Sunday, April 22, 2018

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் இனி தூக்கு.. உடனடியாக அமலுக்கு வருகிறது அவசர சட்டம் !


இந்தியாவில் 12 வயது வரையிலான சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்கென புதிதாக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கவும், பாலியல் பலாத்கார சம்பவங்களில் தடயவியல் பரிசோதனை செய்வதற்காக, அனைத்து வைத்தியசாலையிலும், பொலிஸ் நிலையங்களுக்கும் சிறப்பு பரிசோதனை சாதனங்கள் வழங்கவும் இந்த அவசரச் சட்டம் வழிவகை செய்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் 8 வயது சிறுமி, ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டமை, கடந்த சில தினங்களுக்கு முன் சூரத் நகரில் சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்து, கொல்லப்பட்டார். தொடரும் இந்தச் சம்பவங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்கவும் இந்த அவசரச் சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.
அதில், சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த அவசரச் சட்டம், குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. அவர் ஒப்புதல் அளித்தவுடன் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த வகையில் மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஒப்புதலை அடுத்து உடனடியாக சட்டம் அமலுக்கு வருகிறது.
இந்தச் சட்டத்தின் அம்சங்கள் குறித்து சட்ட அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,
இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும், குறைந்தபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது.
  • புதிய அவசரச் சட்டத்தின்படி, பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளின் குறைந்தபட்ச சிறைத் தண்டனை 7 ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • பாதிக்கப்பட்ட பெண் 16 வயதுக்கும் குறைவானவராக இருந்தால், குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதல் வாழ்நாள் வரை தண்டனை விதிக்கப்படும்.
  • பாதிக்கப்பட்ட சிறுமி 12 வயதுக்கும் குறைவானவராக இருந்தால், குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். அதிகபட்சமாக, ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை விதிக்கப்படும்.
  • பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உதவுவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் உதவி மையம் அமைக்கப்படும்.
  • சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களில் விரைவில் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும். அதாவது, அனைத்து பாலியல் பலாத்கார சம்பவங்களிலும் 2 மாதங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட வேண்டும்.
  • இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளில் 6 மாதங்களில் விசாரணை முடிக்கப்பட வேண்டும் என புதிய அவசரச் சட்டம் பரிந்துரை செய்கிறது.
  • 16 வயது வரையிலான சிறுமிகளை பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் நபர்கள் முன்ஜாமீன் கோர முடியாது. அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட மாட்டாது.
  • அவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டுமெனில், பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பு மற்றும் அரசு தரப்பின் கருத்தைக் கேட்ட பிறகே நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்" என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment