதன் பின் ஏனோ அவர் மேற்கொண்டு தமிழ்ப் படங்களை இயக்கவில்லை. தமிழ்த் திரையுலகம் அவரை ஒதுக்கியதா அல்லது அவராகவே ஒதுங்கினாரா என்பது தெரியவில்லை. ருத்ரையாவின் இரண்டாவது படமான ‘கிராமத்து அத்தியாயம்’ மாபெரும் தோல்விப் படமாக அமைந்ததால் அவரால் தொடர்ந்து படங்களை இயக்க முடியாமல் போனது என்றும் சொல்கிறார்கள்.
சமீபத்தில் கூட இயக்குனர் பார்த்திபன் அவருடைய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் இசை வெளியீட்டுக்கு அவரை அழைத்ததாகவும், ஆனால் அவர் விரும்பவில்லை என்றும் கூறியதாகவும் பார்த்திபன் தெரிவித்திருந்தார்.
பத்து வருடங்கள் முன் வரை கூட ருத்ரையா மீண்டும் படங்களை இயக்க முயற்சி செய்ததாகவும் தெரிகிறது. 1978-லேயே முற்போக்கான ‘அவள் அப்படித்தான்’ படத்தை இயக்கியவர் அவர். அப்போது வளர்ந்து வந்த முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா ஆகியோரை நடிக்க வைத்து அந்தப் படத்தை இயக்கினார்.
1978 தீபாவளி அன்று “அவள் அப்படித்தான், சிகப்பு ரோஜாக்கள், மனிதரில் இத்தனை நிறங்களா” ஆகிய படங்கள் வெளிவந்தன. அவற்றில் இன்றும் நினைவில் நிற்கக் கூடிய ஒரு படைப்பாக ‘அவள் அப்படித்தான்’ படம் இருந்து வருகிறது. படம் வெளிவந்த போது படத்திற்கு வரவேற்பே இல்லாமல் இருந்தது.
அந்த சமயத்தில் இந்தியத் திரையுலகின் திரைப்பட மேதையான மிருணாள் சென் சென்னைக்கு வந்திருந்தார். யதேச்சையாக ‘அவள் அப்படித்தான்’ படத்தைப் பார்த்தவர் ஒரு அருமையான திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களே என்ற வருத்தத்தில் பத்திரிகையாளர்களை அழைத்து அவருடைய கருத்தை சொல்லியிருக்கிறார். அதன் பின்தான் பத்திரிகைகள் ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா ஆகியோரின் பேட்டிகளை வெளியிட்டு படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். பிறகுதான் படம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய ஊர்களில் 100 நாட்கள் ஓடியது.
சிஎன்என் – ஐபிஎன் டெலிவிஷன் இந்தியாவின் சிறந்த 100 திரைப்படங்களில் ஒன்றாக ‘அவள் அப்படித்தான்’ படத்தைத் தேர்வு செய்து பெருமைப்படுத்தியுள்ளது.
தமிழில் எத்தனை ஆயிரம் படங்கள் வெளிவந்தாலும் ‘அவள் அப்படித்தான்’ படமும், அப்படத்தை இயக்கிய ருத்ரய்யாவும் என்றுமே போற்றுதலுக்குரியவர்கள்தான்.
ஒரு சினிமா ரசிகனாக அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்…
http://www.screen4screen.com/director-rudraiah-news/
No comments:
Post a Comment