Saturday, November 8, 2014

காதலித்ததால் ஆத்திரம்: பெற்ற மகளை கவுரவக் கொலை செய்த தாய்!

தமிழகத்தில் எதிர்ப்பையும் மீறி காதலித்த மகளை, கழுத்தை நெரித்து தீ வைத்து கொன்று நாடகமாடிய தாயை பொலிசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்த பெரியபாண்டி, பேச்சியம்மாள் தம்பதிக்கு பாண்டீஸ்வரி என்ற மகளும், கணேஷ்பாபு என்ற மகனும் இருக்கின்றனர்.
சாத்தூரில் உள்ள கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வந்த பாண்டீஸ்வரி கடந்த ஆகஸ்டு மாதம் தீயில் கருகிய நிலையில் வீட்டில் பரிதாபமாக இறந்து கிடந்துள்ளார்.
இதையடுத்து சமையல் செய்தபோது உடலில் தீ பிடித்து உடல் கருகியதாக பேச்சியம்மாள் பொலிசில் புகார் செய்ததையடுத்து, பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும், அதன்பின் தீ வைத்து எரிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பேச்சியம்மாளிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தியதில், அவரும், மகன் கணேஷ்பாபுவும் சேர்ந்து பாண்டீஸ்வரியை கழுத்தை நெரித்து கொலை செய்ததும், அதன் பின்னர் உடலுக்கு தீவைத்து சமையல் செய்தபோது தீ விபத்து ஏற்பட்டதாக கூறி நாடகமாடியதும் தெரியவந்தது.
கல்லூரி படித்து வந்த பாண்டீஸ்வரி, வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார், இதனை கைவிடும்படி தாய் மற்றும் சகோதரர் கூறி உள்ளனர்.
ஆனால் அவர்களது பேச்சை கேட்காமல் பாண்டீஸ்வரி தொடர்ந்து அந்த வாலிபருடன் பழகி வரவே, ஆத்திரமடைந்த தாய் கழுத்தை நெரித்துள்ளார்.
அப்போது அவர் இறந்து விட்டதாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்து வேறு வழியின்றி உடலில் தீ வைத்து விபத்துபோல் சித்தரித்ததாகவும் பேச்சியம்மாள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உடனே பேச்சியம்மாளை கைது செய்த பொலிசார், தலைமறைவாகிவிட்ட கணேஷ்பாபுவை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment