Tuesday, July 1, 2014

பிரான்ஸ் அதிரடி ஆட்டம் - அடுத்த சுற்றுக்குள் நுழைவு!

உலக கிண்ண தொடரில் பிரான்ஸ் அணி, நைஜீரிய அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
நேற்று இரவு நடந்த நொக்–அவுட் முறையிலான ‘ரவுண்டு–16’ போட்டியில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் அணி, நைஜீரியாவை எதிர்கொண்டது.
ஆரம்பத்தில் நைஜீரியாவின் ஆதிக்கமே அதிகம் காணப்பட்டது. பிரான்ஸ் வீரர்கள் முரட்டு ஆட்டம் ஆடி அதிர்ச்சி அளித்தனர். 19வது நிமிடத்தில் நைஜீரியாவின் எமினிகே அடித்த கோல், ‘ஆப்–சைடு’ என நிராகரிக்கப்பட்டது. 23வது நிமிடத்தில் பிரான்சின் போக்பா அடித்த பந்தை நைஜீரிய கோல்கீப்பர் எனியாமா துடிப்பாக தடுத்தார். தொடர்ந்து இரு அணிகளும் தாக்குதல் நடத்திய போதும், ‘பினிஷிங்’ இல்லாதால் முதல் பாதி கோல் எதுவும் அடிக்கப்படாமல் முடிந்தது.
இரண்டாவது பாதியிலும் பிரான்சின் ‘தாக்குதல்’ ஆட்டம் தொடர்ந்தது. நைஜீரியாவின் ஒனாசியை வீணாக மடக்கிய பிரான்சின் பிளேய்சி மெட்டியுடி மஞ்சள் அட்டை எச்சரிக்கை பெற்றார்.
ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் பிரான்சின் பென்சிமா அருமையாக பந்தை அடித்தார். இதனை உதைத்து வெளியே அனுப்பினார் நைஜீரிய தற்காப்பு பகுதி வீரர் விக்டர் மோசஸ். இது குறித்து சந்தேகம் எழ, ‘கோல்–லைன்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதில், பந்து ‘கோல்–லைனை’ கடக்கவில்லை என்பது தெரிய வர, பிரான்ஸ் வாய்ப்பு நழுவியது. இதற்கு பின் பிரான்ஸ் வீரர்கள் நைஜீரிய ‘பெனால்டி ஏரியாவில்’ அலை அலையாக தாக்குதல் நடத்தினர்.
போட்டியின்  79வது நிமிடத்தில் ‘கார்னர்’ வாய்ப்பில் பந்தை அடித்தார் வெல்பியுனா. இதனை நைஜீரிய கோல்கீப்பர் எனியாமா கையால் குத்தி தடுத்தார். இவரது துரதிருஷ்டம் பந்து, பிரான்சின் போக்பா இருக்கும் திசையில் பறந்து வர, அதை அவர் அப்படியே தலையால் முட்டி கோலாக மாற்ற, பிரான்ஸ் 1–0 என்ற முன்னிலை பெற்றது.
‘ஸ்டாபேஜ்’ நேரத்தில் தற்காப்பு பகுதியில் மாபெரும் தவறு செய்த நைஜீரிய வீரர் ஜோசப் யோபோ ‘சேம் சைடு கோல்’(90+1) அடிக்க, பிரான்ஸ் 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

No comments:

Post a Comment