Monday, April 21, 2014

இந்தியச் செய்தி தமிழர்களின் அன்பால் மிரண்ட மோடி


இதுவரை நான் பார்க்காத அன்பை தமிழக மக்கள் எனக்கு அளித்தார்கள் என்று பாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பாஜக.வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்தபோது பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில்,
கேள்வி: தமிழ்நாட்டில் 2 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்த போது என்ன உணர்ந்தீர்கள்?
பதில்: தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதும் நான் பிரசாரத்தை தொடங்கி விட்டேன். இதுவரை நாட்டின் மூலை, முடுக்குகளுக்கு எல்லாம் சென்று நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறேன்.
நாட்டின் எல்லா திசைகளிலும் இந்திய வாக்காளர்களிடையே முதிர்ச்சி ஏற்பட்டுள்ளதை உணர்ந்தேன்.
முன்பெல்லாம், மாநில பிரச்சனைகளுக்கும், தேசிய பிரச்சனைகளுக்கும் இடைப்பட்ட நிலையில் மக்கள் மத்தியில் ஒருவித குழப்பம் இருக்கும். அந்த குழப்பமே இல்லாத முதல் தேர்தல் இதுதான். அருணாசலபிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் சேர்ந்து நடக்கின்றன.
அங்கு கூட எந்த தேர்தலில், எப்படி வாக்களிக்க வேண்டும்? என்று மக்கள் பிரித்துப் பார்க்கிறார்கள். இதுதான் இந்த தேர்தலின் தனித் தன்மை. அடுத்தது, பொதுவாக தேர்தல் காலங்களில் ஒருவித எதிர்மறை எண்ணங்கள் காணப்படும். ஆனால், இந்த முறை மக்களிடையே இருக்கும் வலிமையான உணர்வு ‘நம்பிக்கை’ தான்.
ஒரு புதிய அரசு அமையும், நமக்கு நன்மைகள் கிடைக்கும், நாடு முன்னேற்றம் அடையும் என்று மக்கள் நம்புகிறார்கள். இது நம்பிக்கையை மையப்படுத்திய தேர்தல். அதே சமயம், தற்போதைய அரசுக்கு எதிரான எண்ணம், ஆட்சியாளர்கள் மீதான கோபம் எல்லாம் சேர்ந்து ஒரு சுனாமியாக உருவெடுத்துள்ளது.
இது அலை அல்ல; சுனாமி! ஒரு நம்பிக்கையின் சுனாமி, விருப்பங்களின் சுனாமி, மாற்றத்துக்கான சுனாமி.
கேள்வி: நாடு முழுவதும் அலை வீசுவதாக சொன்னீர்கள், தமிழ்நாட்டிலும் மாற்றம் தெரிகிறதா?
பதில்: தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக இரண்டு திராவிடக் கட்சிகளிடையேதான் போட்டி நிலவுகிறது. அந்தக் கட்சிக்குப் பிறகு இந்தக் கட்சி, இந்தக் கட்சிக்குப் பிறகு அந்தக் கட்சி என்று மக்கள் விரக்தியில் உள்ளனர். பல ஆண்டுகளாக ஒரு மூன்றாவது அணியை மக்கள் தேடி வருகின்றனர்.
இன்று பாஜக தலைமையில் நான்கைந்து பெரும் சக்திகள் ஒரே அணியில் திரண்டுள்ளன. இது தமிழ்நாட்டு மக்களிடையே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது, இது மாநில தேர்தல் அல்ல: மத்திய அரசுக்கான தேர்தல். இதனால், முடிவு எடுப்பதில் எந்த ஆபத்தும் இல்லை.
நாடு வளர்ச்சி அடைந்தால், தமிழ்நாடும் பயன் பெறும். நாட்டில் மின்சார உற்பத்தி பெருகினால், தமிழ்நாட்டுக்கும் அது கிடைக்கும். நதிகளை இணைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டால், பயனடையப் போவது தமிழ்நாடு தான். இதை தமிழக மக்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.
மூன்றாவது, முதல் முறையாக தமிழக தேர்தலில் முக்கிய சக்தியாக இளைஞர்கள் இருக்கிறார்கள். இன்று மட்டுமல்ல.. சென்ற வருடமே, ’டுவிட்டர்’ மற்றும் ‘ஃபேஸ்புக்’கில் எனக்கு இருக்கும் அதிகமான ஆதரவாளர்கள் தமிழர்கள் என்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன்.
இதுவரை நான் பார்க்காத அன்பை தமிழக மக்கள் எனக்கு அளித்தார்கள். அதனால் தான், எனது சமூக வலைத் தளங்களில் தமிழ் மொழியை பயன்படுத்தக்கூட நான் ஆரம்பித்தேன்.
தமிழ் மக்கள் எனக்கு அளித்த அன்புக்காக இதை நான் செய்தேன். எனது வலைத்தளங்களில் ஆங்கிலம், இந்தி தவிர நான் இணைத்த முதல் மாநில மொழி, தமிழ் தான் என்று கூறியுள்ளார்.
http://www.newindianews.com/view.php?223004Y2203OmDDc4eeeOOlJccbeM6AKadddc4MMqbbcdllOy0e447Dmm30034440o23

No comments:

Post a Comment