Monday, June 18, 2018

காணாமல் ஆக்கப்பட்ட 500 பேரின் பட்டியலை ஐநா வெளியிட்டது!

உலகெங்கும் பல்வேறு சூழ்நிலைகளில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் 500 பேரின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையின் குழு வெளியிட்டுள்ளது.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்படும் நபர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஐக்கிய நாடுகள் குழுவே இந்த பட்டியலை பகிரங்கமாக வெளியிட்டுள்ளது
ஐக்கிய நாடுகள் சபை குழு வெளியிட்டுள்ள 500 பேர் கொண்ட குறித்த பட்டியலில் இலங்கையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் குகசெல்வம் என்ற ஒருவரும் உள்ளடங்குகின்றார்.
குறித்த பட்டியலின் மீது உடனடி நடவடிக்கை தேவை எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் குழு கோரிக்கை வைத்துள்ளது.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் கோபலகிருஷ்ணன் குகசெல்வம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மிக விரைவில் விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும் அவரைக் கண்டுபிடித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றை ஐக்கிய நாடுகள் குழு பரிந்துரைத்துள்ளது.
ஒரு அவசர செயல் காரணமாக காணாமல் போன நபரின் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தமது வாழ்நாள் முழுவதும் துன்பப்படுவதாக ஐக்கிய நாடுகள் குழுவின் தலைவர் சுயெலா ஜனினா தெரிவித்துள்ளார்.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவரின் குடும்பம் , உறவுகள், நண்பர்கள் தற்போதைய நிலைமை தொடர்பில் ஒவ்வொரு நொடியும் கலக்கத்தில் உள்ளனர். அவர்களைக் கருத்திற்கொண்டே இந்த 500 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தமக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனால், இவ்வாறு அநீதிக்கு உள்ளான நபர்களுக்கு நியாயத்தை வழங்குவதற்கு அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் உடனடியாக தலையிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
காணாமல் போனவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை அவர்களின் குடும்பங்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்படும் நபர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஐக்கிய நாடுகள் குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஐநா சபையின் குழுவின் உபதலைவர் ரெய்னர் ஹஹில் குறிப்பிடுகையில்,
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்டோர் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்படுகையில் விரைந்து தலையீடு செய்வதே ஒரேயொரு வழியாகும். பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் எவ்வித விசாரணை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் தீர்வுக்காக உறவினர்களைக் காத்திருக்கச் சொல்வது நியாயமற்ற செயலாகும் என்றார்.

http://www.tamilwin.com/community/01/185764?ref=ls_d_tamilwin

No comments:

Post a Comment