Wednesday, March 21, 2018

மைத்திரிக்கு அந்தப் பிஞ்சுகள் இரண்டும் எழுதிய கடிதம்!


ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.
அவரது இறுதிக்கிரியை நிகழ்வு நேற்று முன்தினம் கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்றது. மனைவியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக மூன்று மணித்தியாலங்கள் கணவனுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட தந்தையோடு, இரண்டு சின்னஞ்சிறு பிள்ளைகள் இணைந்து கொண்டனர்.
தாயின் இறுதிக் கிரியைகள் செய்வதற்காக அந்தச் சிறுவன் சென்ற வேளை, சிறையிலிருந்து வந்த தந்தை சிறை வாகனத்தில் ஏறிய போது அவரின் மகளும் கூடவே ஏறினார். இது அங்கு கூடியிருந்த அனைவரையும் கண் கலங்க வைத்தது.
இது தொடர்பாக அனைத்து தரப்பினரும் அரசாங்கத்திடம் ஜனாதிபதியிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கருணை அடிப்படையில் பயங்கரவாதச் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அவரை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் குறித்த இரண்டு பிள்ளைகளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.


தமது தந்தையை கருணை அடிப்படையில் விடுதலை செய்து, பெற்றோரை இழந்து நிற்கும் எமக்கு உதவி செய்யுங்கள் என்று இன்று ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஊடாக குறித்த கடிதம் ஜனாதிபதிக்கு கிடைக்கும் வகையில் இன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
கிளிநொச்சி பிரதேச சபைகளிற்கு தெரிவான சுதந்திர கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் குறித்த கடிதத்தினை பெற்று அங்கஜன் இராமநாதன் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர்.
இதன்போது தமது தந்தையை விடுதலை செய்து தருமாறு ஜனாதிபதி மாமாவிடம் கோரிக்கையிட்டு இன்று கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுவன் தெரிவித்துள்ளார்.





http://www.tamilwin.com/politics/01/177567?ref=ls_d_tamilwin

No comments:

Post a Comment