Monday, January 5, 2015

சிங்கம் என்று மார்தட்டிக் கொள்ள வேண்டாம்: சீறிப் பாயும் தமிழிசை

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குஷ்புவும் வார்த்தைகளால் மோதிக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
பூந்தமல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை பற்றி குஷ்பு கடும் விமர்சனம் செய்தார்.
இது பற்றி தமிழிசை கூறியதாவது, இந்தியா முழுவதும் காங்கிரசை விட பலம் பொருந்திய கட்சியாக பா.ஜனதா மாறி வருகிறது. தமிழகத்திலும் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்து வருகிறார்கள்.
இத்தனை ஆண்டு கால காங்கிரசின் பிடியில் சிக்கி சீரழிந்த நாட்டை மீட்டு உலக அரங்கில் தலை நிமிர வைத்தவர் மோடி.
தனிப்பட்ட தமிழிசையை பற்றி பேசினால் கோபப்படமாட்டேன். உலகமே வியக்கும் ஒரு மாபெரும் தலைவரை பற்றி மாபெரும் கட்சியை பற்றி டெல்லியிலே உட்கார்ந்து கொண்டு தமிழகத்தில் எங்கே இருக்கிறது பா.ஜனதா? என்று கேட்டார்.
அதனால் தான் கோப்பட்டேன். அவர் போய் சேர்ந்து இருக்கும் காங்கிரசுக்கு தமிழகத்தில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ஆனால் எங்கள் கட்சி இரண்டு இடங்களை பெற்றது.
உள்ளாட்சி தேர்தலில் 22 சதவீத வாக்குகளை பெற்றது என்பதை தான் சொன்னேன். ஆனால் குஷ்புவை யாருக்கு தெரியும்? என்று நான் சொல்லவில்லை.
அவர் ஒரு திரை நட்சத்திரம் என்பதும், தி.மு.க.வில் பிரசார பீரங்கியாக இருந்தவர் என்பதும் எல்லோருக்கும் தெரிந்தது தானே, எனக்கு மட்டும் தெரியாதா?
நான் பேசாததை இழுத்து போட்டு பேசி இருக்கிறார். அவ்வாறு அவர் பேசியதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
அந்த அளவுக்கு அவரை ஒரு தலைவராக நான் எடுத்துக்கொள்ளவும் இல்லை. இருந்தாலும் பலர் கேட்பதால் பதில் சொல்ல வேண்டியதுள்ளது.
காமராஜரின் புகழை ஓங்கி சொல்ல வேண்டிய காங்கிரஸ் குஷ்புவை நம்பி கட்சி நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு சென்று விட்டதே என்ற ஆதங்கத்தைதான் வெளியிட்டேன். இதில் என்ன தவறு இருக்கிறது?
நான் திரைப்பட கலைஞர்களை குறைத்து மதிப்பிடுவதில்லை. அவர்கள் அந்த துறையில் ஜொலிப்பவர்கள். சமூகத்துக்கு அவர்களின் பங்களிப்பு அதிகம் உண்டு.
நாட்டு மக்களை, எல்லா துறையை சார்ந்தவர்களையும் மோடி மதிக்கிறார். எனவேதான் மோடி ரஜினியை நேரில் சென்று சந்தித்தார்.
மோடி ரஜினியை தேடி சென்று சந்தித்தாரே என்று இளக்காரமாக குஷ்பு பேசுகிறார். அப்படியானால் ரஜினிக்கு அந்த தகுதி இல்லை என்று சொல்கிறாரா? ரஜினியை சந்தித்ததை தவறு என்கிறாரா? அல்லது ரஜினியை குறைத்து மதிப்பிடுகிறாரா?
பாரதீய ஜனதா தலைவர்கள் பாவமன்னிப்பு கேட்டு நாடாளுமன்றத்தை தேவாலயமாக மாற்றி வருகிறார்கள் என்கிறார். மன்னிப்பு கேட்பது என்பது மிகப்பெரிய பண்பு.
அந்த பண்பு எங்கள் தலைவர்களிடம் உள்ளது. அதையும் வழிபாட்டு தலத்தையும் ஒப்பிட்டு கொச்சைப்படுத்துவது அழகல்ல.
நாட்டுப்பற்றுள்ள கட்சி–நாட்டு மக்கள் நலனை பேணுகிற கட்சி எங்கள் கட்சி. எனவே அதை சார்ந்துதான் எங்கள் பேச்சும், செயலும் இருக்கும்.
பெண் சிங்கம் என்றெல்லாம் மார்தட்டி கொள்ள எதுவும் இல்லை. திரைப்படத்தை பார்த்து ரசித்து கைதட்டி, செல்வதை போல் குஷ்புவின் பேச்சை கேட்டும் கைதட்டி செல்வார்கள், அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.
http://www.newindianews.com/view.php?20360442200mmDf44eaImOll4cbbWgAKdddcKAMQAdbccnlOOee43DDmY3e022A40023

நான் பெண் சிங்கம்….என்னை உலகுக்கே தெரியும்: குஷ்புவின் பதிலடி
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 06:29.20 AM GMT +05:30 ]
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 130–வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய குஷ்பு, நான் ஒரு பெண்சிங்கம் என்னை உலகுக்கே தெரியும் என்று தடாலடியாக பேசியுள்ளார்.
கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்தார். திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பூவை ஜேம்ஸ் தலைமை தாங்கினார்.
நடிகை குஷ்பு சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு பேசுகையில், தமிழ்நாட்டில் பால்விலை, மின்சாரக்கட்டணம் பல மடங்கு உயர்ந்து விட்டது.
மத்திய அரசு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தவில்லை. பா.ஜனதா கட்சி தலைவர்கள் நாட்டின் மத, இன ஒற்றுமைக்கு எதிரான கருத்துக்களைத்தான் கூறி வருகிறார்கள்.
பகவத்கீதையை தேசிய நூலாக்க வேண்டும், சமஸ்கிருதத்தை படிக்க வேண்டும், மற்ற மதத்தினர் பண்டிகைகளை கொண்டாடாமல் தடுக்க வேண்டும் என்பதில்தான் அக்கறை காட்டுகிறார்கள்.
இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் எழுப்பினால் ஆளும் பா.ஜனதா மந்திரிகள் மன்னிப்பு கேட்கிறார்கள். பாராளுமன்றம் பாவ மன்னிப்பு கேட்கும் இடமாகி விட்டது.
தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் என்னை பற்றி மிகவும் மோசமாக விமர்சனம் செய்து இருக்கிறார். காமராஜர் கட்சி நடிகை குஷ்பு பின்னால் போகிறது என்று கூறியுள்ளார்.
யாரும் என் பின்னால் வரவில்லை. நான்தான் பெருந்தலைவர் காமராஜரின் கட்சிக்கு சென்று இருக்கிறேன். நடிகை–நடிகர் என்றால் மோசமானவர்கள் என்பதுபோல் விமர்சிக்கிறார்கள்.
பா.ஜனதா ஆளும் மத்திய அரசில் கேபினட் மந்திரியாக இருக்கும் ஸ்மிருதி இரானி நடிகை இல்லையா? மோடி தமிழ்நாட்டுக்கு வந்தபோது ரஜினியை சந்திக்கவில்லையா?
அவரை கட்சிக்கு இழுக்க தமிழக பா.ஜனதா கட்சி முயற்சி செய்தது ஏன்? சமீபத்தில் சென்னை வந்த பா.ஜனதா தலைவர் அமித்ஷா நடிகர் நெப்போலியன், இயக்குனர்–இசை அமைப்பாளர் கங்கை அமரன், நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோரை கட்சியில் சேர்க்கவில்லையா? நடிகர்–நடிகைகளை கட்சியில் வைத்திருக்கும் இவர்கள் என்னை விமர்சிப்பதா?
நடிகையாக இருப்பவர் ஒரு கட்சியின் தொண்டராக இருந்து பணிபுரிவதில் என்ன தவறு இருக்கிறது? என்னை யாருக்கும் அடையாளம் தெரியாது என்று தமிழக பா.ஜனதா தலைவர் கூறி இருக்கிறார்.
என்னை தமிழகத்திற்கு மட்டுமல்ல, நாட்டுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதுக்குமே தெரியும்.
பாம்பு என்றால் சண்டை போடலாம். பல்லி என்றால் தள்ளி விடலாம். நான் அப்படி அல்ல. ஒரு பெண்ணுக்கு மற்றொரு பெண் எதிரியா? உண்மையாகவே அவர் என்னை பார்த்து பயந்து விட்டார். நான் காக்கை அல்ல, பெண் சிங்கம்.
நான் தமிழக காங்கிரஸ் கட்சியை வளர்க்க முழு மூச்சுடன் பாடுபடுவேன். 2016–ல் நிச்சயமாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். கை தான் நமக்கு நம்பிக்கை என்று பேசியுள்ளார்.
http://www.newindianews.com/view.php?20360442200mmDf44eaemOll4cbbWgAKdddcKAMQAdbccnlOOee43DDmY3e022A40023

No comments:

Post a Comment