Tuesday, April 1, 2014

3 பேரின் தூக்கை ரத்து செய்தது சரிதான்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்கை ரத்து செய்தது சரிதான் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து விட்டது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அறிவு என்கிற பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தாக்கல் செய்த கருணை மனுவை காரணமே இல்லாமல் 11 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போட்டு வைத்திருந்த மத்திய அரசின் தாமதத்தைக் காரணம் காட்டி அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றி பிப்ரவரி 18ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் அதிரடி தீர்ப்பளித்தது.
மேலும் இவர்களின் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் கூறியிருந்தது.
இதையடுத்து அடுத்த நாளே முதல்வர் ஜெயலலிதா இவர்கள் உள்பட முருகனின் மனைவி நளினி, ராபர் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரையும் சேர்த்து விடுதலை செய்யப் போவதாக அறிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு இந்த முடிவுக்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தை நாடியது.
மேலும், 3 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் முடிவை மறு பரிசீலனை செய்யக் கோரி சீராய்வு மனுவையும் தாக்கல் செய்தது.
தமிழக அரசின் முடிவுக்குத் தடை கோரிய மத்திய அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும் மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்து வந்தது.
இன்று அந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.
மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்த உத்தரவு சரியே என்றும் கூறி விட்டது.
இந்தத் தீர்ப்பு பேரறிவாளன், முருகன், சாந்தன் உயிருக்காக போராடி வரும் தமிழ் ஆர்வலர்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும் பெரும் உவகையை ஏற்படுத்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyETVLWhv6.html

No comments:

Post a Comment