கணவர் வீட்டில் கழிவறை இல்லாததால் திருமண வாழ்க்கையைதியாகம் செய்ய துணிந்த பழங்குடி பெண்......
மத்திய பிரதேச மாநிலம், பெதுல் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் அனிதா, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். அதே பகுதியைச் சேர்ந்த சிவ்ராம் என்பவருடன், கடந்தாண்டு இவருக்கு திருமணம் நடந்தது. கணவன் வீட்டுக்குச் சென்ற அனிதா, அங்கு கழிவறை வசதி இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கணவன் வீட்டாரிடம் பேசி, கழிவறை வசதியை அமைக்கும்படி வலியுறுத்தினார். அனிதாவின் கோரிக்கையை அவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். ஆத்திரம் அடைந்த அனிதா, கழிவறை வசதி இல்லாத வீட்டில் என்னால் வாழ முடியாது எனக் கூறி, திருமணமான இரண்டு நாட்களிலேயே, கணவர் வீட்டை விட்டு வெளியேறினார்.
அவரை சமாதானம் செய்ய சென்ற கணவரிடம், வீட்டில் கழவறை கட்டினால் மட்டுமே தான் வாழ வருவதாக கூறினார்.
இதனையடுத்து, சிவராம் தனது பகுதியில் உள்ள கிராம பஞ்சாயத்திடம் முறையிட்டார். பஞ்சாயத்து அவரது வீட்டில் கழிவறை கட்ட உதவியது. கழிவறை கட்டி முடித்ததும் அனிதா கணவர் வீட்டுக்கு வந்தார்.
கணவர் வீடு மட்டுமல்லாது, தன் சொந்த கிராமத்திலும், அனைத்து வீடுகளில் கழிவறை வசதியை ஏற்படுத்த வேண்டும் என, பிரசாரமும் செய்தார். இதை கேள்விப்பட்ட, "சுலப்' சர்வதேச அமைப்பு, அனிதாவின் கிராமத்தில் கழிவறை வசதியை அமைத்து தர, நடவடிக்கை எடுத்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சுலப் இன்டர்நேஷனல் என்ற சேவை நிறுவனம் ’முழுமையான தூய்மை இயக்ககம்’ என்ற திட்டத்துடன் அனிதாவின் கிராமத்தை தத்தெடுத்துள்ளது.
"சுலப்' அமைப்பின் தலைவர் பிந்தேஸ்வர் பதக் கூறுகையில், "பொது சுகாதாரத்துக்காக, தன் வாழ்க்கையை பணயம் வைத்த அனிதாவின் துணிச்சலை பாராட்டி, அவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் பரிசும், விருதும் கொடுக்க முடிவு செய்துள்ளோம். எங்கள் அமைப்பின் விளம்பர தூதுவராகவும் அவரை நியமித்துள்ளோம்' என்றார்.
No comments:
Post a Comment