ஐ.நா. அமைதிப்படைக்கு 2004ம் ஆண்டு தொடக்கம் இராணுவ அணிகளை அனுப்பி வரும் இலங்கைக்கு இப்போது கடுமையான நெருக்கடி வந்திருக்கிறது.
லெபனானில் ஐ.நா. அமைதிப்படையில் நிறுத்துவதற்காக அனுப்புவதற்குத் தயார்படுத்தப்பட்ட இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் கொம்பனி ஒன்று திரிசங்கு நிலையில் நிற்கிறது.
இந்தக் கொம்பனியின் மூன்றில் ஒரு பங்கு படையினர் லெபனானுக்கு அனுப்பப்பட்ட நிலையில் எஞ்சிய 101 படையினரை அங்கு அனுப்ப முடியாத நிலைக்கு இராணுவம் தள்ளப்பட்டிருக்கிறது.
ஐ.நா.அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக அனுப்பப்படும் படையினர் அனைவரினதும் மனித உரிமைப் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று ஐ.நா.அமைதிப்படை நடவடிக்கைப் பணியகம் உத்தரவிட்டுள்ளது.
கேர்ணல் வசந்த ஹேவகே தலைமையிலான 150 பேர் கொண்ட சிங்க ரெஜிமென்ட் கொம்பனி லெபனானுக்குச் செல்லத் தயாரான போது தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
6 அதிகாரிகள், 43 படையினரைக் கொண்ட இந்தக் கொம்பனியின் முதலாவது அணி கடந்த பெப்ரவரி 18,19ம் திகதிகளில் பெய்ரூட்டுக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தது.
அந்த அணியில் இடம்பெறவிருந்த கட்டளை அதிகாரி கேர்ணல் வசந்த ஹேவகே வன்னியில் இறுதிக்கட்டப் போரில் ஈடுபட்டவர் என்றும், போர்க் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்றும் குற்றச்சாட்டுகள்ஹ சுமத்தப்பட்டன.
இது தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் ஐ.நாவிடம் முறையிட்டதை அடுத்து கேர்ணல் வசந்த ஹேவகேயின் லெபனான் பயணம் தடைப்பட்டது.
கேர்ணல் வசந்த ஹேவகே கிளிநொச்சி மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் 4வது மற்றும் 14வது சிங்க ரெஜிமென்டுகளின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றியிருந்தவர்.
போர்க்குற்றங்கள் இடம்பெற்ற பகுதிகளில் பணியாற்றியவர், போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படைப்பிரிவுகளில் இருந்தவர் என்ற குற்றச்சாட்டுகளை அடுத்து கேர்ணல் வசந்த ஹேவகே பற்றிய மனித உரிமை ஆய்வுகள் முடியும் வரை அவரை லெபனானுக்கு அனுப்ப ஐ.நா. தடை விதித்தது.
அதற்குப் பின்னர் மாற்று ஒழுங்குகளைச் செய்து ஏனைய 101 படையினரை இரண்டு கட்டங்களாக லெபனானுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது.
ஆனால் ஐ.நா.அமைதிப்படையில் இணைத்துக் கொள்ளப்படும் படையினர் அனைவரினதும் மனித உரிமைப் பதிவுகள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினால் ஆய்வு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் கடந்த மார்ச் 6ம் திகதி லெபனானில் பணிகளைப் பொறுப்பேற்கவிருந்த சிங்க ரெஜிமென்ட்டின் கொம்பனி அங்கும் இங்குமாக நிற்கின்றது.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆய்வுகள் முடிந்து அனுமதி கிடைக்கும் வரையில் இந்த அணியினால் லெபனானுக்குச் செல்ல முடியாது.
இது மா்திரமல்ல, பிரச்சினை. இனிவரும் காலங்களிலும் இதே நடைமுறை தான் பின்பற்றப்படவுள்ளது என்பது இராணுவத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள விடயமாகும்.
ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றும் படையினர் மனித உரிமைப் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு அனுமதி பெறப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே கூறியிருந்தது.
இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது என்றும் மூன்றடுக்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இலங்கை அரசாங்கம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் உறுதியும் அளித்திருந்தது.
ஆனால் அத்தகைய எந்த ஆய்வுகளும் இல்லாமல் தான் ஐ.நா.அமைதிப்படைக்கும் வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கும் இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.
கேர்ணல் வசந்த ஹேவகே விவகாரம் சர்ச்சையாக மாறிய பின்னரும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ லண்டனில் சர்ச்சைகளை சந்தித்த பின்னரும் தான் இந்த மனித உரிமை ஆய்வுகளின்றி படையினர் அனுப்பப்படுவது உறுதியானது.
இதையடுத்தே ஐ.நா.அமைதிப்படை நடவடிக்கைப் பணியகம் இறுக்கமான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. ஐ.நாவின் இந்த இறுக்கமான உத்தரவினால் இராணுவத் தலைமை குழப்பமடைந்திருக்கிறது.
ஏனென்றால் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஐ.நா.அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக படைப்பிரிவுகளை அனுப்ப வேண்டியுள்ளது. அதற்காக பயிற்சிகள் அளிக்கப்பட்டு தயார்படுத்தப்படுவதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுகிறது.
அவ்வாறு தயார்படுத்தப்பட்ட படையினர் மனித உரிமை பதிவுகளால் நிராகரிக்கப்படும் போது அல்லது இழுத்தடிக்கப்படும் போது குறித்த காலப்பகுதிக்குள் படைப்பிரிவுகளை அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்படும். இது முதலாவது பிரச்சினை.
தற்போதைய ஒழுங்கு முறைகளுக்கேற்ப இராணுவத்துக்குள் அணிகளைத் தெரிவு செய்து தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்கு கணிசமான காலம் தேவை. அவ்வாறு மேலதிக அணிகளை தயார்படுத்தும் வரைக்கும் இந்தப் பிரச்சினை நீடிக்கும்.
இது மா்திரமல்ல சிக்கல். அனைத்துப் படையினரினதும் மனித உரிமைப் பதிவுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பது இராணுவத்தைப் பொறுத்தவரையில் சிக்கலான விடயம். வடக்கு கிழக்கில் பணியாற்றியிருந்தாலே அவர்களின் மனித உரிமைப் பதிவுகள் சிக்கலாக பார்க்கப்படுகின்றன.
எனவே போர் நடவடிக்கைகளில் ஈடுபடாத போர் நடந்த காலகட்டத்தில் வடக்கு கிழக்கில் பணியாற்றாத படையினரை மாத்திரம் அமைதிப்படை நடவடிக்கைகளுக்கு அனுப்ப வேண்டும் என்றே ஐ.நா.நடவடிக்கைப் பணியகம் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவரையில் போரில் ஈடுபடாத படையினர் போர் நடந்த பகுதிகளில் பணியாற்றாத படையினர் என்று எவருமே இருக்க முடியாது.
ஏனென்றால் மட்டுப்படுத்தப்பட்ட ஆளணியைக் கொண்டிருந்த இலங்கை இராணுவம் போர்முனையில் ஒரு படையணி சேதமடையும் போது இன்னொரு படையணியை அனுப்பிக் கொண்டிருந்தது. மாறி மாறி போர்முனைக்குப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்.
இதனால் போர்முனை வாசத்தை அறியாத படையினர் என்று எவருமே இருந்திருக்க முடியாது.
அவ்வாறாயின் போர் முடிவுக்கு வந்த பின்னர் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட படையினரை மாத்திரமே ஐ.நா.அமைதிப்படை நடவடிக்கைகளுக்கு அனுப்ப முடியும்.
அவ்வாறு புதிய படையினரை மாத்திரம் ஐ.நா.அமைதிப்படை நடவடிக்கைகளுக்கு அனுப்பும் போது போரில் பங்கெடுத்த படையினருக்கு அது அதிருப்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தும்.
விடுதலைப் புலிகளுடன் உயிரை மதிக்காமல் போரிட்ட போதிலும் தமக்கு இத்தகைய வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை என்று அரசாங்கத்தின் மீதும் இராணுவத் தலைமை மீதும் அவர்கள் வெறுப்படைவார்கள்.
ஏனென்றால் ஐ.நா.அமைதிப்படையில் பணியாற்றும் காலத்தில் ஒவ்வொரு படையினருக்கும் ஆயிரம் தொடலர்கள் வரை ஊதியம் வழங்கப்படும். அத்தகைய வாய்ப்பை ஒவ்வொரு படையினரும் விரும்புவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறான வாய்ப்பு தமக்கு கிட்டாமல் புதிய படையினருக்கு அளிக்கப்படும் போது அவர்கள் கொதிப்படைவார்கள். எனவே முழுமையான மனித உரிமைப் பதிவு ஆய்வுகளால் இராணுவத்தினர் மத்தியில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
அவர்களுக்குள்ளேயே நல்லவர்கள் கெட்டவர்கள் என்பது போன்ற பாகுபாடு தோற்றுவிக்கப்படுவதற்கும் சாத்தியங்கள் உள்ளன.
மாலியில் ஐ.நா.அமைதிப்படைக்கு இலங்கைப் படையினரை அனுப்புவதற்கு முற்பட்ட போது தொடங்கியது இந்தப் பிரச்சினை. நீண்ட இழுபறிகளுக்குப் பின்னரே மாலிக்குப் படையினரை அனுப்ப முடிந்தது.
ஒரு பற்றாலியன் (600) படையினரை அங்கு அனுப்பத் திட்டமிடப்பட்ட போதும் தற்போது 207 படையினர் மட்டும் தான் அனுப்ப்பட்டுள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் மீதான மனித உரிமைக் குற்றச்சாட்டுகளால் தான் இந்த நிலை ஏற்பட்டது.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான உரிய ஒழுங்குகளை அரசாங்கம் செய்யத் தவறியதன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல் சர்ச்சைகளால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி வாயப்புகள் மறுக்கப்பட்டாலும் அவை மீளக் கpடைக்கும் நிலை தற்போது உருவாகி வருகிறது.
ஆனால் மற்றொரு புறத்தில் ஐ.நா.அமைதிப்படைக்கான கதவுகள் மாத்திரம் மூடப்பட்டு வருகின்றன.
http://www.tamilwin.com/politics/01/178621?ref=ls_d_tamilwin
No comments:
Post a Comment