Friday, May 4, 2018

பெண்ணின் கொலை தொடர்பில் இலங்கை காவற்துறையினர் மெத்தனப்போக்கு!!


களுத்துறை - மத்துகமை வோகன் தோட்டதிற்கு அருகில் இளம் தாயாரான கோவிந்தராஜா ஜெயகலா முச்சக்கரவண்டியில் கடத்திச் செல்லப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் இன்று கலுத்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

களுத்துறை - மத்துகமை வோகன் தோட்டதிற்கு அருகில் முச்சக்கரவண்டியில் கடத்திச் செல்லப்பட்டு கொலைச்செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இளம் தாயொருவர்  (  கோவிந்தராஜா ஜெயகலா)தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்துகமை காவற்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மத்துகமை நகரத்தில் தினசரி வேதனத்திற்கு கடமையாற்றும் 28 வயதுடைய தாயொருவர் வேலையை நிறைவு செய்துக்கொண்டு முச்சக்கரவண்டியொன்றில் வீடு திரும்பியுள்ளார்.

குறித்த தாய் வழமையாக செல்லும் முச்சக்கரவண்டியிலேயே அன்றும் பயணித்துள்ளார்.
அவர் பயணித்த முச்சக்கரவண்டி மத்துகமை நகரத்தின் காணப்படும் அங்கீகரிக்கப்பட்ட முச்சக்கரவண்டி தரிப்பு நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒன்றாகும்.
இந்நிலையில் , 28 வயதுடைய குறித்த தாயை இறக்கவேண்டிய இடத்தினை தவிர்த்து அவரது வசிப்பிடத்தையும் கடந்து முச்சக்கரவண்டி வேகமாக பயணித்துள்ளது.

அச்சமுற்ற 2 பிள்ளைகளின் தாயான அவர் கூச்சலிட்டு நிறுத்துமாறு கோரியும் முச்சக்கரவண்டி சாரதி நிறுத்தாமல் சென்றுள்ளார்.
தனது பிள்ளைகளை கவனத்திற்கொண்டு தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள குறித்த தாய் முச்சக்கரவண்டியில் இருந்து பாய்ந்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் இருந்து பாய்ந்த தாய்க்கு கடுமையாக உடலில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மக்கள் கூச்சலிட்டதினை தொடர்ந்து குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி பிறிதொரு முச்சக்கரவண்டியின் சாரதியின் உதவியுடன் குறித்த இடத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சுமார் , மூன்று கிலோ மீற்றர் வரையிலான தூரமே மருத்துவமனைக்கு காணப்படுகின்ற போதிலும் படுகாயத்திற்கு உள்ளான தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.

உறவினர்களின் கோரிக்கைக்கு இணங்க அயலவர்களின் உதவியுடன் தாயை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் , தாய் மரணமடைந்த நிலையில் வீதியின் கரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வடிகாலில் வீசப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் காவற்துறையினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் காவற்துறையினர் மெத்தனப்போக்குடன் செயற்பட்டு வருகின்றனர்.

நகரில் அமைந்துள்ள பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் அங்கத்துவர் ஒருவரை இனங்காண்பது கடினமாக உள்ளதா என காவற்துறையினரிடம் உறவினர்கள் கோரியதற்கு காவற்துறையினர் பொருட்படுத்தாது அவர்களை நிந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

களுத்துறை மாவட்டத்தின் இந்த இளம் தாயின் மரணத்துடன் ஏற்கனவே இடம்பெற்ற சம்பவங்களை நோக்கினால் இது மூன்றாவது சம்பவமாகும் .
இதுதொடர்பில் , தமிழ் மக்கள் பிரதிநிதிகள் காவற்துறையினரிடம் தொலைப்பேசி வாயிலாக உரையாடியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஆனால் , சம்பவ இடத்திற்கு சென்று சம்பவத்தின் பின்னணியில் காணப்படும் அரசியல் காய்நகர்த்தல்களை உடைத்தெறிய இதுவரைக்கும் எவருக்கும் திராணியிருப்பதாக தெரியவில்லை.

ஊடகங்களுக்கு செய்தியறிக்கை வௌியிடும் அரசியல்வாதிகளுக்கு இந்த சமப்வம் தொடர்பில் ஏன் இதுவரை எந்தவொரு கரிசனையும் ஏற்படவில்லை.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 3 மற்றும் 6 வயதுடைய பிள்ளைகளின் 28 வயதான இளம் தாயாவார்.

இவரின் இறுதிச் சடங்கும் இன்றைய தினம் நடைப்பெறவிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் , குறித்த பெண்ணின் சடலத்தை மத்துகமை நகரின் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன் வைத்து பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது , குறித்த முச்சக்கரவண்டி சாரதிகளை உடனடியாக கைது செய்யுமாறு பிரதேசவாசிகள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் , குறித்த தாய் முச்சக்கரவண்டியில் இருந்து பாயும் காட்சி அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.



http://www.jvpnews.com/srilanka/04/171438

No comments:

Post a Comment