Saturday, February 25, 2012

இலங்கையர்களை நாடு கடத்தவேண்டாம்!- பிரித்தானியாவிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை!!


இலங்கையின் மனித உரிமைகள் உரியமுறையில் செயற்படுத்தப்படும் வரையில் அடைக்கலம் கோரிய இலங்கையர்களை நாடுகடத்தும் நடவடிக்கையை நிறுத்தவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமது கண்காணிப்பகத்தின் விசாரணைகளின் அடிப்படையில் பிரித்தானியாவினால் நாடு கடத்தப்பட்ட பல இலங்கையர்கள், இலங்கைப் படையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், எதிர்வரும் 28 ஆம் திகதி மேலும் 100 இலங்கையர்களை பிரித்தானிய அரசாங்கம் நாடு கடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது.
எனவே தம்மால் நாடு கடத்தப்படுவோர் சித்திரவதை செய்யப்படாமல் இருப்பதற்கான சர்வதேச கடப்பாட்டை பிரித்தானிய அரசாங்கம் கொண்டிருப்பதாக கண்காணிப்பகத்தின் ஆசிய நிலைப்பணிப்பாளர் பிரட் அடெம்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு பிரித்தானியாவால் நாடு கடத்தப்பட்ட 8 தமிழர்கள், இலங்கைப்படையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதை கண்காணிப்பகம் தமது அறிக்கையில் பட்டியலிட்டுள்ளது.
இவர்களில் ஒருவருக்கு கைவிரல் நகம் பிடுங்கப்பட்டும், சிகரட்டினால் சுடப்பட்டு சித்திரவதை மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரட் அடெம்ஸ் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு அப்பால் கைது செய்யப்பட்ட நாடு கடத்தப்பட்ட சிலர், கைது செய்யப்பட்ட பின்னர் இலங்கை அதிகாரிகளுக்கு கப்பமாக பெருந்தொகை பணத்தை செலுத்திய பின்னரே விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது அதிகாரிகளால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக்குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையில் தம்மிடம் மருத்துவ சான்றிதழ்கள் இருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய நிலைப்பணிப்பாளர் பிரட் அடெம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாடு கடத்தப்படும் இலங்கையர்கள் குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டாம் என்றும் அடெம்ஸ் கோரியுள்ளார்

No comments:

Post a Comment