Thursday, February 15, 2018

இந்திய தமிழ் சினிமாவுக்கு இலங்கை கொடுத்த பரிசு: காலம் கடந்து வெளிவரும் உண்மைகள்


இந்தியா - தமிழ்நாடு, மாபெரும் சினிமா கலைஞரையும் கோடம்பாக்கத்தில் சினிமாவில் வாய்ப்பு கேட்டு தவமாய் காத்திருந்த வேளை, இலங்கையின் கிழக்கே மீன்பாடும் தேன்நாடு இயற்கைகளையும் கிராம வாசனையும் நன்கறிந்த மட்டக்களப்பு அமிர்தகழியில் பிறந்து வளர்ந்து தமிழ்நாட்டில் சினிமாவில் இறக்கும் வரை தனக்கொரு நிலையான இடத்தை பெற்றவர் பல்வகை திறமையான கலைஞர் பாலுமகேந்திரா.
இந்திய தமிழ்சினிமாவை வசப்படுத்திய பாலுமகேந்திரா என்ற சிகரத்தின் நினைவு தினம் நேற்றுமுன்தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவரைப் பற்றி மூத்த கட்டுரையாசிரியர் ஜெயகாந்தன் கூறும் போது,
அமிர்தகழி ஆற்றங்கரையின் கட்டிலில் அமர்ந்து, தொங்க விட்ட கால் நீரில் நனைய, காலிலுள்ள புண்களை மீன்கள் கொத்தக் கொத்த மூத்த கட்டுரை ஆசிரியர் ஜெயகாந்தனோடு இலக்கியம் பேசுவது, சினிமா பேசுவது, வாழ்க்கை பேசுவது பாலுமகேந்திராவிற்கு ரொம்பப் பிடிக்கும்.

அவன் அப்பா ஒரு தேர்ந்த ரசிகர். வாழ்க்கையின் ஒவ்வொரு க்ஷணத்தையும் உணர்ந்து, ரசித்து வாழ்ந்தவர். அவர் ஒரு கணிதப் பேராசிரியராக இருந்துபோதும், தமிழிலும், சமஸ்கிருதத்திலும், அறிவியலிலும் மிக்க பாண்டித்தியம் உள்ளவர்.
அவனுடைய மிக நெருங்கிய நண்பன் என்றால், அது அவன் அப்பாதான். அப்பாவும் அவனும் பகிர்ந்துகொள்ளாத விஷயங்களே இல்லை. சுத்தானந்த அடிகளார் முதல் சுய இன்பம் வரை. கம்பர் முதல் காளிதாசன் வரை. அவன் பால்ய சினேகிதி அன்னலட்சுமி முதல் ஔவையார் வரை எல்லாவற்றையும் பற்றி அவன் அப்பா அவனோடு பேசுவார்.
அப்படியொரு அப்பா அவனுக்கு வாய்த்தது பற்றி இப்பொழுதும் அவன் பெருமைப்படுவதுண்டு. அவன் இன்றுள்ள இவனாக இருப்பதற்கு அவன் அப்பா ஒரு மிகப்பெரிய காரணி.
அன்று படித்த ஜெயகாந்தன் கதையை முன் வைத்து அப்பா இலக்கிய ரசனையின் பல நுணுக்கங்களை அவனுக்கு அன்று சொல்லிக் கொடுத்தார். அந்தக் கதையின் உள்ளடக்க அடர்த்தி….
அதில் சொல்லப்பட்டிருந்த முற்போக்கான கருத்து… கதாப்பாத்திரப் படைப்பு… கதைக்களம், கதை நெடுகிலும் விரவிக்கிடந்த காட்சி வடிவ அழகு, அப்புறம் அந்தக் கதையைச் சொல்லும் பொழுது ஜெயகாந்தனுக்கு கைகூடியிருந்த உள்ளடக்கத்திற்குப் பொருத்தமான உருவ அமைப்பு….

ஜெயகாந்தனின் சொற்த்தேர்வு, அவர் வாக்கிய அமைப்பின் தனித்தன்மை, நடையின் லாவகம், மொழி ஆளுமை.. இப்படி ஜெயகாந்தன் கதையை முன்வைத்து, இலக்கிய ரசனை பற்றி நிறைய விஷயங்களை அப்பா அன்று பேசியிருந்தார்.
அடுத்த வாரம் ஜெயகாந்தன் கதை வர இருக்கின்றதென்றால், அதை முதல் வாரமே அறிவித்து விடுவார்கள்.
சென்னையில் பிரசுரமாகும் விகடன், ரயில் மூலம் ராமேஸ்வரம் போய், ராமேஸ்வரத்திலிருந்து கப்பலில் கடல்கடந்து தலைமன்னார் சென்று தலைமன்னாரிலிருந்து, இலங்கையின் தலைநகரான கொழும்பிற்குப்போய், கொழும்பிலிருந்து மீண்டும் ரயிலில் அவனது ஊரான மட்டக்களப்பிற்கு அனுப்பப்பட்டு, மட்டக்களப்பிலிருந்து அவனது கிராமமான அமிர்தகழிக்கு பஸ்ஸில் வந்து சேர, பிரசுரமான தேதியிலிருந்து பத்துப் பன்னிரண்டு நாட்களாகும்.
ஜெயகாந்தன் கதை அவன் கிராமத்திற்கு வந்து சேரும் வரை காத்திருக்க அவனுக்குப் பொறுமையில்லை. அவன் வட்டாரத்திலுள்ள வேறு எவனும் படிப்பதற்கு முன் ஜெயகாந்தன் கதையை அவன் படித்தாக வேண்டும் என்ற பிடிவாதம் அவனுக்கு.
கொழும்பிலிருந்து விகடனைச் சுமந்து வரும் ரயில் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்குக் காலை ஐந்தரை மணிக்கு வந்து சேரும். ஐந்தரை மணிக்கு ரயில் நிலையத்தில் இருக்க வேண்டுமென்றால், அதிகாலை நாலு மணிக்கு அவன் எழுந்திருக்க வேண்டும்.
நாலு மணிக்கு அலாரம் வைத்துவிட்டு, அது போதாதென்று அவன் அம்மாவிடமும் எழுப்பிவிடு என்று சொல்லிவிட்டுப் படுத்துக் கொள்வான்.
காலையில் ஜெயகாந்தன் கதை படிக்கப் போகிறான் என்ற குஷியில் அவனுக்கு இரவெல்லாம் தூக்கம் வராது. ரொம்பநேரம் வரை அதைப்பற்றி யோசித்தபடியே உழன்றுவிட்டு இரண்டு மணிக்கு மேல் அசதி காரணம் கண்ணயர்ந்த சில நிமிடங்களுக்குள் அலாரம் அடிக்கும்.
கூடவே அம்மாவும் எழுப்பி விடுவாள். அவசரமாக எழுந்து குளித்து ரெடியாகிவிடுவான். ஐந்தரைக்கு முன்பே ரயில் நிலையத்தில் இருப்பான். ஐந்தரைக்கு ரயில் வரும். மட்டக்களப்பிற்கான பத்திரிகைக் கட்டுகள் இறக்கப்பட்டு பிரிக்கப்பட்டு அதிலிருந்து நான்கு விகடன் பிரதிகள் ரயில் நிலைய டீக்கடைக்குக் கொடுக்கப்படும்.
அந்த நான்கு பிரதிகளில் ஒன்றை அவன் வாங்கிக் கொள்வான். வாங்கின கையோடு ஸ்டேஷன் பெஞ்சில் அமர்ந்து ஜெயகாந்தன் முத்திரைக்கதையைப் படித்து முடிப்பான். அந்த ரயில் நிலைய சத்தங்களுக்கிடையில், காலைக் குளிர்காற்றில் ஜெயகாந்தன் கதை படிப்பது தான் எத்தனை இனிய அனுபவம்!
அவன் படித்து முடிப்பதற்கும் ஸ்டேஷன் டீக்கடைக்காரர் ஆவிபறக்கும் டீ டம்ளரை அவனருகே வைத்து “குடி” என்று சொல்வதற்கும் சரியாக இருக்கும். ஸ்டேஷன் டீக்கடையின் அந்த நேரத்து டீ அமிர்தம்.
ரசித்துக் குடித்துவிட்டு சைக்கிள் எடுப்பான். வீடு போவதற்கான நேரத்தை வேண்டுமென்றே நீட்டுவான். படித்த ஜெயகாந்தன் கதை வழிநெடுகிலும் அவன் மனத்திரையில் வரிக்கு வரி காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும்.

அதெல்லாம் ஒரு காலம்…. அந்த வயசும், அவன் வளர்ந்த சூழலும், அவன் அப்பாவின் ஊக்கமும், அவனது கிராமத்து நண்பர்களின் இலக்கிய ஆர்வமும், அயல் வீட்டு அன்னலட்சுமியின் காதலும், ஓ… எத்தனை இனிமை… விடலைப் பருவத்தின் வியப்பு மிகுந்த அந்தக் காலம் இனி திரும்பி வருமா…?
அதை இப்பொழுது நினைத்துப் பார்க்கையில், அதை இழந்துவிட்டோம் என்ற வருத்தம் அவனுக்கில்லை… மாறாக அப்படியொரு காலம் அவனுக்குச் சொந்தமாக இருந்ததே என்ற பெருமிதம் தான் அவனுக்கு.
அதுசரி, மீசை கறுக்காத அந்த விடலை - அந்த ஜெயகாந்தன் பைத்தியம் யார் என்று இன்னும் சொல்லவில்லையே… அவன் பெயர் மகேந்திரா.
பாலுமகேந்திரா... நாங்கள் பார்த்து பார்த்து பழகிப்போனதும் நாங்கள் ஒரு கணம்கூட நின்று ரசிக்க மறந்ததுமான இயற்கைக் காட்சிகளை எப்படி ரசிப்பது என்ற சூத்திரம் சொல்லித்தந்த ஒளிப்பதிவாளன்.
அதிகாலை பனிமூட்டத்தை ஊடுருவி உட்பாயும் ஒளிவீச்சின் தருணங்களில் புல்லின்மீது அமர்ந்திருக்கும் பனித்துளியை வெள்ளித்திரையில் அழகாகக் காட்டிய கலாரசிகன்.
80களின் நடுப்பகுதியில் வெளிவந்த “நீங்கள் கேட்டவை” படத்தில் ஒரு காட்சி... ‘கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள்...’ என்ற பாடல் சங்கராபரணம் சோமயாலு பாடுவதாகவரும் காட்சி அது.
ஜேசுதாசின் அற்புதமான குரல்... எல்லோரும் பாடலுக்குள் அமிழ்ந்து செல்லும் வேளையில் திடீரென மலைகளின் கீழே மேகங்களுக்குள்ளாக புகுந்துவரும் ஒளிச்சிதறலில் அருவிகள் தகதகக்கும் காட்சி இது எல்லாவற்றையும் தூக்கி எங்கேயோ கொண்டுசென்று விடுகிறது...
திரைப்படத்தைப் பார்க்கும்போதே அதனூடாகக் காட்சிகளையும் ஒளிப்பதிவையும் இரசிக்க ஆரம்பித்த ஒரு தலைமுறையை உருவாக்கிய ஆசான் பாலுமகேந்திரா.
நான் பார்த்த தமிழ்ப் படங்களில் முதன் முறையாக திரை அரங்கில் ஒளிப்பதிவுக்காக எழுந்துநின்று எல்லோரும் கைதட்டிய காட்சி அது... இதனைப் போலவே ஒளிச்சேர்க்கை தொழில்நுட்பம் மிகவும் முன்னேறி இருக்காத 1974களில் வெளிவந்த ராமுகாரியத்தின் ‘நெல்லு’ படத்தின் காட்சிகள் இன்றும் பாலுமகேந்திரா என்ற ஒப்பற்ற ஒளிமேதையின் நுட்பங்களை விழிவிரிய பார்க்க இரசிக்க வைக்கிறது..
எப்போது ராமுகாரியத் பாலுமகேந்திராவை அணுகுகிறார் என்று பாருங்கள். தகழி சிவசங்கரன்பிள்ளையின் நாவலை ‘செம்மீன்’ என்ற பெயரில் திரைப்படமாக இயக்கி மலையாள இரசிகர்களை மட்டுமல்லாமல் தென்னிந்தியா, இலங்கை என்று வெற்றிப்படமாக்கி சிறந்த திரைப்படமாக இந்திய விருதும், சிக்காகோ நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டு என்று உச்சிக்கு சென்ற பின்னர் தனது அடுத்த படமான ‘நெல்லு’க்கு பாலுமகேந்திராவை ஒளிப்பதிவாளராக ஆக்குகிறார்.
பாலுமகேந்திரா தனது திரைப்படக் கல்லூரிப் பரீட்சைக்கு எடுத்த ஆவணப்படத்தின் ஒளிப்பதிவில் மயங்கியே ராமுகாரியத்த தனது ‘நெல்லு’ படத்துக்கு இவரை நியமித்தார். செம்மீனில் ஒளிப்பதிவாளராக வேலை செய்த மார்குஸ் பற்றேலி க்கு பதிலாக பாலுமகேந்திராவுக்கு இந்த இடம் கிடைத்தது.
அப்போதே அவருக்கான ஒரு பெரிய ஆரம்பமாக இருந்தது. (இந்த மார்க்குஸ் பற்றேலி 1978ல் கான்ஸ் திரைவிழாவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான (செம்மீன்) தங்கவிருதும், சாந்திநிலையம் படத்துக்கு சிறந்த இந்திய ஒளிப்பதிவாளர் விருதும் பெற்றவர்) மன்னரை பாடுவதும், பண்டிதத்தனமாக எழுதுவதுமாக சாதாரணமக்களுக்கு எட்டாததாக இருந்துவந்த தமிழ்மொழியை எல்லோரும் இரசிக்கவும் எல்லோருக்குமான செய்தி சொல்லும் ஊடகமாக கொண்டுவந்தவன் பாரதி என்றால் வெறும் நிறங்களின் திரட்சியும், வண்ணக்கலர் மயமாக இருந்த திரைமொழியை திரை ஒளியை எல்லோரும் இரசிக்கும் விதமாக ஆக்கியவர் பாலுமகேந்திரா.
அவன் எட்டயபுரத்திலிருந்து வந்தவன். இவரோ தமிழீழத்தின் மட்டக்களப்பின் அமிர்தகழியில் இருந்து வந்தவர். சொந்தமாக ஒரு குடில் அல்லது வீடு நடுத்தரக் குடும்பங்களின் ஒரு கனவு அல்லது இலட்சியம். அதனை அடையப் பாடுபடும், ஏறத்தாழப் போராடும் ஒரு குடும்பக் கதையாக அவர் படைத்த ‘வீடு’ படமும் சந்தியாராகமும் அவரது அற்புதப் படைப்புகள்.
1985 என்று நினைவு... சென்னையின் நேரு ஸ்ரேடியத்தில் மிகப்பெரிய கலைநிகழ்ச்சி ஒன்று. தமிழ்திரை உலகின் நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்றுகூடி மேடை ஏறும் நட்சத்திர நிகழ்வு.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பினால் நடாத்தப்பட்ட இந்த நிகழ்வை முன்னின்று ஒழுங்கு செய்தவர் அந்த நேரத்தைய தமிழக ஆஸ்தான கவிஞரான புலமைப்பித்தன் ஐயா அவர்கள். அரங்கு நிறைந்த நிகழ்வு அது. அந்த நிகழ்வில் எல்லா கலைஞர்களும் பேசினார்கள், பாடினார்கள்... ஆனால் பாலுமகேந்திரா என்ற கலைஞனின் முறையும் வந்தது. அதே தொப்பியுடன் மேடை ஏறினார். மிகவும் ஆணித்தரமான குரலில், உறுதி நிறைந்த குரலில் இரண்டு வசனங்களே பேசினார்.
‘தமிழீழம் என்பது இன்றைய கனவு அல்ல.. நாளைய நிஜம்’ என்று. அன்றைக்கு அந்த நிகழ்வு முடிந்து இன்று முப்பது வருடமாகிறது. அதில் பேசப்பட்ட மற்றையவர்களின் பேச்சு ஏறத்தாழ மறந்தே போய்விட்டது. ஆனாலும் பாலுமகேந்திராவின் அந்த பேச்சு இன்னும் நினைவில் இருக்கிறது. இதுதான் பாலுமகேந்திரா...
இந்திய மத்திய அரசின் ஈழத்தமிழினம் சார்ந்த கொள்கை வகுப்பு, தமிழக அரசின் நிலை என்பனவற்றால் அதற்கு பிறகு அதிகமாக அந்த கலைஞன் வெளிப்படையாக குரல் தராவிட்டாலும், அவருக்குள்ளே ஒரு தமிழீழத் தேசத்தவன் எப்போதும் உயிர்வாழ்ந்து கொண்டே இருந்தான்.
என்னதான் கூண்டுக்குள்ளோ, இல்லை வேறு இடத்தில் இருந்தாலும் காடு மறக்காதாம் சிங்கம். அதன் மனத்தில் எப்போதும் காடு வாழ்ந்துகொண்டே இருக்குமாம். அதைப் போலவே பாலுமகேந்திரா என்ற கலைஞனுக்குள்ளும் தமிழீழத்தவன் என்ற நினைப்பும் தனது தாயகம் விடுதலை ஆதல் வேண்டும் என்ற கனவும் எப்போதும் இருந்தே வந்துள்ளது.

