தன்னை பற்றி சினிமா எடுத்துள்ள தயாரிப்பாளரிடம் 3 கோடி நஷ்டஈடு கேட்டு சாமியார் நித்யானந்தா வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகை ரஞ்சிதாவும் சாமியார் நித்யானந்தாவும் பிடதி ஆசிரமத்தில் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியானது.
இதற்காக கைது செய்யப்பட்ட அவர் இப்போது ஜாமீனில் உள்ளார். அவர் மீது மோசடி, பலாத்கார வழக்குகள் நிலுவையில் உள்ளன. நித்யானந்தாவின் வாழ்க்கையை மையமாக வைத்து "சத்யானந்தா"என்ற சினிமாவை கன்னட இயக்குனர் மதன் படேல் தானே தயாரித்துள்ளார்.
இந்த படத்தால் தனது புகழுக்கு களங்கம் ஏற்படும் என குற்றம்சாட்டி பெங்களூர் சிவில் நீதிமன்றத்தில் நித்யானந்தா வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தும் கூட. படத்தை வெளியிடப் போவதாக மதன் படேல் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் மதன் படேலிடம் நஷ்டஈடு கேட்டு நித்யானந்தா வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் சத்யானந்தா படம் எனது புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் உள்ளது. எனவே படத்தை வெளியிட கூடாது. அவதூறு பரப்பும் வகையில் படம் எடுத்த தயாரிப்பாளர் மதன் படேல், நடிகர் ரவி சேட்டன் ஆகியோர் எனக்கு நஷ்டஈடாக 3 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரான மதன் படேல் "சத்யானந்தா" படம் சாமியார்களை பற்றியது அல்ல. மேலும் நித்யானந்தா கேட்டுள்ள நஷ்டஈடை கொடுத்துவிட்டால் படத்தை வெளியிடலாமா? என்று கேள்வி எழுப்பினார். பின்னர் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
|
No comments:
Post a Comment