Tuesday, February 21, 2012

மதிப்பெண் போடமுடியாத தோனி ...

சிறுவயதிலேயே பிள்ளைகளை நெறிப்படுத்தாமல் விட்டால் பெற்றோரின் வாழ்வும் பிள்ளையின் கவனமும் தவறாக சென்றுவிடும்,இல் வளையாததை இலா வளைக்கமுடியும்?அவர்களின் கவனத்தை ஆரம்பத்திலேயே ஒரு திசைப்படுத்திவிட்டால் கடிவாளம் போட்ட குதிரை போல வாழ்வு நேராக நாம் விரும்பிய திசையில் செல்லும்.பிள்ளைகளின் திறமையை எடை போட்டு பெற்றோர்,கல்வியமைச்சு செயற்படவேண்டும்.ஆசைப்படுவதையல்ல!!உதாரணமாக மிகவும் போட்டி நிறைந்த வருமானமற்ற விடயங்களில் பிள்ளை ஆசைப்பட்டது என்று விட்டால் எதிர்காலத்தில் பிள்ளையே வெறுக்கும் நிலை வரும்.எனவே பிள்ளையின் திறனை எடைபோடுங்கள்!!

பிரகாஷ்ராஜ் முதன்முதல் இயக்குநர் பொறுப்பேற்றுத் தாயரித்து வழங்கியிருக்கும் திரைப்படம் தோனி. இன்றைய கல்வி முறையின் தொடர் பாதிப்புகளைக் காட்டமான விசாரணைக்கு உட்படுத்தும் அந்தப் படம் பார்ப்பவர்களை மேலும் உணர்ச்சிமயமான சிந்தனைக்குள் சுழல வைத்துவிட்டது.


இன்றைய கல்வி முறையின் அபத்தங்கள் குறித்து நையாண்டி செய்திருக்கிறது தோனி.
சமகாலத்தில் பெற்றோரையும், சமூகத்தையும் குழந்தைக்கு நேர் எதிராக நிற்க வைக்கும் கல்வி அணுகுமுறை குறித்துச் சாட்டையடியாக விவாதங்களை முன்வைக்கிறது.

அவனால் ஏன் இந்தக் கல்வித் திட்டத்தின் படிக்கட்டுகளை ஏறமுடியாது என்றால், படத்தின் தலைப்பிலேயே சொல்லி இருப்பது மாதிரி அவன் தோனியின் தீவிர பக்தன். கிரிக்கெட் அவனது உயிர். அவனது விளையாட்டுத் திறமை பற்றி கிரிக்கெட் கோச் என்ன சத்தியம் செய்தாலும் அதைக் கேட்பதற்கான காதுகள் கல்வித் திட்டத்தில் இல்லை. அதன் வழி மூளையை வடிவமைத்து விட்ட பள்ளி முதல்வருக்கோ, வகுப்பு ஆசிரியருக்கோ இல்லை. அரசுப் பணியில் இருந்து கொண்டே ஓவர் டைம் வேலையும், வீட்டில் ஊறுகாய் தயாரித்து பாட்டில்களில் அடைத்துத் தெருத்தெருவாய் அலைந்து விற்றபடி வருவாயையும், தனது உளவியல் விடுதலையையும் தேடியபடி அல்லும் பகலும் அலையும் தந்தைக்கும் பிடிபடுவதில்லை.

குழந்தைக்குப் பிடித்த துறையில் அவனுக்கு இருக்கும் திறமையை வெளிக்காட்ட இடம் தராது அவனை எதற்கும் உதவாதவனாகப் பட்டம் சுமத்த நாம் யார் என்பது தான் மையக் கேள்வி. பதினேழாம் வாய்ப்பாடு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா என்று தங்கை பொறுமை இழந்து கேட்பதும், தனக்கு கணக்கு தெரியாது கிரிகெட் தெரியும் என்று கோபமாகப் பேசத் தொடங்கும் அந்தச் சிறுவன் கிரிகெட் நாயகன் தோனி, கிரிக்கெட் பற்றி இமை மூடித் திறக்கும் நேரத்தில் சரமாரியாக மனத்திலிருந்து எடுத்துக் கொட்டுவதும், நான் ஒன்றும் முட்டாள் அல்ல என்று நிறுத்துவதும் அதிர வைத்துக் கண்ணீரைப் பெருக்கும் இடம்.

படம் கல்வியை மட்டுமல்ல, விலைவாசி உள்ளிட்ட வேறு சில பிரச்சனைகளையும், இது எது பற்றியும் வெறும் புலம்பல் மட்டும் செய்துவிட்டுப் பொது வெளியில் குரல் கொடுக்காது தனது அன்றாடத்தில் உழலும் நடுத்தர வர்க்கம் பற்றியும் அற்புதமாக விமர்சனம் செய்கிறது. எதிர்த்துக் குரல் கொடுக்க முன்வந்தால் சந்திக்க வேண்டிய தாக்குதலையும் ஒளிவு மறைவின்றி எடுத்து வைக்கிறது. ஆனால் தொடர் போராட்டத்திற்கான சாதகமான விளைவுகள் குறித்த நம்பிக்கையையும் முன்வைக்கிறது.

தோனி! மிக அடிப்படையாகச் சில கேள்விகளைப் பார்வையாளர் முன் வைக்கிறது. சமூக கோபத்தை விசிறுகிறது. அதை உணர்ச்சிவயப் பின்புலத்தில் சொல்ல வேண்டிய கட்டாயத்தைக் கொண்டிருந்தாலும் சிந்தனைகளைத் தூண்டித்தான் விடை பெறுகிறது.

ஒரு மாணவனின் தோல்வி அவனது தனிப்பட்ட விவகாரம் அல்ல என்றும், சமூகத்தின் பொறுப்பு என்ன என்பதையும் சொல்லும் இடித்ததில் தோனி திரைப்படம் இப்போதைய தமிழக கல்விச் சூழலில், மேற்படி அதிர்ச்சி நிகழ்வின் பின்புலத்தில் மிகப் பெரிய கவன ஈர்ப்பாக உருப்பெறுகிறது. பார்க்கவும், விவாதிக்கப்படவும் முக்கிய கருப்பொருளையும் நமது கையில் வைக்கிறது.

ஞானவேல், பிரகாஷ்ராஜ் கூட்டு உழைப்பு கதை, வசனத்தில் முக்கிய பாராட்டுக்கு உரியது. விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான “நீயா நானா” மேடையை திரைக்கதை அழகாக பயன்படுத்துகிறது.

மேடை நாடகம் போன்ற வசனக் கத்தல்கள், வழக்கமான முறையில் செல்லாத திரைக்கதை போன்றவற்றை பலவீனமாக நினைப்பவர்கள் மதிப்பெண்களைக் குறைத்துக் கொள்ளலாம். ஆனால் படம் மதிப்பெண்களுக்கு எதிரானது

No comments:

Post a Comment