என்னதான் தடா - பொடா மற்றும் கியூ காவல்துறை அழுத்தங்கள் இருந்தாலும் இந்த உணர்வு பல வேளைகளில் அவரை மீறி வெளிவந்திருப்பதை காணமுடிந்தது. அவருக்குள்ளே பல மேதமைத்தனங்களும் ஆற்றல்களும் இருந்தாலும் அவருடைய மிகமுக்கியமான ஒரு இயல்பு அவர் அழகியலின் அதி இரசிகன்.
அதற்குள்ளாகவே அவரது அனைத்து மற்றைய ஆற்றல்களும் செதுக்கப்பட்டன. அவருடைய திரைப்படங்களில் காட்சி ஒன்று உணர்வுபூர்வமாக நகர்ந்து கொண்டிருக்கும்போதே ஒரு பிரேமில் திடீரென மரத்தின் இலைகளுக்குள் நின்று அசையும் குரங்கு ஒன்றோ, மழைத் துவாணத்தில் தூரமலைகளுக்கு அப்பால் தோன்றும் வானவில் ஒன்றோ, கதவுகளின் இடுக்குகளுக்கூடாக விழிவிரிய பார்க்கும் குழந்தை ஒன்றோ எதுவோ வந்து அந்த காட்சியின் வலுவை இன்னும் அதிகமாக்கிச் செல்லும். இது பாலு மகேந்திராவின் ஒருவிதமான கவித்துவம். இது அவருக்கே உரிய ஒருவிதமான கமெரா மொழி.
2010ஆம் ஆண்டுக்கான இந்திய சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில்நாடனை பாராட்டி நடைபெற்ற விழாவில் 2011 ஜனவரி 3ம் திகதி பேசிய பாலுமகேந்திரா அதில் சொன்னது போலவே அவர் தன்னுடைய திறமைகளுக்கும் அறிவுக்கும் ஒரு எல்லை போட்டு ஓய்ந்திருந்தவர் அல்ல.
அவரின் மொழியிலே சொல்வதானால் அவர் ஒரு வெறிகொண்ட வாசகன்... அவர் தன்னை ஒரு வாசகன் என்று சொல்வதைவிட உபாசகன் என்றே அடிக்கடி சொல்வதை கருத்தரங்குகளில் பார்த்து இருக்கலாம்.
அந்த வாசிப்பு என்பதை அவர் இறுதிவரை நிறுத்தவேயில்லை என்பது அவரது வாழ்வில் இருந்து தெரிகிறது. யார் கண்டார்கள் இப்போதும் வானுலகில் இருந்து பூமியின் அழகை அவருக்கே உரிய அழகியல் கண்ணோடு பார்த்துக்கொண்டிருப்பார். பாலுமகேந்திராவின் ஒரு திரைப்படத்தில் வரும் பாடலின் ஒருவரி சொல்வதுபோல
‘என் நாளும் நம்மைவிட்டு போகாது வசந்தம்...’

http://www.tamilwin.com/special/01/174370?ref=ls_d_tamilwin

No comments:

Post a Comment