Tuesday, April 8, 2014

மண்டைதீவு இளம் பெண் யாழிற்கு கடத்த முற்பட்ட எழுவர் மடக்கிப் பிடிப்பு !

மண்டைதீவிலிருந்து பெண்ணொருவரை யாழ்ப்பாணத்திற்குக் கடத்திச் செல்ல முற்பட்ட ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவையும், குறித்த வாகனத்தின் சாரதியினையும் மற்றும் கடத்தப்பட்ட குறித்த பெண்ணையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் இன்று (08) உத்தரவிட்டார்.

கடத்தலில் ஈடுபட்ட ஐந்து இளைஞர்களையும் நேற்று (07) மாலை கைது செய்த ஊர்காவற்றுறை பொலிஸார் தொடர்ந்து குறித்த வானின் சாரதியினையும் கைது செய்ததுடன், குறித்த பெண்ணையும் கைது செய்து இன்று (08) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து துரிதமாக செயற்பட்டதைத் தொடர்ந்து அவர்களைக் மண்டைதீவுச் சந்தியில் வைத்து கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லூர், அரியாலை, செம்மணி, வண்ணார்பண்ணை மற்றும் நீர்வேலி ஆகிய இடங்களைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
இது பற்றித் தெரியவருவதாவது;
மண்டைதீவு 6 ஆம் வட்டாரத்தில் சமுர்த்தி அலுவலகத்தில் அருகிலுள்ள வீட்டிலிருந்த இளம் பெண்ணை, வானில் வந்த ஐவர் கடத்திச் செல்ல முற்பட்ட வேளை வீட்டிலுள்ளவர்கள் கத்தியுள்ளனர். இதன்போது சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் ஓடிச் சென்ற போதும் குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர் மீது கடத்தலில் ஈடுபட்ட இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்படி சமுர்த்தி உத்தியோகத்தர் உடனடியாக கிராம சேவையாளருக்கு தெரியப்படுத்த, கிராம சேவையாளர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். பொலிஸார் மண்டைதீவு சந்தியிலுள்ள பொலிஸாருக்கு இது பற்றித் தெரிவித்ததைத் தொடர்ந்து குறித்த வாகனம் மண்டைதீவுச் சந்தியில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டது.
இந்த வாகனத்தில் இருந்தவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போது, குறித்த இளைஞர்களில் ஒருவரைத் தான் காதலிப்பதாகவும் அதற்கு வீட்டுக்காரரின் சம்மதம் கிடைக்காததாலேயே இவ்வாறு அவர்களுடன் சென்றதாகவும் மேற்படி பெண் தெரிவித்தார்.
ஆனால், இவர்களின் வாகனத்தின் சீற்றுகளுக்கு அடியில் 2 வாள்கள், 2 இரும்புக் கம்பிகள், மற்றும் நெஞ்சாக்கு போன்ற ஆயுதங்களை பொலிஸார் மீட்டெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/65015.html

No comments:

Post a Comment