முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கோரி வடக்கு - கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஏழு தமிழ் அரசியல் கட்சிகளால் இந்த கடையடைப்பு போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாண நகரம்
இந்த நிலையில், யாழ்ப்பாணம் - வடமராட்சி, மந்திகையில் இன்று பூரண கடையடைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தைகள், கடைகள் என்பன மூடப்பட்டுள்ளன.
பருத்தித்துறை நகரத்திலும் இன்று முழுமையாக கடையடைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும் இலங்கை போக்குவரத்து சபை, அரச, தனியார் வங்கிகள், மருந்தகங்கள், உணவகங்கள் என்பன திறந்துள்ளன.
மேலும், யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம், யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதி, ஸ்ரான்லி வீதி, ஆஸ்பத்திரி வீதி, முனிஸ்வரா வீதி, கே.கே.எஸ் வீதி ஆகிய பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெறிச்சோடிய நிலையில் யாழ்ப்பாணம் மத்திய நகரப்பகுதி காணப்படுவதுடன், அரச நிறுவனங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி திறந்துள்ளன.
நெல்லியடி நகரிலும் அனைத்து தனியார் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. உணவகம், மருந்கம், வங்கிகள் உட்பட அத்தியாவசிய சேவை நிலையங்கள் திறந்துள்ளன.
மேலதிக விபரங்கள் - கஜிந்தன்
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. குறுந்தூர சேவைகளில் மாத்திரம் தனியார் பேருந்துகள் ஈடுபட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தின் உப நகரங்களில் ஒன்றாக காணப்படுகின்ற பரந்தன் பகுதியிலும் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரச பேருந்துகள், ஏனைய அரச திணைக்களங்களின் சேவைகள் வழமை போன்று இடம்பெற்று வருகின்றது. முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட்டுள்ளன.
மருந்தகங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வர்த்தக செயற்பாடுகள் இடம்பெறுகிறது. சேவைச் சந்தையும் முழுமையாக முடங்கியது.
மேலதிக விபரங்கள் - எரிமலை மற்றும் யது
முல்லைத்தீவு
முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரியும், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் வடக்கு - கிழக்கில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு கிழக்கில் இன்றையதினம் கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வர்த்தக நடவடிக்கைகள் முற்றாக முடங்கியுள்ளது.
அரச திணைக்களங்களின் சேவைகள், மருந்தகங்களின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும் உணவகங்கள் மற்றும் புதுக்குடியிருப்பு பொதுசந்தை முழுமையாக முடங்கிய நிலையில் காணப்படுவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை பாடசாலைகளில் பரீட்சை இடம்பெற்று வருகின்றமையால், கல்விச் செயற்பாடுகள் வழமை போல இடம்பெற்றிருந்தது.
வங்கிகள், நிதி நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் இன்மையால் நகரத்தின் இயல்பான செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருந்தது.
மாவட்டத்தின் புறநகர்ப்பகுதிகளான முள்ளியவளை, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, விசுவமடு, மாங்குளம் உட்பட ஏனைய உபநகரங்களின் வழமையான செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்திருந்ததுடன், வியாபார நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.
மேலதிக விபரங்கள் மற்றும் புகைப்படங்கள் - ஷான்
வவுனியா
வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்படும் கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் முழுமையான ஆதரவு வழங்கப்பட்டது.
அந்தவகையில் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் நடமாட்டம் மிகக் குறைவாக காணப்பட்டது.
இதேவேளை அரச பேருந்துச்சேவைகள் வழமைபோல இடம்பெற்றிருந்ததுடன், தனியார் பேருந்துச்சேவைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தது.
இதேவேளை பாடசாலைகளில் பரீட்சை இடம்பெற்றுவருகின்றமையால் கல்விச்செயற்பாடுகள் வழமைபோல இடம்பெற்றிருந்தது.
வங்கிகள், நிதி நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் இன்மையால் நகரத்தின் இயல்பான செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருந்தது.
இதேவேளை நீதிமன்ற செயற்பாடுகளில் இருந்து சட்டத்தரணிகளும் விலகியிருந்தனர்.
மாவட்டத்தின் புறநகர்ப்பகுதிகளான நெடுங்கேணி,செட்டிகுளம், கனகராயன்குளம் உட்பட ஏனைய உபநகரங்களின் வழமையான செயற்ப்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்திருந்ததுடன், வியாபார நிலையங்களும் மூடப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில், வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொது முடக்கம் ஊடான எதிர்ப்புப் போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ் மக்களும், முஸ்லீம் மக்கள், சிவில் சமூக அமைப்புக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தமது முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றனர்.
மேலதிக தகவல் - திலீபன்
No comments:
Post a Comment