Sunday, April 12, 2015

ஜப்பானையும் தென்கொரியாவையும் தாக்கக் கூடிய 1000 ஏவுகணைகள் வடகொரியா வசம் உள்ளதா ?

தனக்கு அண்மையிலுள்ள நாடுகளைத் தாக்கக் கூடிய நூற்றுக் கணக்கான கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் வடகொரியா வசம் இருப்பதாக அண்மையில் ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். ஆனால் அமெரிக்காவின் ஆய்வுக் குழு ஒன்றின் தகவல் படி 2020 இற்குள் வாஷிங்டனுக்கு நேரடி அச்சுறுத்தல் விடுவிக்கக் கூடிய அணுவாயுதத்தை நிறுவ வடகொரியாவுக்கு வெளிநாடுகளின் தொழிநுட்பம் நிச்சயம் தேவைப் படும் என்று கூறப்படுகின்றது.
அண்மைக் காலமாக வடகொரியாவின் ஆத்திரமூட்டக் கூடிய ஏவுகணைப் பரிசோதனைகள் சர்வதேச நாடுகளுக்குத் தலைவலியை ஏற்படுத்தியிருந்தது. கடந்த வாரம் தான் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து இராணுவப் பயிற்சி மேற்கொண்டு வரும் கடற் பரப்புக்கு அண்மையில் வடகொரிய இராணுவம் 7 ஏவுகணைகளை ஏவிப் பரிசோதனை செய்திருந்தது என சியோல் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அமெரிக்கா மற்றும் கொரியாவின் ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக ஆய்வுக் குழு அறிவித்துள்ள செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
'அதாவது தென் கொரியாவிலும், ஜப்பானிலும் எந்தவொரு இலக்கையும் வந்து தாக்கக் கூடியதும் சோவியத் ரஷ்யாவின் தொழிநுட்பப் பிரிவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப் பட்டதுமான சுமார் 1000 ஏவுகணைகள் வடகொரியா வசம் இருப்பதுடன் இன்னும் சில வருடங்களில் இப்பகுதியில் ஓர் சிறிய அணு வல்லரசாக வடகொரியா வளர்ந்து விடும் ஆற்றலையும் அது கொண்டுள்ளது' எனக் கூறப் பட்டுள்ளது.
இதேவேளை வடகொரியாவின் கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடிய ஏவுகணைகளுக்கு எதிராக ஏவுகணைத் தடுப்புப் பொறிமுறை ஒன்றை தென்கொரியாவில் நிறுவுவதற்காக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஆஷ் கார்ட்டெர் இவ்வாரம் ஜப்பானுக்கும் தென்கொரியாவுக்கும் விஜயம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment