Saturday, May 19, 2018

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு


மக்கள் சக்தியைத் அரசியற்திரளாக மாற்றி, தமிழின அழிப்புக்கு அங்கீகாரம் கோரும் மக்கள் இயக்கம் ஒன்றினை தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் உருவாக்கப்பட அனைத்துத் தமிழ்த் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்று தமிழீழத் தேசிய துக்கநாள்!
தமிழீழ மக்கள் மீதான தனது இனவழிப்பின் உச்சத்தை முள்ளிவாய்க்கால் நிலப்பரப்பில் சிங்களம் தொட்டு நின்ற நினைவுகளின் ஒன்பதாவது ஆண்டு நினைவு நாள்.
24 மணி நேரமும் ஊடக உலகம் விழித்திருப்பதாகக் கூறப்படும் இந் நவீன காலத்தில், மனித வரலாறு வெட்கித் தலைகுனியும் வகையில் பெருங் கொடூரம் தமிழ் மக்கள்மீது சிங்களத்தால் இழைக்கப்பட்ட நாள்.
தமிழ் மக்களின் உள்ளங்களில் இப்பெருங் கொடுமை ஆழமாகப் பதிந்திருக்கிறது. ஒருபோதும் ஆறாத வடுவாக முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவு நிலைத்திருக்கிறது.
இந்நினைவு ஆறாப் பெருந்துயரையும் ஆற்றொணாச் சினத்தையும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. சிங்களத்திடம் அரசியற் சரணாகதியடையமாட்டோம் என்ற உறுதிப்பாட்டையும் தமிழ் மக்கள் மனங்களில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நிகழ்வு ஏற்படுத்தியிருக்கிறது.
முள்ளிவாய்க்காலில் சிங்களம் மூட்டிய இனவழிப்புப் பெருநெருப்பின் வெப்பத்தில்தான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாகியது. 2010 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவு நாட்களில் நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தோம்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசியல் தீர்மானமாக மே மாதம் 18 ஆம் நாளைத் தமிழீழத் தேசியத் துக்க நாளாகப்பிரகடனம் செய்தோம்.
தமிழ் மக்களின் கூட்டுத்துயரின் குறியீடுதான் தேசிய துக்க நாள் பிரகடனம். தமிழ் மக்களின் நினைவுகளில் பொதிந்திருக்கும் வரலாற்று நிகழ்வுகளில் முள்ளிவாய்க்கால் தந்த ஆறாப்பெருந்துயரை வேறு எந்த நிகழ்வுகளும் தந்ததில்லை.
தாயகத்திலும் வட மாகாணசபை இந் நாளைத் தேசிய துக்க நாளாகவும், இனவழிப்பு நாளாகவும் பிரகடனப்படுத்தியிருக்கிறது.வடக்குமாகாண முதலமைச்சர் இந்நாளைத் தமிழர்களின் தேசிய துக்க நாளாக விபரித்துள்ளார்.
சிங்களத்தின் தமிழினவழிப்பு தந்த பெருந்துயரை நெஞ்சில் ஏந்திய வண்ணம் தமிழீழ மக்களின் அரசியற் சுதந்திரத்துக்கான போராட்டத்தைத் தமிழ் மக்கள் எல்லா முனைகளிலும் தொடர வேண்டும் என்ற அறைகூவலை இன்றைய தமிழீழத் தேசிய துக்க நாளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுக்கிறது.
முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு தந்த பெருந்துயரின் நினைவுகளுடன் உலகத் தமிழ் மக்கள் உலகின் ஒரு வலுமையமாக உருத்திரள வேண்டும். இவ்வலு மையம் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலையில் தீர்மானகரமான பாத்திரத்தை ஆற்ற வேண்டும்.
தமிழ்மக்களின் கூட்டுத்துயர், இத் துயர் தந்த கூட்டுக் கோபம் - இவை தமிழர் தம் வரலாற்றின் கூட்டுநினைவுகளில் என்றும் நிலைத்து நிற்கும். தமிழீழ மக்களின் அரசியல் விடுதலை வேணவாவை இந் நினைவுகள் என்றும் வலுப்படுத்தி வளர்க்கும்.
அன்பான மக்களே!
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு மூடியதோர் அறைக்குள் நடந்து முடிந்தவொரு விடயமல்ல. உலகின் செய்மதி வலைப்பின்னலின் கண்காணிப்பில் இருந்தவொரு நிலப்பரப்பில்தான் இவ் இனவழிப்புக் கொடுமைகள் நடைபெற்றன.
இவ் இனவழிப்பிற்கான ஆதாரங்கள் உலக வல்லரசு நாடுகளிடம் குவிந்து கிடக்கின்றன. இருந்தும் சிங்களத்தின் தமிழின அழிப்பை உலக நாடுகள் இன்றுவரை அங்கீகரிக்கவில்லை.
இதனை இரு தரப்பிலும் நடாத்தப்பட்ட போர்க்குற்ற நடவடிக்கைகைளாகச் சித்தரிக்கவே உலக அரசுகள் விரும்புகின்றன. இந்த இனவழிப்பு அங்கீகார மறுப்பு, இனவழிப்புக்கான ஆதாரப்பற்றாக்குறை காரணமாகவோ அல்லது ஆதாரங்களைத் திரட்டுவதில் உள்ள சிரமங்கள் காரணமாகவோ இடம் பெறவில்லை.
மாறாக இனவழிப்பை அங்கீகரிப்பதால் ஏற்படக்கூடிய அரசியல் விளைவுகள் காரணமாகவே உலக அரசுகள் இவ்வாறு நடந்து கொள்கின்றன. இனவழிப்பை அங்கீகரித்தால் அது ஏற்படுத்தும் புவிசார் அரசியல் தாக்கங்களும், அது அரசுகளின் நலன்களில் ஏற்படுத்தும் பாதிப்புகளுமே இதற்குக் காரணமாக இருக்கின்றன.
இனவழிப்பை அங்கீகரித்தால் பின்னர் சிறிலங்கா அரசுடன் தொடர்புகளைப் பேணுதல் சிரமமாக அமையும். சிறிலங்கா அரசின் ஊடாக இலங்கைத்தீவில் தமது நலன்களை அடைந்து கொள்வதற்கு முயலும் அரசுகள் எவையும் சிறிலங்கா அரசை இனவழிப்புக் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்க மாட்டாது என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுதல் அவ்வளவு சிரமமானது அல்ல.
சிறிலங்கா அரசுடன் மட்டுமல்ல, பொதுவாகவே எந்த ஒரு அரசையும் இனவழிப்புக் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்குவது நீதியின் பாற்பட்ட ஒரு விடயடமாக ஏனைய அரசுகளுக்கு அமைவதில்லை. தமது அரசியல் நலன்களை அடைந்து கொள்வதற்கான ஒரு ஏற்பாடாகவே இனவழிப்புக் குற்றச்சாட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இப்பின்னணியுடனேயே ஈழத் தமிழ் மக்களுக்கெதிரான சிங்களத்தின் இனவழிப்பு விடயத்தில் அனைத்துலக அரசுகளின் நடத்தையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசுகளின் நடத்தை இவ்வாறு இருந்த போதிலும் அரசுகளின் கட்டமைப்புகளுக்குள் இயங்கும் நீதி மீது அக்கறை கொண்ட துறைசார் நிபுணர்கள் தமக்குக் கிடைக்கும் வரையறைக்குட்பட்ட வெளிக்குள் உண்மைகளை வெளிக் கொணர முனைவதுண்டு.
உதாரணமாக, 2011ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள்குழு, சிறிலங்கா தொடர்பான தனது அறிக்கையில் சிறிலங்கா அரசு மேற்கொண்டது.
இனவழிப்பு என்பதனை வெளிப்படையாகக் கூறாவிடினும், அவர்கள் விபரித்த சிறிலங்காப்படையினரின் பல நடவடிக்கைகள் இனவழிப்பின் பாற்பட்டவை என்பதனை புரிந்து கொள்வது கடினமானதொன்றாக இருக்கவில்லை.
இனவழிப்புத் தொடர்பான அரசுகளின் இவ் அணுகுமுறையினைநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் செய்கிறது. உலகில் இனவழிப்புக்கு உள்ளாக்கப்படும் எல்லா மக்களுடனும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையுணர்வை வெளிப்படுத்திக் கொள்கிறது.
நீதிக் கோட்பாட்டைப் புறந்தள்ளி அனைத்துலக அரசுகள் எடுக்கும் முடிவுகளை அறச்சீற்றத்துடன் எதிர்த்து நின்று போராட வேண்டிய கடப்பாடு இனவழிப்புக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகும் மக்களுக்கு உண்டு. தமிழீழ மக்களும் இக்கடப்பாட்டுக்கு உரித்துடையவர்கள்.
சிறிலங்கா அரசின் பிடியில் இருந்து ஈழத் தமிழர் தேசம் தன்னை விடுவித்துக் கொள்வதற்கு இரண்டு மூலோயாயாங்களுடன் செயற்படுவது அவசியமானது.
முதலாவது, தமிழ் மக்கள் சிங்கள அரசின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் என்ற நிலையில் இருந்து, ஒரு தேசம் என்பதற்கான தகைமை கொண்ட மக்கள் என்ற வகையில், தமது சுயநிர்ணய உரிமைக்குப் போராடும் மூலோபாயம்.
இரண்டாவது, சிறிலங்கா அரசின் இனப்படுகொலைக்குள்ளாகும் மக்கள் என்ற வகையில் இனப்படுகொலைக்கெதிரான பரிகார நீதியாக தன்னாட்சி உரிமையைக் ( Right to self rule ) கோரிப் போராடும் மூலோபாயம்.
முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு எதிரான செயற்பாடுகள் இரண்டாவது மூலோபாயத்தின கீழ் அமையும் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் அமையக் கூடியவை.
இதற்கு தமிழின அழிப்புக்கு எதிரான அனைத்துலக அங்கீகாரம் வளர்த்தெடுக்கப்பட வேண்டியது அவசியமானதாகும். இது இலகுவானதாரு விடயமல்ல.
ஆர்மேனிய மக்கள் தமக்கெதிரான இனவழிப்புக்கு எதிராக 100 ஆண்டுகள் தாண்டியும் போராடிக் கொண்டிருப்பதனை நாம் இன்றும் காண முடிகிறது. நிலைமாற்றுக்கால நீதியின் (transitional justice ) அடிப்படையாக உள்ள நான்கு தளங்களில் ஒன்றாக இத்தகைய நிகழ்வுகள் மீள நிகழாமை ( non- recurrence ) என்பது இருக்கிறது.
இலங்கைத்தீவினைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கு எதிரான சிங்களத்தின் கொடுமைகள் மீள நடைபெறாமல் உறுதிப்படுத்தப்படுவதற்கு தமிழ் மக்கள் சிங்களத்தின் இனவழிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்ற அனைத்துலக அங்கீகாரம் கிடைத்தல் முக்கியமானதாகும்.
தோழர்களே!
இனவழிப்புக்கு நீதி கோரும் எந்துவொரு மக்கள்கூட்டமும் அந்த நீதிக்கான போராட்டத்தில் மிக உறுதியாக இருக்க வேண்டும். தமது கோரிக்கையினையும் நிலைப்பாட்டையும் எந்தவித தடுமாற்றமுமின்றி தெளிவாக உலகின் முன் முன்வைக்க வேண்டும்.
அதற்காகத் தமது சக்தியையெல்லாம் திரட்டிப் போராட வேண்டும். அரசுகளின் கபடத்தனத்துக்குள் சிக்குப்படாமல் தமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
சிறிலங்கா அரசின் இனவழிப்புத் திட்டத்தை எதிர்கொள்ளும் வகையில் ஒரு வலுவான வியூகத்தை வகுக்க வேண்டிய கடப்பாட்டில் ஈழத் தமிழ் மக்கள் உள்ளார்கள்.
இவ்வியூகத்தை இனவழிப்புச் செய்ய முற்படுவோர்களுடனும், அவர்களுக்கு முண்டு கொடுப்போருடனும் சரணாகதி அடைந்து கொண்டு செய்ய முடியாது.
இராஜதந்திரம் என்ற பெயரில் சிறிலங்கா அரசுக்கும் சிறிலங்கா அரசைத் தாங்கி நிற்கும் அனைத்துலக அரசுகளுக்கும் சேவகம் செய்து கொண்டு செய்ய முடியாது.
தமிழீழ மக்கள்; தமிழினவழிப்புக்கு அனைத்துலக அங்கீகாரம்பெறவேண்டுமானால் இம்முயற்சியில் தமிழ்மக்கள் ஒரு அரசியற்திரளாக உருவெடுக்க வேண்டும்.
உதிரிகளான மக்களை எவ்வாறு சக்தி மிக்க அரசியற்திரளாக மாற்றுவது என்பது குறித்து நாம் சிந்தித்துச் செயற்படவேண்டும். இதற்காக தமிழினவழிப்புக்கு அங்கீகாரம்கோரும் மக்கள் இயக்கம் ஒன்று தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் உருவாக்கப்பட வேண்டும்.
இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் இத்தகைய மக்கள் இயக்கமொன்றை உருவாக்க முன்வருமாறு நாம் அனைத்துத் தமிழ்த் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.
இவ் இயக்கத்தில் தமிழின அழிப்புக்கு அங்கீகாரம் பெறவிழையும் அனைத்து சக்திகளும் உள்வாங்கப்படவேண்டும். இவ் மக்கள் இயக்கத்துடன் தாயகத் தமிழ் மக்கள், தமிழ் டயாஸ்போறா, தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து இயங்கும் வகையிலான கட்டமைப்பில் மக்கள் இயக்கம் உருவாக்கப்பட வேண்டும்.
தமிழின அழிப்புக்கு அங்கீகாரம்கோரும் போராட்டத்தைக் காத்திரமாகவும் வலுவுடனும் முன்னெடுப்பதற்குத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியற்தலைவர்கள் தமிழின அழிப்புக்கு எதிராகப் போராடும் மனவிருப்பும் உறுதியும் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.
இதனை நிச்சயப் படுத்துவதானால் தமிழின அழிப்பை ஏற்றுக் கொள்ளாத தமிழ் அரசியல்வாதிகளைத் தாயகத் தமிழ் மக்கள் தமது அரசியற் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுப்பதில்லை என்று உறுதிப்பாட்டைத் தமிழ் மக்கள் எடுத்துக் கொள்ளல் அவசியமானதாகும்.
தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் அரசியற்தலைவர்களே தமிழினவழிப்பை சாக்குப்போக்குச் சொல்லி நிராகரித்தால் தமிழினவழிப்புக்கு அங்கீகாரம் பெறுதல் மிகவும் கடினமானதாகி விடும்.
அனைத்துலகத்தளத்தில் சிங்களம் தமிழ் மக்களை இனவழிப்பு செய்தது செய்கிறது என்ற நிலைப்பாட்டை வலியுறுத்திச் செயற்பட வேண்டிய முதன்மைப் பொறுப்பு தமிழ் டயாஸ்போறாவுக்கு உண்டு.
இப் பணியினை தமிழ் டயாஸ்போறா மேலும் முனைப்புடன் மேற்கோள்ள வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இப் பணியினை தொடர்ந்தும் முன்னெடுப்பதுடன் உருவாக்கப்பட வேண்டியுள்ள தமிழின அழிப்புக்கு அங்கீகாரம் பெறும் இயக்கத்தில் ஓரங்கமாக இணைந்து செயற்படத் தயாராக உள்ளது என்பதனையும் முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் தமிழ் மக்களுக்கு இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
முள்ளிவாய்க்கால் நினைவுகளை எமக்குள் உள்வாங்கி தமிழீழ தாயகத்தின் உதயத்துக்காய் உணர்வுபூர்வமாக உழைப்போம் என இன்றைய நாளில் உறுதி எடுத்துக் கொள்வோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/statements/01/183005?ref=ls_d_tamilwin

No comments:

Post a Comment