Thursday, August 31, 2017

குறளில் ஒரு குற்றம்-இரா.சம்பந்தன்

தமிழில் எழுந்த அதியுயர்ந்த நீதி நூல் என்ற பெருமை திருக்குறளுக்கு உண்டு! வேதாகமத்துக்கு அடுத்தாக அதிக மொழிகளில் மாற்றம் செய்யப்பட்ட நூல் என்றும் அதைச் சொல்கின்றார்கள்! மனித சமுதாயத்திலே காணப்படும் அங்கத்தவர்களைப் பொறுக்கி எடுத்து அவர்களிள் நிறைகளைப் போற்றியும் குறைகளைக் கண்டித்தும் குறள் செய்துவிட்டுப் போனார் திருவள்ளுவர்!
ஒரு அரசன் ஒரு மந்திரி ஒரு குடியானவன் ஒரு மனைவி ஒரு போர்வீரன் ஒரு உழவன் ஒரு துறவி ஒரு அறிவாளி ஒரு மடையன் ஒரு விபச்சாரி ஒரு புதல்வன் ஒரு நண்பன் ஒரு எதிரி ஒரு உளவாளி ஒரு தூதுவன் ஒரு காதலன் ஒரு காதலி என்று யாரும் தப்பிவிடாமல் அனைவரையும் கண்காணித்தது திருக்குறள்!
தலையில் இருக்கும் போது வாசனைத் திரவியங்களால் போற்றிப் பெருமைப் படுத்தப்பட்ட மயிர் தலையை விட்டு நீங்கி விட்டால் அருவருக்கப் பட்டு இழிநிலை அடைந்து விடுவது போல மனிதர்களும் தாங்கள் இருக்கும் நிலையில் இருந்து இறங்கினால் இழிநிலையைச் சந்திக் நேரிடும் என்று படிக்காதவனும் புரிந்து கொள்ளும்படி உவமை காட்டி மக்கள் இலக்கியம் பாடிவிட்டுப் போனவர் திருவள்ளுவர்!
ஆனால் தனிமனித ஒழுக்கத்தைக் கையில் எடுத்துக் கொண்ட திருக்குறள் மரம் செடி கொடிகள் விலங்குகள் பறவைகள் பூச்சி புழுக்களை ஒரு இரக்கத்துக்குரிய உயிரினங்களாக எங்குமே காட்டிக் கொள்வில்லை!
வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம் மனம் வாடினேன் என்றார் வடலூர் அருட்பிரகாச வள்ளலார் தன் திருவருட்பாவில்! இந்த மனப்பாங்கை குறளில் எங்கும் காண முடியவில்லை! மாறாக பகைத் திறம் தெரிதல் என்ற அதிகாரத்திலே பகைவரை ஆரம்பதிலேயே அழித்து ஒழிக்க வேண்டும் என்று ஒரு கருத்தை சொல்ல வரும் வள்ளுவர் ஒரு உதாரணம் காட்டுவார்.
முள் மரம் ஒன்றை அது சிறிதாக இருக்கும் போது அழித்து விடுங்கள்! அதை வளரவிட்டு அழிக்கப் போனால் அதன் முள் எங்கள் கையைப் பதம் பார்த்து விடும் என்பார் அவர்.
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து
முட்செடி ஒரு உயிர்! அதன் முள் வலியத் தேடிச் சென்று யாரையும் தாக்குவதில்லை! அது விதையாகி செடியாகி மரமாகி வாழ நினைக்கின்றது. அதன் வாழ்வியல் உரிமையை அங்கீகரிக்காது அதை வளர விட்டால் தவறு. இளம் பிராயத்திலே அழித்து விடுங்கள் என்று உவமை பேசுகின்றது திருக்குறள்!
உன்னிடம் முள் இருக்கின்றது! நீ வளர்ந்தால் உன்னால் ஆபத்து இருக்கின்றது! அதனால் நீ அழிக்கப்பட வேண்டிய பொருள் என்று முட்செடிக்கு நீதி வழங்குகின்றது திருக்குறள்! இந்தக் குற்றத்தை வெறும் உவமைச் செய்தி என்று சமாதானம் பேசித் திருக்குறளை நாம் காப்பாற்றி விடக் கூடாது!
