மதுரை:
மதுரை மேலமாசிவீதியில் காந்தியடிகள் மேலாடையை துறந்த நினைவு இல்லம் எதிர்புறம், "டாஸ்மாக் மதுக்கடை' திறப்பதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.சுதந்திரத்திற்கு முன் காந்தியடிகள் மதுரை வந்தார். மேலமாசி வீதி வழியாக நடந்து சென்றார். அவர் பின்னால் சுதந்திர போராட்ட வீரர்கள், சத்தியாகிரக போராட்ட வீரர்கள் எண்ணற்றோர் வந்தனர். அப்போது மேலாடைக்கு கூட வழியில்லாமல் வறுமையில் வாடிய ஏழைகளை கண்டு மனம் வருந்தினார். ""ஏழைகளின் வாழ்வாதாரம் உயரும் நாள் வரும்வரை மேலாடை அணிய மாட்டேன்,'' என சபதம் ஏற்றார். பின், தனது மேலாடையை அங்கேயே துறந்தார். பின்னர் வாழ்நாள் முழுவதும் மேலாடை அணியவில்லை. காந்தியடிகள் மேலாடையை துறந்த இடம் நினைவு சின்னமாக போற்றப்படுகிறது. அந்த இடத்தில் தற்போது சர்வோதய அலுவலகம் செயல்படுகிறது. பூரண மதுவிலக்கு கொள்கையை கொண்ட காந்தி, மேலாடையை துறந்த இந்த இடத்தின் எதிரே டாஸ்மாக் " மதுக்கடை' மற்றும் "பார்' அமைப்பதற்கான முயற்சிகள் ஜரூராக நடக்கிறது. அமையவுள்ள மதுக்கடைக்கு அடுத்ததாக மகாமுனீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள "கட்டிச்செட்டி மண்டபத்தில்' சித்திரை திருவிழாவின் போது மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளுவது வழக்கம். காந்தியடிகள் நினைவு சின்னம் அருகே பள்ளிவாசலும் உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில் விதிமுறைகளுக்கு எதிராக மதுக்கடை அமைப்பது சுதந்திர போராட்ட தியாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தியாகிகள், மேலமாசிவீதி மக்கள் கலெக்டர் சகாயத்திடம் மனு அளித்துள்ளனர்.
No comments:
Post a Comment