Sunday, April 5, 2015

காத்தான்குடி ஹொட்டலில் தீ விபத்து- வைரவர் சிலையை விற்க முயன்ற நபர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள ஹொட்டல் ஒன்றில் எரிவாயு அடுப்பு வெடித்ததில் ஹொட்டலின் முன்பகுதி தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது.
இந்தச் சம்பவம் இன்று காலையில் இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி 2ம் குறிச்சி பிரதான வீதியிலுள்ள தாஜ் ஹொட்டலின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு அடுப்பு வெடித்ததில் ஹொட்டலில் தீப்பிடித்தது. 
இதையடுத்து ஹொட்டல் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் தீ ஏனைய பகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன், மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் பிரிவினர் அங்கு விரைந்து சென்று தீயை முற்றாக அணைத்தனர்.
ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.வெதகெதர தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் தீயை அணைப்பதற்கும் உதவினர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வைரவர் சிலையை விற்க முயன்ற நபர் கைது
13 கிலோ நிறையும் 1.5அடி உயரமுடைய வைரவர் சிலையை விற்பனை செய்ய முயன்ற நபரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு திருமலை வீதியிலுள்ள கடையொன்றில் குறித்த சிலையை சந்தேக நபர் விற்பனை செய்ய முயன்றுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து மட்டக்களப்பு கொத்துகுளத்து வீதியைச் சேர்ந்த பத்மநாதன் ஜெகதீஸ்வரன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்து ஆலயமொன்றிலிருந்து குறித்த சிலை திருடப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

No comments:

Post a Comment