Tuesday, November 11, 2014

ஒரு தீவுக்காக சீனா-ஜப்பான் இடையே நடக்கும் மறைமுக யுத்தம்!

சீனாவும் ஜப்பானும் மனிதர்கள் வசிக்காத ஒரு குட்டித் தீவுக்காக கடந்த 40 ஆண்டுகளாக மறைமுக யுத்தம் நடத்துகின்றன.
கிழக்கு சீனக்கடலில் உள்ள அந்தத் தீவுக்கூட்டத்தை "செங்காக்கு” என ஜப்பான் மொழியிலும், "டையாயூ” எனச் சீன மொழியிலும் அழைக்கின்றனர்.
இந்த இரு நாடுகளுக்கும் புவியியல் ரீதியாக முக்கியமான தீவாக இது விளங்குகிறது.
1894- 95ம் ஆண்டில் நடந்த முதல் சீன- ஜப்பானியப் போரில் கிடைத்த வெற்றியை அடுத்து, அந்த தீவை ஜப்பான் தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டது.
பின்னர் 1945ம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் முடிவில் அமெரிக்காவிடம் ஜப்பான் சரணடைந்ததால், இத்தீவு அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுள்ளது.
இதையடுத்து 1972ம் ஆண்டில் மீண்டும் ஜப்பானிடமே அமெரிக்கா தீவை ஒப்படைத்தது. ஆனால், அதே ஆண்டு முதல் சீனாவும் இதற்கு உரிமை கோர ஆரம்பித்தது.
இரு நாடுகளும் தங்கள் கப்பல்களையும், விமானங்களையும் இத்தீவுப் பகுதிக்கு அனுப்பி கண்காணித்ததைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்தது.
இந்தச் சூழ்நிலையில் தான் சீனாவின் தூதரக அதிகாரி யாங் ஜெய்ச்சியும், ஜப்பான் பிரதமர் ஷின்ஸா அபேயின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சொடாரோ யாச்சியும் கடந்த நவம்பர் 7ம் திகதி பெய்ஜிங்கில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தம் இத்தீவுப் பிரச்னைக்கு ஒரு முக்கியமான திருப்பத்தைக் கொடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், இப்பிரச்னையில் இரு நாடுகளும் இரு வேறு நிலையில் இருக்கின்றன என இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அறிவித்தன.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்றுவரும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், ஜப்பான் பிரதமர் ஷின்ஸா அபேயும் நவம்பர் 10ம் திகதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அரைமணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கு இடையிலான கடல் பகுதி மோதலைத் தடுக்க ஒரு மேலாண்மைத் திட்டத்தை உருவாக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவதற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளதாக நான் நம்புகிறேன் என ஜப்பான் பிரதமர் அபே தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment