Thursday, May 24, 2018

தமிழகத்தை உலுக்கிய படுகொலைகள்! கொந்தளிக்கும் தமிழகம்!


தமிழகத்தில் பெரும் அரச பயங்கரவாதமாக மாறியிருக்கிறது தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவம்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இன்று நடந்து வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இதன் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உள்பட 9 பேர் பலியானார்கள். படுகாயம் அடைந்து சிகிச்சைபெற்றுவந்த கார்த்திக், பங்குதந்தை லியோ ஜெயசீலன் ஆகியோர் உயிரிழந்ததை அடுத்து பலி 11 ஆக உயர்ந்தது.
இதனையடுத்து தமிழகம் எங்கும் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் கொதிப்போடு பதிவுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இன்னொரு புறத்தில் இது அரச பயங்கரவாதம் என்று விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழக எதிர்க் கட்சியினரும், தமிழின உணர்வாளர்களும்.
இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 9 பேரை பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்திக் கொன்று இருக்கின்றனர்.
இது ஒரு மாநில அரசே தனது மக்களைக் கொன்று குவிக்கும் அரச பயங்கரவாதத்துக்கு கொடூரமான உதாரணமாகும். அநீதிக்கு எதிராகப் போராடி, நீதி கேட்ட மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்து வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் என அனுதாபத்தையும், காயம் அடைந்தவர்களுக்கும் விரைவில் குணமடைய பிரார்த்தனையும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இன்னொரு புறத்தில், இறந்தவர்களுக்கு பத்து இலட்சம் ரூபா நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கும் கருத்தை விமர்சிக்கும் பொது மக்கள், மக்களை கொன்றொழித்துவிட்டு அதற்கு விலை நிர்ணயம் செய்கிறது அரசு என்று கொதித்துப் போயிருக்கிறார்கள்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அந்தப் பகுதி முழுவதும், நில வளத்தையும், நோய்களையும் ஏற்படுத்துகின்றது என்ற குற்றச்சாட்டுக்கள் நீண்டகாலமாக மக்களால் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கங்கள் எந்தவிதமான தீர்வையும் இதுவரை முன்வைக்கவில்லை.
ஆனால், பொது மக்களின் அமைதியான போராட்டத்தை வன்முறையாக மாற்றி சுட்டுக் கொன்று இருக்கிறது. தமிழகத்தை இன்று கொதிப்பில் மாற்றியிருக்கிறது பொலிஸாரின் இந்த நடவடிக்கை.

http://www.tamilwin.com/politics/01/183316?ref=recommended1

No comments:

Post a Comment