கௌரவம் படத்தில் சிவாஜி கணேசன் நடித்த வக்கீல் ரஜனிகாந்த் பாத்திரமே ரசிகரால் பெரிதும் விரும்பப்பட்டது,வசூலை அள்ளி குவித்தது,அதே போல 1975 இல் சிவாஜிராவ் ரஜனிகாந்த்தாக திரையுலகில் மட்டுமல்லாமல் ரசிகர் மனதுகளிலும் புயலாய் நுழைந்தார்,அன்று போல இன்று நடிக்காவிடினும் புதுமைநடிகராக இன்றும் பூந்து விளையாடுகிறார் ரசிகர் மனங்களில்!!அவருக்கு இன்று பிறந்தநாள்!!அவருக்கு நல்வாழ்த்துக்கள்!!
தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்து இன்று தமிழகத்தின் சுப்பர் ஸ்டாராகத் திகழும் ரஜினி
கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. தனது பாதையில் இருந்த தடைகள் அனைத்தையும் வெற்றிப்படிக்கட்டுக்களா மாற்றி இன்று இந்த உயரிய நிலையை அடைந்திருக்கிறார்.
அவர் கடந்து வந்த பாதை.
ராமோசி ராவ் காயக்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாக டிசம்பர் 12 1949 அன்று இந்தியாவின் கர்நாடகத்தில் பிறந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.
திரைப்படக்கல்லூரியில் முறையாக நடிப்புப் பயின்றார். இந்நிலையில் பாலச்சந்தரின் ஆபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றினார். இதில் கதவொன்றினைத் திறந்தபடி அறிமுகமானார் ரஜினி. அன்று, தான் திறந்தது திரையுலகின் கதவை என்று பின்னாளில் திரையுலகிற்கு உணர்த்தினார்.
அறிமுகப் படத்தினைத் தொடர்ந்து சில படங்களில் வில்லனாக தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார். முதன் முதலாக புவனா ஒரு கேள்விக்குறி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்கள் மூலம் தன்னை நாயகனாக நிலைநிறுத்திக்கொண்டார் ரஜினி.
ஆன்மிகத்தில் பெரும் ஈடுபாடு கொண்ட ரஜினி காந்த அதனை வெளிப்படுத்தும் வண்ணம் தனது 100 ஆவது படமாக ஸ்ரீ ராகவேந்திரா படத்திலும் 2002ஆம் ஆண்டும் பாபா படத்திலும் விரும்பி நடித்திருந்தார். மேலும், ஒவ்வொரு படமும் முடிந்த பிறகு பாத யாத்திரையாகவே ஸ்ரீ ராகவேந்திரா கோயிலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து வேலைக்காரன், மனிதன், தர்மத்தின் தலைவன் போன்ற ஜனரஞ்சகமான திரைப்படங்கள் மூலம் ஆறிலிருந்து 60 வயது வரையான அனைத்து ரசிகர்களை தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தன் பக்கம் சாய்த்துக்கொண்டார்.
1990ஆம் ஆண்டுக்கு பிறகு தன்னை ஒரு முழு நடிகனாகவும் அதே நேரத்ததில் தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாகவும் பல்வேறு சாதனைகளை சினிமாவில் நிகழ்திக்காட்டினார். நடிகராக மட்டுமன்றி தயாரிப்பாளர், திரைக்கதாசிரியராகவும் சினிமாவில் தன் பன்முகத்தைக் காட்டியுள்ளார்.
மேலும், ரஜினி தமிழக அரசியலிலும் அவ்வப்போது பெரும் தாக்கம் செலுத்தினார். இவரது படங்களிலும் அரசியல் வாடை சற்று தூக்கலாகவே இருக்கும். இதனாலே இவர் அரசியலுக்கு வருவார் என பலரும் ஆருடம் கூறிவருகின்றனர். ஆனால் ரஜினியின் பதில் இன்று வரை வருவேன் ஆனா வரமாட்டேன் என்ற பாணியிலே அமைந்துள்ளது.
சாதாரணமாக தனது வாழ்க்கையை ஒரு பேருந்து இயக்குநராக ஆரம்பித்து இன்று சுப்பர் ஸ்டாராக உயர்ந்த இவரது வளர்ச்சி பலரையும் கவர்ந்து பலர் தங்களது ரோல் மொடலாக இவரை கொள்ள வழிசெய்தது. இதில் இன்றைய தலைமுறை நடிகர்கள் ஏராளமாக உள்ளனர். குறிப்பாக தற்போதைய முன்னணி நடிகர்களான அஜித், விஜய் இருவரும் சுப்பர் ஸ்டாரையே ரோல் மொடலாகக் கொண்டுள்ளனர்.
அரசியலுக்குள் நுழையாவிட்டாலும் பலருக்கு அறக்கட்டளைகள் மூலம் விளம்பரம் இன்றி பல உதவிகளை செய்து சினிமா கடந்து நல்ல மனிதராகவும் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். இவ்வாறு தனக்கென தனி வழியமைத்து திரையுலக ஜாம்பவானாகத் திகழும் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இன்று தனது 62 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ நாமும் சுப்பர் ஸ்டாரை வாழ்த்துவோம்.













No comments:
Post a Comment