Thursday, July 31, 2014

யாழ் பொலிசாருக்கு நீதிமன்றம் வைத்த ஆப்பு: இனி சும்மா சும்மா தடை உத்தரவு வாங்க முடியாது !


யாழில் ஒரு ஊர்வலம் நடக்க இருக்கிறது என்றால் போதும். உடனே பொலிசார் சென்று நீதிமன்றில் ஒரு மனுவைப் போட்டு அதற்கு தடை உத்தரவை வாங்கிவிடுவார்கள். பின்னர் அங்கே சென்று நீதிமன்ற உத்தரவைக் காட்டி மக்கள் போராட்டம் நடைபெறமுடியாதவாறு தடுப்பார்கள். இதனை ஒரு கலாச்சாரமாகவே பொலிசார் கொண்டுவந்து விட்டார்கள். ஆனால் இதற்கு எல்லாம் யாழ் நீதிமன்றம் அடித்ததே ஒரு ஆப்பு ! அதுதான் பெரிய ஆப்பு !
மக்கள் போராட்டங்களிற்கு எதிராக தன்னிச்சையாக காவல்துறை நீதிமன்ற தடை உத்தரவு கோரி அனுமதி பெறுவதற்கு யாழ்.நீதிமன்றம் ஆணி அடித்துள்ளது. இனி வருங்காலங்களில் அவ்வாறு தடை உத்தரவு கோரும் மனுக்களை நீதிமன்றில் சமர்ப்பிக்கும் வேளை தொடர்புடைய மறுதரப்புக்களும் தமது தரப்பு நியாயங்களை முன்வைக்க ஏற்பாடு செய்யவேண்டுமென நீதிபதி காவல்துறைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அண்மையில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட இருந்த ஆர்ப்பாட்ட போராட்டத்திற்கு காவல்துறை நீதிமன்ற தடையினை பெற்றிருந்தது. குறித்த விவகாரம் தொடர்பான விசாரணை நேற்று யாழ்.நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் காவல்துறை மக்களது ஜனநாயக வழி போராட்டங்களிற்கு கூட நீதிமன்றினை நாடி தடையை விதித்து விடுகின்றது. தமது கோரிக்கைகளினை முன்வைத்து ஜனநாயக வழியில் போராடும் தரப்புக்கள் தமது கருத்துக்களை முன்வைக்க நீதிமன்றில் அனுமதிக்கப்படுவதில்லை என தெரிவித்திருந்தார்.
இதை கருத்தில் கொண்ட நீதிவான் எஸ்.சிவகுமார் மக்கள் போராட்டத்திற்கான தடைகளை விதிக்கும் தடை உத்தரவுகளை நீதிமன்றில் பெறும் வேளை மற்றைய தரப்பும் நேரில் ஆஜராகி தமது தரப்பு நியாயத்தை சொல்ல வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment