Tuesday, November 29, 2011

அரசின் தடையை மீறி விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மாவீரர் நாள் நிகழ்ச்சிகள் - தொல்.திருமாவளவன் தலைமையேற்று நினைவுரையாற்றினார்!

[ திங்கட்கிழமை, 28 நவம்பர் 2011, 08:44.16 PM GMT ]
தமிழகத்தில் மாவீரர் நாள் கொண்டாட அரசு தடைவிதித்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் அத்தடையை மீறி, சென்னை, கோயம்பேடு, வீரநங்கை செங்கொடி அரங்கில், நேற்று மாலை மாவீரர் நாள் நிகழ்ச்சிகளை நடத்தினார்.
கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு மாலை 4 மணிக்கு மணிமாறன் குழுவினரின் பறையிசையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, சிறிவாணி நாட்டியாலயா பள்ளியைச் சேர்ந்த மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்வு நடைபெற்றது. காசிஆனந்தன் எழுதிய "வன்னி மண்ணிலே மயில் கூத்தாடுமா போராடுமா' என்கிற பாடலுக்கும் அறிவுமதி எழுதிய "கார்த்திகை 27' என்கிற பாடலுக்கும் நாட்டியமாடினார்கள்.
தொல்.திருமாவளவன் எழுதிய "பழந்தமிழன் வீரன் இன்னும் பட்டுப்போகவில்லை' என்கிற பாடலுக்கும், அறிவுமதி எழுதிய "வன்னிக்காட்டு வரிசைப் புலி' என்கிற பாடலுக்கும், காசி ஆனந்தன் எழுதிய "வருவான்டா பிரபாகரன் மறுபடியும்', "வானத்திலிருந்து திலீபன் சொல்கிறான்' ஆகிய பாடல்களுக்கும் லோகன் குழுவினர் நடனம் அமைத்து ஆடினார்கள்.
தமிழீழத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களைப் போற்றும் வகையில் மேதகு பிரபாகரன் அவர்கள் சரியாக 6.07க்கு சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி நினைவுரையாற்றுவது வழக்கம். அதே போல சரியாக 6.07 மணிக்கு தொல். திருமாவளவன், மாவீரர்கள் நினைவாக சுடரேற்றி அகவணக்கம் செலுத்தினார். அப்போது புதுவை இரத்தினதுரை எழுதிய "தாயகக் கனவினில் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' என்கிற பாடல் அஞ்சலிப் பாடலாக ஒலிபரப்பப்பட்டது. பாடல் ஒலித்த 10 நிமிடமும் அனைவரும் அமைதியாக எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் முன்னணி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இறுதியாக தொல்.திருமாவளவன் மாவீரர் நாள் உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியை வன்னிஅரசு நெறிப்படுத்தினார். பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன், பொருளாளர் முகமது யூசுப், மாநில நிர்வாகிகள், பாவரசு, பாவலன், தகடூர் தமிழ்ச்செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், கவுதம சன்னா இரா. செல்வம். எழில் கரோலின், சேகுவேரா, ஆதிரை, மாவட்ட நிர்வாகிகள் கபிலன், வீரமுத்து, ஆவிடுதலைச் செல்வன், செந்தில், சாரநாத், யாழினி, செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமான விடுதலைச் சிறுத்தைகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
கொட்டும் மழையிலும், அரசின் தடையை மீறி, தமிழீழத்தில் நடைபெறுவது போலவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய இம்மாவீரர் நாள் நிகழ்வில் மிக எழுச்சியாக அரங்கம் நிறைந்துவழியும் அளவில் விடுதலைச் சிறுத்தைகள் திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment