Friday, December 23, 2011

‘நான் கேரள தமிழன். எனக்கு கருத்து சுதந்திரம் இருக்கு’


சீமான், வைகோ தீக்குளிக்க முயற்சி

நக்கீரன், விகடன், குமுதம் போன்ற வார இதழ்களை படிக்கவே முடிவில்லை. எப்படி இவர்கள் பார்வையில் மட்டும் கேரளாவில் தமிழர்கள் அடிவாக்குகிறார்கள் என்று தெரியவில்லை.

கேரளாவில் ஒரு கோடி தமிழர்கள் இருக்கிறோம். இன்று வரை முல்லைப்பெரியாறுக்காக யாரும் யாரையும் அடிக்கவில்லை என்பது தமிழ்தாயின் மீது சத்தியம். தனிப்பட்ட வைராக்கியத்துக்காக ஒரு சிலர் போடும் ஆட்டத்தை பெரிதுபடுத்தி குளிர் காய்கின்றன பத்திரிக்கைகள். 

கேரள தமிழர்களுக்காக தயவு செய்து தமிழக தமிழர்கள் நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம். தமிழகத்தை விட கேரளாவில் நாங்கள் மிகமிக பாதுகாப்பாக இருக்கிறோம்.

சில உதாரணங்களை சொல்கிறேன்.

தனிநாடு ஒவ்வொரு தமிழனின் பிறப்புரிமைஎன்ற வாசகத்தை எனது வீட்டிலும், வாகனத்திலும் எழுதி வைத்துள்ளேன். அதை பார்க்கும் போதெல்லாம் தமிழக போலீசாருக்கும் மக்களுக்கும் பதட்டம் பற்றிக்கொள்ளும். எதுக்கு இப்படி எழுதியிருக்கிறீங்க, கைது பண்ணீடுவாங்கஎன்று பலரும் சொல்வார்கள். அவர்களுக்கு நான் தரும் ஒற்றை பதில்

‘நான் கேரள தமிழன். எனக்கு கருத்து சுதந்திரம் இருக்கு’ இந்த பதிலுக்கு தமிழக காவல்துறையின் உயர் அதிகாரி உட்பட பலரும் தலைவணக்கம் தந்திருக்கிறார்கள்.

கேரளாவில் முழுமையான கருத்து சுதந்திரம் இருக்கிறது. ஈழம் ஊச்சகட்ட போர் நடந்துகொண்டிருக்கும்போது மேதகு பிரபாகரன் படத்தை கண்டாலே தமிழக காவல்துறையினர் பிடிங்கி கிழித்து விடுவார்கள். படம் வைத்திருப்பவரை தமிழ் தீவிரவாதி என்ற பட்டம் குத்தி வட்டம் போட்டு பின்தொடர்வார்கள். 

ஆனால் கேரளாவில் திருவனந்தபுரத்தில் நடந்த சர்வதேச குறும்பட விழாவில் ஈழம் குறித்த மூன்று குறும்படங்களை வெளியிட்டார்கள்.

இன்று வரை மேதகு பிரபாகரன் படம் பொறித்த ஆடைகளை கேரள தமிழர்கள் கம்பீரமாக அணித்து நடக்கிறோம். அந்த படத்தை பார்த்து தலைவணக்கம் செலுத்திய மலையாளிகள் பலர்.

கேரளாவில் வண்டிபெரியாறு, ஏலப்பாறை, கட்டப்பனை, ஆலுவா, கொச்சி உட்பட பகுதிகளில் காமராசர் சிலைகள் இன்றளவும் கம்பீரமாக இருக்கின்றன. ஆனால் கோவை, ஈரோடு உட்பட பல பகுதிகளில் காமராசர் சிலைக்கு சாக்கு போட்டு மூடி போலீசார் பாதுகாப்பு இருக்கின்றனர். ஒரு சிலைக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத நீங்கள் கேரள தமிழர்களின் பாதுகாப்பு பற்றி ஏன் குடித்து விட்டு ஆடுகிறீர்கள்.  

முல்லைப்பெரியாறுக்காக தமிழகத்தின் போராட்டம் 100% நியாயமானது. ஆனால் அதற்காக இன உணர்வை தூண்டிவிட்டு கலவரம், தீக்குளிப்புகளை அரங்கேற்றுவது ஈனபுத்தி அல்லாமல் வேறு என்ன?

சீமானும், வைகோவும், கொளத்துர் மணியும் தீக்குளிக்கட்டும், அதை விட்டுவிட்டு அப்பாவி மக்களை தூண்டிவிட்டு தீக்குளிக்க வைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

உடனே யாரும் பொங்க வேண்டாம். சீமானும் வைகோவும் தீக்குளிக்க முயன்றால் அதையும் படம்பிடித்து பத்துநாள் செய்தியாக்க ஊடகங்கள் தயாராக இருக்கின்றன.  தினமலர் மட்டும் தீவிரவாதி தீக்குளித்தான் என்று எழுதும் அவ்வளவு தான் வித்தியாசம்.

தமிழர்கர்களே கேரள தமிழக உறவு என்பது மலையாளி தமிழன் என்ற இன உறவோடு நின்றுவிடுவதில்லை. இது 50 லட்சம் கணவன்&மனைவி இரத்த உறவு. 

தமிழகத்தில் உள்ள மலையாளிகளை அடித்துவிரட்டு என்ற உங்கள் போராட்டத்தின் அர்த்தம் என்ன? இந்த 50 லட்சம் குடும்பங்களை பிரித்து சின்னாபின்னமாக்குவதா?, 50 லட்சம் தம்பதிகளை விவாகரத்து செய்து விடலாமா?, 

தயவு செய்து கொஞ்சமாவது அடிப்படையில் யோசியுங்கள்.  

முல்லைப்பெரியாறு போராட்டம் நியாயமானது, ஆனால் அதில் இனவெறியை திணிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும்.  

தமிழக்தில் ஒரு கலவரம் நடந்தால் அது இருபிரிவினர் மோதல் என்று செய்தியாகிறது. ஆனால் இப்போது மட்டும் மலையாளி தமிழனை தாக்குகிறான், தமிழனை மலையாளி தக்குகிறான் என்று செய்திகள் அனல் பறக்கிறது. இத்தகு ஊடகங்களின் செய்தியை நம்பும் மெத்த படித்தவர்களை என்னவென்று சொல்வது?

No comments:

Post a Comment