Wednesday, February 11, 2015

14 வயது சிறுமியை படத்தில் நடிக்கவைப்பதாகக் கூறி விபசாரத்தில் தள்ளிய சினிமா பிரமுகர்

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை திரைப்படத்தில் நாயகியாக நடிக்கவைப்பதாகக் கூறி விபசாரத்தில் தள்ளிய சினிமா பிரமுகரை காவல்துறையினர் கைது செய்தனர். சாலிகிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அவருக்கு உடன் பிறந்த தங்கை மற்றும் தம்பி உள்ளனர். இவரது தந்தை பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது. சினிமா உதவி இயக்குனர் ஒருவருடன், தாயார் சேர்ந்து வாழ்ந்து வந்தார். அந்த சிறுமி 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, சிறுமியை சினிமாவில் நடிக்க வைக்க தாயார் முயற்சி மேற்கொண்டார். இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ராஜேஸ்வரி என்ற பெண் தரகர் உதவியுடன், சென்னை போரூரைச் சேர்ந்த 37 வயதுடைய செந்தமிழ்அரசு என்பவரை பார்த்தனர்.
செந்தமிழ்அரசு, தான் 2 படங்கள் இயக்கி வெளியிட்டிருக்கிறேன் என்றும், தன்னுடைய புதிய படத்தில் சிறுமியை கதாநாயகி வேடத்தில் நடிக்க வைப்பதாகவும், இதற்காக ரூ.1½ லட்சம் தருவதாக சிறுமியின் தாயாரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கடந்த ஓராண்டு காலமாக, சிறுமியை தனது கட்டுப்பாட்டில் வைத்து, செந்தமிழ் அரசு பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர் சிறுமியை விபசாரத்திலும் ஈடுபடுத்தியுள்ளனர். இந்நிலையில், செந்தமிழ் அரசை , பிடிக்க சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் முயற்சி செய்தனர். மாறு வேடத்தில் சென்று, தரகர் ராஜேஸ்வரி உதவியுடன், செந்தமிழ் அரசுவை சந்தித்தனர். சிறுமியிடம் உல்லாசமாக இருக்க, அவர் ரூ.1½ லட்சம் பணம் கேட்டுள்ளார். மேலும், முன் பணமாக ரூ.10 ஆயிரம் கேட்டுள்ளார்.
மீதி தொகையை கொடுத்தால் சிறுமியை அனுபவிக்கலாம் என்று செந்தமிழ் அரசு பேரம் பேசியுள்ளார். ரூ.10 ஆயிரத்தை முன்பணமாக கொடுத்த சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர், செந்தமிழ் அரசுவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். சிறுமி மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, தரகர் ராஜேஸ்வரியும், சிறுமியின் தாயாரும் கைது செய்யப்பட்டார்கள். கைதான 3 பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான செந்தமிழ்அரசு கும்பகோணத்தைச் சேர்ந்தவர். சென்னை போரூரில் வசித்தார். அவர் இயக்கிய படங்கள் பற்றிய விவரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை. இயக்குனர்கள் சங்கத்தில் விசாரித்தபோது, இவர் பிரபலம் ஆனவர் இல்லை என்று தெரிய வந்தது. படங்கள் எதையும் இயக்கவில்லை என்றும், இவர் தவறான தகவல்களை சொல்லி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பிரபல காமெடி நடிகர் ஒருவர், அவரது நண்பர். என்று தெரிய வந்துள்ளது. எனவே, அந்த காமெடி நடிகரிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். முன்னதாக இது குறித்து ஐ.டி. தலைமை அலுவலகத்தில், குழந்தைகள் நல கமிட்டி சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. கூடுதல் காவல்துறை டி.ஜி.பி. கரன்சின்கா உத்தரவின் பேரில், காவல்துறை அதிகாரி ராஜாசீனிவாசன், காவல்துறை ஆய்வாளர் சிவானந்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment