Wednesday, October 24, 2012

சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்படவிருந்த பலர் இறுதிநேர நீதிமன்ற உத்தரவினால் தப்பினர்!!


சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்படவிருந்த பலர் இறுதிநேர நீதிமன்ற உத்தரவினால் தப்பினர்

பிரித்தானியாவில் இருந்து சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்படவிருந்த பலர் லண்டன் மேல்நீதிமன்றத்தின் இறுதி நேர உத்தரவினால், நாடுகடத்தப்படுவதில் இருந்து தப்பியுள்ளனர்.
நேற்று பிற்பகல், சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் 60 அகதிகளை சிறிலங்காவுக்கு நாடுகடத்த பிரித்தானியா முடிவு செய்திருந்தது.
இதற்கு எதிராக சுமார் 12 சட்ட அமைப்புகள் மேல் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தன.
இந்த மனு மீதான விசாரணையை அடுத்து, தமது கட்சிக்காரர்கள் பலரை நாடுகடத்த தடையுத்தரவு பெற்றுள்ளதாக குறைந்தது மூன்று சட்டஅமைப்புகள் உறுதி செய்துள்ளன.
சிறிலங்காவுக்கு இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால், கைது, சித்திரவதை, உயிர் அச்சுறுத்தல் ஆபத்து இருப்பதாக சட்டவாளர்கள் வாதிட்டிருந்தனர்.
தமது கட்சிக்காரர்கள் மூவர் நாடு கடத்தப்படுவதில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாக டங்கன் லூவிஸ் சட்டவாளர்கள் அமைப்புத் தெரிவித்துள்ளது.
ஜெய்ன் சட்டவாளர்கள் அமைப்பு, ஒருவரின் நாடுகடத்தலை தடுத்து நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையே, சிறிலங்காவுக்கு அகதிகள் திருப்பி அனுப்பப்படுவதற்கு எதிராக, ஹீத்ரோ விமான நிலையத்துக்கு அருகேயுள்ள குடிவரவுத் தடுப்பு நிலையத்துக்கு முன்பாக நேற்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
எனினும் அதில் அதிகளவானோர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment