Thursday, August 31, 2017

ஜகத் ஜயசூரிய தப்பியோடியமை உறுதியானது! வாஷிங்டன் போஸ்ட்

பிரேசில் நாட்டுக்கான இலங்கை தூதுவர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மீது அந்த நாட்டில் போர்க்குற்ற வழக்கு தொடரப்பட்டமைக்கான காரணம் குறித்து, தி வாஷிங்டன் போஸ்ட் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார் என்ற குற்றத்தை சுமத்தி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரேசில் நாட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து, அவர் நாட்டிலிருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகின. எனினும், அவர் தமது பதவிக்காலம் முடிந்தே நாடு திரும்பியதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்ததது.
இந்த நிலையில் வாஷிங்டன் போஸ்டின் கேட் குரோனின் ஃபாமன் என்ற செய்தியாளர், இந்த விடயத்தை ஆராய்ந்து அறிக்கையிட்டுள்ளார்.
இதன்படி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அங்கத்துவம் பெறாமை காரணமாக போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கையில், உள்ளுர் விசாரணைகள் நடைபெறுமாக இருந்தால், அதன்மூலம் உரிய தண்டனைகள் வழங்கப்படாது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவேதான், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் பிரேசில் நாட்டில் இந்த வழக்கைத் தாக்கல் செய்தார். பிரேசிலின் சட்ட முறைமையின்படி தமது நாட்டுக்குள் வந்த ஒருவர் இனப்படுகொலை, சித்திரவதை போன்ற குற்றங்கள் தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டால் அவருக்கு தண்டனை வழங்க முடியும்.
ஜகத் ஜயசூரியவை பொறுத்தவரையில் அவர் இராஜதந்திர சிறப்புரிமையை கொண்டிருக்கின்ற போதும், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமையால் அவரின் இராஜதந்திர சிறப்புரிமையை விலக்கிக் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரியிருக்க முடியும்.
இதன்போது, இலங்கை அரசாங்கமும் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கலாம். எனவே தான், ஜகத் ஜயசூரிய பிரேசிலை விட்டு வெளியேறியிருக்கலாம் என வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏதாவது ஒரு நாடு, இந்த வழக்கை விசாரணை செய்ய தீர்மானித்திருந்தால், ஜகத் ஜயசூரிய சர்வதேச பிடியாணைக்கு உட்பட வாய்ப்பிருந்தது.
இந்த நிலையில் தான் அவர், பிரேசிலிலிருந்து நாடு திரும்பியிருக்கலாம் என வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/special/01/157002

No comments:

Post a Comment