Tuesday, April 22, 2014

தித்திக்கும் சுவை கொண்ட மாம்பழத்தை சுவைக்க முடியுமா?

கடந்தாண்டு போதிய மழை இல்லாததால் நடப்பாண்டில் மாம்பழங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தான் மாம்பழம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த மாவட்டங்களில் சுமார் பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் நடுசாலை, சேலம் பெங்களூரா, இமாம்பசந்த், பங்கனப்பள்ளி, குதாதத், மல்கோவா உள்பட பல்வேறு ரக மாம்பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் தற்போது மாம்பழ உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், அனைத்து ரக மாம்பழங்களின் விலையும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சேலம் மாம்பழ வியாபாரிகள் கூறியதாவது, தமிழகத்தில் நங்கவள்ளி, சூரபள்ளி, வனவாசி, மேட்டூர், ஜலகண்டாபுரம், ஓமலூர், கருமந்துறை, வரகம்பாடி, சங்ககிரி, சோரகை, திருச்செங்கோடு, காரிமங்கலம், பாலக்கோடு, அரூர், பர்கூர், காவேரிப்பட்டணம் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிகளவில் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
பருவமழை போதிய அளவில் இல்லை, நிலத்தடி நீர் வளமும் குறைந்ததால் விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி மாமரங்களை காப்பாற்றினர். இருப்பினும் ஓரளவு மகசூல் குறைந்தது.
2012ம் ஆண்டை காட்டிலும், கடந்தாண்டு மாம்பழம் வரத்து குறைந்து இருந்தது. ஆனால் நடப் பாண்டு வரத்து பாதியாக குறைந்துள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில் இந்த அளவுக்கு மாம்பழம் உற்பத்தி பாதித்தது இல்லை. மாம்பழத்துக்கு பெயர்பெற்ற சேலம் மார்க்கெட்டுக்கு தினசரி 30 முதல் 40 டன் மாம்பழங்கள் வருகின்றன. கடந்தாண்டு இதே நாளில் 50 முதல் 60 டன் மாம்பழங்கள் வந்தன.
தற்போது ஒரு கிலோ மாம்பழம் ரகத்தை பொறுத்து கிலோ ரூ.30 முதல் ரூ.150 என விற்கப்படுகிறது. இது கடந்தாண்டை காட்டிலும், நடப்பாண்டு 25 சதவீதம் விலை அதிகரித்துள்ளது.
மே முதல் வாரத்தில் இருந்து மாம்பழம் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அப்போது தினசரி 100 டன்னாக வரத்து உயரும் எனவும் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment