Monday, May 27, 2013

நடிப்பிசையின் துடிப்பு ஓய்ந்தது (மரணத்தின் அழைப்பிதழ் - 2)


தொட்டிலில் தாலாட்டில் தொடங்கி , காலில்லாக் கட்டிலில் ஒப்பாரியுடன் முடியும் வரை, மனித வாழ்க்கை பல வித இசைகளினது கோர்வையாகவே தொடர்கிறது.
குறிப்பாக தமிழரினதும், இந்துக்களினதும் மரபு வாழ்க்கை இசையுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டது. கலைகளிலும் இசையும், நடிப்பும் மொழித் தடையை தாண்டிய உலகப் பொது மொழிகளாகும்.
அனேகமாக எல்லா மதங்களுமே இந்த ஒலி அலைகளின் உச்சாடனங்களின் அதீத சக்தியை அன்றே உணர்ந்து மந்திரங்களை திரும்பத் திரும்ப ஜெபிக்க வைக்கின்றன.
இந்த அலைகளின் தொடர்ச்சியான அதிர்வுகள் பல பௌதீக மற்றும் இராசாயன மாற்றங்களை ஏற்படுத்துவது விஞ்ஞான ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்படும் உண்மையாகும்.
ஆதியிலே வார்த்தை இருந்தது அது தேவனாக இருந்தது என்ற வசனத்துடனேயே பரிசுத்த வேதாகம் ஆரம்பிக்கிறது.
இந்துக்களின் மந்திரங்களில் மேலான ஹாயத்திரி மந்திரம் 'ஓம்' ஓமெனவே திரும்பத் திரும்ப முழங்குகிறது.
 'ஆமென்' என்பதிலும் வரும் அகர உகர மகரங்களின் அதிர்வின் விளைவே இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றுவாயாகும். அதனாலேயே சப்தத்தை பிரமம் என்கிறார்கள் இந்துக்கள்.(ஸப்தப் பிரமம்).
சங்கீத ஞானமற்ற பாமரப் பார்வையில் கூட, இசை பல விதமானதாக தோற்றமளிக்கிறது. கர்நாடக சங்கீதத்திலிருந்து. பொப் இசை என்ற துள்ளல் இசை வரை அது பல்வேறு ரூபங்களை பலவிதமான அடிப்படைகளில் எடுத்துக் கொள்கிறது.
பொதுவாக இசை என்பது இராகத்துடனும் தாளத்துடனும் தொடர்புடைய ஒரு பாவமாகும். தாள லயக் கணிப்பின் பிரகாரம் துடிக்கும் இசை வெளிப்பாட்டில் நடிப்பின் துடிப்பையும் தாள பாவமாக்கி பாடியவர்களில் முதன்மையானவர் தான் அன்மையில் அமரத்துமடைந்த திரு 'ரி எம் எஸ்' அவர்களாவார்.
அகில இந்திய ரீதியாக தாள ராகக் கட்டுக்களில் சிக்கிக் கிடந்த விருது வழங்கும் மத்திய அரசின் குழு அங்கத்தவர்களிற்கு இந்த நடிப்பிசை புரிய மொழியும் ஒரு தடையாக இருந்திருக்கலாம்.
இது போன்ற வித்துவார்த்தம் இன்மையினாலேயே தேசிய எல்லை வீச்சங்களைத் தாண்டிய கண்ணதாசன், எம் எஸ் வி , ரி எம் எஸ் மற்றும் சிவாஜி கணேசன் போன்றவர்களிற்கு என்றோ வழங்கப்பட்டிருக்க வேண்டிய பல அதி உயர் விருதுகள் தாமதமாயின் அல்லது தவறிப் போயின.
பல தலைமுறைகளாக உலகத் தமிழரையே அசத்திய ரி எம் எஸ் இற்கு எத்தனையோ தடவைகள் இந்தியாவின் அதியுயர் விருதுகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் காலத்தின் அழியாத அமரத்துவ விருதுகள் இவர்களையே அழியாது வைத்திருக்கப் போகின்றன.
இதனால், திறமையுள்ள பாடகர்கள் எல்லாம் விருது பெறுவதில்லை. விருது பெற்றவர்கள் எல்லாம் மட்டும் அதீதமானவர்கள் இல்லை என்று மாற்றி எழுதத் தோன்றுகிறது.
பதவிகளால் பெருமையடைவோர் பலர் ஆனால் வகித்த பதவிகளிற்கே பெருமை சேர்ப்பவர்கள் ஒரு சிலரே.
பாரதத்தின் ஜனாதிபதி பதவியால் பெறுமதி பெற்றவர்கள் அநேகர். ஆனால் டாக்டர் இராதாகிருஸ்ணன், இராஜேந்திர பிரஜாத், விஞ்ஞானி அப்துல் ஹலாம் போன்றவர்களால் அந்தக் கதிரையே மகிமை பெற்றதெனலாம்.
ஆனால் பகிரங்கமாக பொய் உரைத்து பல்லாயிரம் தமிழர்களை அழிக்க காரணமானவர்கள் கூட இப்போதெல்லாம் இந்த அரியாசனங்களில் அமர்ந்துள்ளது ஒருபுறமிருக்க அவரையும் அவரது கட்சியையும் தமிழகத்தில் கட்டிக் காக்கும் ஜனநாயகவாதிகளைப் பற்றி எனறு கூறலாம்.
ஜனநாயகத்தின் சுதந்திர விசார வெளி அவர்களையும் நடமாட இடமளிக்கிறது என்பதைத் தவிர வேறென்ன கூற இயலும்?
பாட்டுக்காரப் பாகவதர்களையே ஆரம்பத்தில் நடிகர்களாக 'ஹமரா' முன் தள்ள வேண்டிய ஒரு நிலை தமிழ்த் திரைத்துறைக்கு இருந்தது.
இதையே கவிஞர் வைரமுத்து ஒரு தடவை ஆரம்பத்தில் இசை நடித்துக் கொண்டிருந்தது ஆனால் உண்மையில் நடித்தவர் சிவாஜியே என்று ஒருதடவை பேசியிருந்தார்.
ஆனால் பாடகராக இருந்த போதும் தன் பாட்டின் வாயிலாக பாட்டு நடிகராக மிளிர்ந்தவர், திறமையான நடிகர்களான போதும் அவர்களின் நடிப்பிற்கு வேண்டிய துடிப்பையும், துருப்புச் சீட்டையும் வழங்கியவர் தான் ரி எம் எஸ்.
ஒரு தடவை காதலை வெளிப்படுத்தும் பாடலிற்கு நடிக்க வந்த சிவாஜி கணேசனே, ரி எம் எஸ் அதீதமாக பாடியதற்கு இணையாக இன்று தன்னால் நடிக்க முடியவில்வை என்பதை பகிரங்கமாத் தெரிவித்து விட்டு பிறிதொரு நாளில் படப்பிடிப்பை நடாத்திய சம்பவம் திரை உலகில் அடிக்கடி இரை மீட்கப்படும் ஒரு சம்பவமாகும்.
பாடலை எழுதிய கண்ணதாசனிற்கும், இசை அமைத்த விஸ்வநாதனிற்கும், அதனை இளமைத் துடிப்புடன் பாடிய ரி எம் எஸ் இன் விசால வீச்சத்திற்கு அமைய எட்டுக் கட்டை உச்சக் கட்டத்தை தானும் தாண்ட வேண்டுமென்பதாலேயே அந்தப் படப்பிடிப்பை அவர் ரத்துச் செய்திருக்க வேண்டும்.
இதை விட ஒரு சிறநத விருது வேறு ஏதும் இருக்கும் என நான் நினைக்கவில்லை.
காவியத் தாயின் இளைய மகனாகட்டும், மெல்லிசை மன்னராகட்டும், நடிப்பிசை ரி எம் எஸ் ஆகட்டும், ஜெவலியர் சிவாஜி ஆகட்டும் இவர்கள் பதித்த தடங்கள் கால ஓடத்தின் நடுகற்கள் ஆகும்.
இவர்கள் காலத்தில் மிளிர்ந்த அரசியல்வாதிகள் பிரகாசித்து விட்டு அடங்கிவிடுவர்.
காமராஜ் நாடார் , அறிஞர் அண்ணா எம் ஜீ ஆர் போன்ற சிலரைத் தவிர ஏனையோரை காலம் அமிழ்த்திவிடக் கூடும்.
ஆனால் இவர்களின் அதியுயர் ஆற்றல்களால் இத்துறை விற்பன்னர்களும், கற்றுக்குட்டிகளும் புரட்டும் நிகண்டுகளாகவும், அகராதிகளாகவும் இவர்களே விளங்க இடமுண்டு.
படைப்பு எதுவானாலும் அதில் உயிரப்பு இருக்க வேண்டும். அவ்வாறான உயிர்ப்புள்ள பல்லாயிரம் பாடல்களை பல காலமாக தலைமுறைகளையும் தாண்டித் தந்த இவரது உயிர் இவரது உடலை விட்டு நீங்கியிருக்கலாம்.
ஆனால் இவரது பாட்டாற்றல்கள் பாருள்ள வரை உயிர் வாழும் ஆற்றலுடையவையாகவே உள்ளன.
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன், ஒரு மரமானாலும் பழமுதிர்;ச்சோலையில் மரமாவேன், கருங் கல்லானாலும் தணிகை மலையில் கல் ஆவேன் புல் ஆனாலும் முருகன் அருளால் பூவாவேன் என்ற அன்னாராது ஸப்த ஆன்மா பிரபஞ்ச நாதத்துடன் இணைந்து முருகனின் சேவலுடனும் மயிலுடனும் இசைக்குயிலாக இணைவதாக!
Poonakaran Kuhathasan
kuha9@rogers.com
பூநகரான் 

No comments:

Post a Comment