சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், இளம்ஜோடியை ஒரு கும்பல் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது, இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு ரோந்து வந்த ரெயில்வே பொலிசார் இளம்ஜோடியையும், தகராறில் ஈடுபட்ட கும்பலையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர், விசாரணையில், பிடிபட்ட வாலிபர் பெயர் வினோத்குமார், அந்த பெண்ணின் பெயர் நக்மா(18).
இருவரும் ரகசிய திருமணம் செய்ய வந்த போது, வினோத்குமாரின் மனைவி கவிதா தனது உறவினர்களுடன் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் கவிதாவே, தனது கணவர் வினோத்குமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே பொலிசாரிடம் கூறியுள்ளார்.
பொலிசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகின, சென்னை கொடுங்கையூர் சவுந்தர்யா நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார்(27). இவர் சைதாப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் மூலக்கடை பகுதியைச் சேர்ந்த கவிதா(24) என்பவரை 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வினோத்குமார், வேலைபார்க்கும் பகுதியில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தவர் நக்மா(18), இவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர்.
இவரது தந்தை சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவன அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
மாணவி நக்மா பள்ளிக்கு செல்லும்போது பார்த்த வினோத்குமார் அவர் மீது காதல் வயப்பட்டார். ஆசைவார்த்தைகள் கூறி நக்மாவை மயக்கி தனது காதல் வலையில் விழவைத்தார்.
அதன் பின்னர் வினோத்குமாரும், நக்மாவும் சென்னையில் பல்வேறு இடங்களுக்கும் சென்று தங்கள் காதலை வளர்த்து வந்தனர். வினோத்குமார் திருமணமானவர் என்பது தெரிந்தும், நக்மா தொடர்ந்து வினோத்குமாரை காதலித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நக்மாவின் தந்தை பணி மாறுதலாகி தனது சொந்த ஊரான டேராடூனுக்கே குடும்பத்தோடு சென்றுவிட்டார். இதனால் நக்மாவை காணாமல் வினோத்குமார் தவித்தார்.
பின்னர் விடயம் அறிந்து, அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் டேராடூன் சென்று நக்மாவை சந்தித்துவிட்டு வந்தார்.
இதுபற்றி தெரிந்ததும் வினோத்குமாரை அவரது மனைவி கவிதா கண்டித்தார். இதனால் கவிதாவை விவாகரத்து செய்துவிட்டு நக்மாவை திருமணம் செய்ய வினோத்குமார் முடிவெடுத்தார்.
அதன்படி 2 நாட்களுக்கு முன் நக்மாவை பார்ப்பதற்கு வினோத்குமார் டேராடூன் சென்றார். திட்டமிட்டபடி யாருக்கும் தெரியாமல், நக்மாவை அழைத்துக் கொண்டு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை புறப்பட்டு வந்தார்.
இதற்கிடையில் கவிதா, நக்மாவின் தந்தையை கைப்பேசியில் தொடர்பு கொண்டு, நக்மா-வினோத்குமார் காதல் விவகாரத்தையும், இருவரும் திருமணம் செய்ய இருப்பது பற்றியும் விளக்கமாக கூறியுள்ளார்.
கவிதா கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த நக்மாவின் தந்தை தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு ரயில் நிலையத்துக்கு விரைந்தார். ஆனால் அதற்குள் ரெயில் புறப்பட்டுவிடவே அவர் டேராடூன் பொலிசில் தனது மகளை மீட்டுத்தருமாறு புகார் கொடுத்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தனது கணவர் வினோத்குமார், நக்மாவை அழைத்து வருவதையறிந்து, கவிதா தனது உறவினர்கள் 5 பேருடன் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நேற்று அதிகாலை முதலே காத்திருந்தார்.
ரயில் வந்ததும், அதில் இருந்து இறங்கிய வினோத்குமார்-நக்மா ஜோடியை சுற்றிவளைத்து பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது தான் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.
மேலும், வினோத்குமாரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசியில், அவரும், நக்மாவும் உல்லாசமாக இருந்த காட்சியும் பதிவாகியிருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர்.
இந்த ஆபாச படங்களை தனது நண்பர்களுக்கு வினோத்குமார் அனுப்பியிருந்ததும் தெரியவந்தது.
வினோத்குமார் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், தனது 15 பவுன் நகைகளை மோசடி செய்துள்ளதாகவும் மாதவரம் பொலிசில் கவிதா ஏற்கனவே புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து வினோத்குமாரை மாதவரம் பொலிசில், ரெயில்வே பொலிசார் ஒப்படைத்தனர். |
No comments:
Post a Comment