அது போல கயமை பற்றிப் பேசும் போது எந்தவித தயவு தாட்சண்மும் இன்றி சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்பு போல கொல்லப் பயன்படும் கீழ் என்று குறள் எழுதினார் வள்ளுவர்! மற்ற மரங்களைப் போல கரும்பு தானாக காய் கனி என்று ஒன்றையும் தருவதில்லை! அதனால் அதனிடம் இருந்து பலனைப் பறித்துத் தான் எடுக்க வேண்டும்! எனவே அதனைக் கொன்று பிழிந்து சாறு எடுப்பதைச் சரி என்று ஏற்றுக் கொண்டு தன் கருத்துக்கு உவமையாக்கிக் கொள்கின்றது திருக்குறள்!
முள்ளிருந்த காரணத்தால் ஒரு செடியும் சுவை இருந்த காரணத்தால் கரும்பும் வதைக்கப்படுவதை குறள் ஆதரிக்கின்றது!
இது போலக் காலம் அறிதல் என்ற அதிகாரத்திலே எந்தக் காரியத்தையும் பரபரப்பின்றிச் சரியாகச் செய்து முடிக்க வேண்டும் என்று சொல்ல வந்த திருக்குறள் ஆசிரியர் மீன்கள் கண்டு தப்பி ஓடாமல் இருப்பதற்காக அசைவற்று இருக்கும் கொக்கை உதாரணம் காட்டுவார் அது மீனைக் கொல்வது இயற்கை நியதியாக இருந்தாலும் அறவுரை பேசும் குறளில் இத்தகைய கொலைகள் இடம்பெறுவது அதன் அறிவுத் திறனுக்கு இடையே ஒரு நெருடலை ஏற்படுத்துகின்றது!
இனிப் படைச் செருக்கு என்ற அதிகாரத்தில் விலங்குகளைக் கொண்டு ஒரு உதாரணம் காட்டுவார் வள்ளுவர். காட்டிலே திரிகின்ற முயலை தப்பாது எய்து கொன்ற அம்பினை ஒருவன் வைத்திருப்பதிலும் பார்க்கப் போர்க்களத்திலே யானையை நோக்கி எறிந்து அதனைக் கொல்லாது குறி தவறிப் போன வேலை ஒருவன் வைத்திருப்பதே நல்லது என்பது தான் அந்த உதாரணம்.
கானமுயல் எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
கானகத்திலே யாருக்கும் தீங்கு செய்தாத முயலுக்கு அம்பு எய்து அதனைக் கொல்லும் கொடுமையை சர்வசாதாரணமான செயலாக எடுத்துக் கொண்டு நடை போடுகின்றது திருக்குறள். போர்க்களத்திலே யானைக்கு வேல் எறியும் சம்பவத்தை யுத்த நிகழ்ச்சியாக ஏற்றுக் கொண்டாலும் முயலை அம்பால் அடிப்பதை எந்த நியாயத்தைக் கொண்டு குறள் உதாரணம்; காட்டியதோ தெரியவில்லை!
கொல்லான் புராலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் என்ற திருக்குறள் கோட்பாட்டுக்கு அது காட்டும் சில உதாரணங்கள் ஒவ்வாமல் போவது ஏன் என்று தெரியவில்லை! ஒருவேளை மனித சமுதாயத்தின் தேவைக்காகவே ஏனைய உயிரினங்கள் படைக்கப்பட்டன என்ற எண்ணம் குறள் ஆசிரியருக்கு இருந்ததோ தெரியவில்லை!
குறள் சமண நூல் என்று வாதிடும் சிலர் எவ்வுயிரையும் கொல்லா அறம் பூண்ட சமண சமய நெறியோடு குறள் முரண்டு பிடிப்பதைக் கவனத்தில் கொண்டார்களா என்றும் தெரியவில்லை!
குறள் நல்ல இலக்கியம்! நாம் எந்தக் கருத்தையாவது சொல்லி விட்டு அதற்கு திருக்குறளிலே உதாரணம் காட்டிவிட்டால் எமது கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டு விடும் என்ற அளவுக்கு எங்கும் செல்வாக்குச் செலுத்தி வருவது குறள்!
சிலம்பும் கம்பனும் கூட எடுத்துக் கையாண்ட பெரும் இலக்கியமாக இருக்கும் குறளிலே புரியாத புதிராக இருப்பது வள்ளுவன் யாரென்பது மட்டுமல்ல! வள்ளுவன் கையாண்ட உதாரணங்களும் தான்!
இரா.சம்பந்தன்
5.11.2014 தமிழர் தகவல் இதழில் இடம்பெற்ற எனது கட்டுரை!

No comments:

Post a Comment