Thursday, April 5, 2018

1981 ஏப்ரல் 5–துரோகம்,காட்டிக்கொடுப்பின் உச்சக்கட்டம்!


1981 ஏப்ரல் 5– இன்று தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட நாள்.

" எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்." - தேசிய தலைவர் பிரபாகரன்

1983 பெப்ரவரி 23ம்திகதி கொழும்பு உயர்நீதிமன்றத்தால் ஆயுள்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் தமிழீழவிடுதலையின் மிக மூத்த முன்னோடி தங்கத்துரை அவர்கள் 1983 மார்ச் 1ம்திகதி கொழும்பு மேல்நீதிமன்றத்தில் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையில் பின்வருமாறு கூறுகின்றார்.

"பிரிவினை கோருகின்றோம். நாட்டை துண்டாட முயற்சிக்கின்றோம் என்று சொல்கிறீர்களே நாம் எப்போது உங்களுடன் சேர்ந்திருந்தோம். ஐரோப்பியரால் கைப்பற்றப்பட்ட எமது தாயகம் எக்காலத்திலும் எம்மிடம் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை.அதனை இணைப்பு என்ற பெயரில் யாரிடமும் தாரைவார்க்கவும் இல்லை'

ஏற்கனவே கைதின் பின் சித்திரவதை செய்து கூட்டி வரும் சிங்கள காவல்துறை இந்த நீதிமன்ற உரைக்கு பின்னர் பனாகொடை இராணுவமுகாமுக்கு அழைத்து சென்று மீண்டும் அதை விடவும் கொடுமையாக சித்திரவதை செய்வார்கள் என்று தெரிந்தும் எந்தவொரு பயமோ தயக்கமோ இன்றி அவர் ஆற்றிய பிரகடனம் இது.

தமிழீழவிடுதலை போராட்டத்தின் முன்னோடியான தங்கத்துரை அவர்களுக்கும் தேசியதலைவருக்கும் இடையிலான உறவு பற்றி ஆரம்பகால போராளி அண்ணன் ச. ச. முத்து எழுதிய வரிகளில் இருந்து:

"அவர்கள் இருவருக்குமான உறவு என்பது தாயகவிடுதலைக்காக களத்தில் நின்ற இருவருக்கு இடையிலான தோழமை என்பதில் இருந்து வளர்ந்து ஒரு அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையிலான ஆழமான உறவாகவே இருந்தது.

இளம்வயதிலேயே தமிழீழத்துக்கான விடுதலைக்கான பாதையை தேடிய தலைவருக்கு முதலில் கிடைத்த தொடர்பே தங்கத்துரை அண்ணா போன்றவர்கள்தான்.தம்பி என்ற பெயரே அவர்கள் இவருக்கு வழங்கிய அந்த அழைப்புதான்.

1973 மார்ச் 23ம்திகதி தலைவரை முதன்முதலில் சிங்கள படைகள் தேடி அவரது வீட்டு போனபோது தலைவர் தமிழகத்துக்கு போனது தங்கத்துரை அண்ணாக்களுடன் இணைந்து ஒரு அமைப்பை கட்டி எழுப்பும் எண்ணத்துடனேயே..அந்த அளவுக்கு தேசியத்தலைவருக்கு மிக நம்பிக்கையான மிகவும் மதிப்புமிகுந்த ஒருவராகவே தங்கத்துரை அண்ணா அவர்கள் இருந்தார்.

பின்னர் தலைவர் தமிழீழவிடுதலைப்புலிகளை ஆரம்பித்தபின்னரும்கூட தங்கத்துரை அண்ணாவுடனான இந்த உறவு இன்னும் ஆழமாக வேர் படர்ந்து விழுதெறிந்து வளர்ந்திருந்தது." என்கின்றார்.

இதற்கு உதாரணமாக அவர் சொன்ன நிகழ்வில் " 1978ம்ஆண்டு தை மாதம் 27ம்திகதி கொழும்பில் கொள்பிட்டியில் வைத்து ஈழ விடுதலை போராட்டத்தில் கனகரெத்தினம் சுடப்படுகிறார்.

தேசியதலைவர், உமா(முகுந்தன்), செல்லக்கிளி(அம்மான்) ஆகியோர் நடவடிக்கையில் நேரடியாக ஈடுபடுகின்றனர்.

சிங்களபேரினவாதத்தை ஒருகணம் அலறி அடித்து கலங்கவைத்த நிகழ்வு அது..

இந்த திட்டத்துக்கான முதல்விதையை தலைவருக்கு சொன்னது தங்கத்துரைஅண்ணா என்பதை தலைவர் பல தடவைகள் கூறி இருக்கிறார்." என்கின்றார்.

தலைவர் தனது போராட்ட வரலாற்றை கூறும் விடுதலைத்தீப்பொறி காணொளியிலும் தான் முதன்முதலில் வெடிகுண்டு செய்த சம்பவத்திலும் தங்கத்துரை அண்ணாவையும் கூறுகின்றார்.

விடுதலைக்காக ஒரு பெரும் காரிருள் சூழ்ந்திருந்த பொழுதில் போராடப் புறப்பட்ட தங்கத்துரை அண்ணா தமிழர் தாயகத்தின் இறைமை பற்றி சிறீலங்கா நீதிமன்றத்தில் உறுதிபட தெரிவித்திருந்த அந்த "எமது இறைமையை நாம் யாரிடமும் தாரை வார்த்திருக்கவில்லை" என்ற வாசகம் எத்தனை காலமானாலும் என்றாவது ஒருநாள் முழுமையாக அர்த்தப்படும்.- விடுதலையாக!

மண்ணுக்காக போராடிய வீரர்கள் புதைக்கப்படவில்லை. அவர்கள் விடுதலை தோட்டத்தில் விதைக்கப்பட்டவர்கள் ஆவார்கள்!

No comments:

Post a Comment