Friday, May 11, 2018

அழுவதற்கு உரிமை வேண்டும்: கண்ணீர்விட்டு கதறும் புலிகளின் முக்கியஸ்தர்


கடந்த மகிந்த ஆட்சிக்காலத்தில் நாங்கள் பூசா முகாமிலிருக்கும்போதே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம், அதில் எனது பிள்ளை புதைக்கப்பட்ட துயிலுமில்லத்தில் நின்று எனக்கு அழுவதற்கு உரிமை வேண்டும் என கேட்டிருந்தேன், என விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முத்துக்குமார் மனோகர் (பசீர்-காக்கா-) கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் தொடர்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,


தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத்தில் நீண்டகாலம் பங்களித்த நாங்கள் இன்றெழுந்துள்ள சுழலில் எமக்கான கடமையைச் செய்யாமலிருப்பது எம்மோடு நீண்டகாலம் பயணித்து மாவீரர்களான எமது நண்பர்கள், சகோதரிகளுக்கும், விடுதலையை நேசித்து முள்ளிவாய்க்கால் வரை எம்மோடு பயணித்து கடல், வான், தரை ஆகிய மும்முனைத் தாக்குதல்களால் இனப் படுகொலைக்குள்ளான எமது உறவுகளின் ஆத்மாக்களுக்கு செய்யும் துரோகம் எனக் கருதுகிறோம்.
ஏற்கனவே நினைவுகூரல் நிகழ்வுகளை வழிநடத்த சமூக, சமயத் தலைவர்கள் அடங்கிய குழுவொன்றினை உருவாக்கி அந்நிகழ்வுகளின் நோக்கத்தையும், புனிதத்தினையும் சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டுமென இம்மண்ணினை நேசித்த பலரும் ஆலோசனை வழங்கியிருந்தனர்.
இன்றுள்ள பதற்றமான சூழலில் உடனடியாக இது சாத்தியப்படாதென்றே எமக்குத் தோன்றுகிறது. ஒற்றுமையாய் வாரீர் என்ற கோஷங்களுக்கு மத்தியில் வெவ்வேறு நோக்கங்கள் இருப்பதாகக் கருதுகிறோம்.
தாம் எதிர்பார்த்த ஒழுங்கில் நிகழ்வுகள் நடைபெறாவிட்டால் குழப்பங்கள் ஏற்படும் என எச்சரிப்பது எம்மை வேதனையில் ஆழ்த்துகிறது. எமது உறவுகளுக்காக மட்டுமல்லாது இன்றைய நிலைமைக்காகவும் சேர்த்து கண்ணீரைப் பங்கு போடுகிறது என தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த சந்தர்ப்பத்தில் அவர் அழுதுள்ளமை அனைவரையும் கவலைக்குட்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/182368?ref=home-top-trending

No comments:

Post a Comment