நிரந்தர வதிவிட உரிமை பெற்ற பெற்றோர்கள் தங்கள் 3-வயது மகனை கனடாவில் தங்களுடன் சேர்ந்து வாழ கனடிய குடிவரவு சட்டம்  தடைவிதித்துள்ளது. குழந்தை கடத்தல் மோசடி போன்ற குற்றங்களை தடுக்கும் பொருட்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனடா குடியுரிமை மற்றும் குடிவரவு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
ஒட்டாவாவை சேர்ந்த பாவ்னா பஜாஜ் மற்றும் அமன் சுட் இது சம்பந்தமாக இந்தியாவில் இருக்கும் தங்கள் மகன் டக்ஷ் தங்களுடன் வந்து சேர்வதற்கு அனுமதிக்குமாறு ஒரு பொது முறையீட்டை அமைச்சிடம் செய்துள்ளனர்.
2011-ல் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பித்த போது தான் கர்ப்பமாக இருந்ததாக பஜாஜ் செய்தியாளரிடம் தெரிவித்தார். கடந்த வருடம் தங்கள் விண்ணபத்தை கனடிய அரசாங்கம் ஏற்றுக்கொண்ட போது தங்களிற்கு ஒரு மகன் இருந்தான் எனவும் கூறினார்.
கனடா வந்த பின்னர் தங்கள் பிள்ளைக்கு ஸ்பொன்சர் செய்யும் படி ஒரு குடிவரவு ஆலொசகர் ஆலோசனை கூறியதாக தம்பதிகள் தெரிவித்தனர். ஆனால் கனடா வந்திறங்கியதும் சட்டத்தை மீறிவிட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
கனடா குடியுரிமை மற்றும் குடிவரவு பிரிவினருக்கு மோசடி  மற்றும் குழந்தை கடத்தல் போன்றனவற்றை தடுப்பதற்கு உதவுவதற்காக விண்ணப்பதாரிகள் கனடாவில் வந்திறங்குவதற்கு முன்னர் தங்கள் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரையும் விண்ணப்பத்தில் வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சூழ்நிலையில் மாற்றம் ஏற்படும் போது அதனையும் வெளிப்படுத்துவது அவசியம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நிரந்தர வதிவிட அனுமதி கிடைக்கும் போது விண்ணப்பத்தில் பதியப்படாத சார்ந்தவர்களை எதிர்காலத்தில் ஸ்பொன்சர் செய்ய முடியாதெனவும் கூறப்பட்டுள்ளது.
தாங்கள் தங்கள் கர்ப்பத்தை வெளியிடாது விட்டு தவறென தம்பதிகள் தெரிவித்தனர்.
மனிதாபிமான தார்மீக அடிப்படையில் தங்கள் மகனை கனடா வர அனுமதிக்குமாறு குடிவரவு மற்றும் குடியுரிமை அமைச்சர் கிறிஸ் அலெக்சான்டரை கேட்டுள்ளனர்.