அகதிகள் தொடர்பாக மத்திய அரசு உடனடியாக தனியான சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று இந்திய நீதிமன்றம் ஒன்று வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் 20 ஆண்டுகளாகத் தங்கியிருந்த அகதி ஒருவரை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்த இந்திய அரசுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பிலேயே துவாரகா நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.
கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வந்த சந்திரகுமார் (வயது 39) என்பவர், போலிக் கடவுச்சீட்டு மூலம் இத்தாலிக்கு செல்ல முயன்ற போது புதுடெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆறு மாதங்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவரை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்ப இந்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
சிறிலங்காவில் தனக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்று அவர், இந்திய அரசின் நாடுகடத்தும் முயற்சிக்கு எதிராக துவாரகா நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.
ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பை துவாரகா மெட்ரோ பொலிற்றன் மஜிஸ்ரேட் நீதிபதி அருள் வர்மா கடந்த 20ம் நாள் வெளியிட்டார்.
இந்தத் தீர்ப்பில் சந்திரகுமாரை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பக் கூடாது என்று நீதிபதி கூறியுள்ளார். அத்துடன்,
“ பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருக்கும் சிறிலங்கா அகதிகளை வெளிநாட்டினர் என்று கருத முடியாது. அகதிகளை வரவேற்கும் இந்தியா, அவர்களுக்காக தனியான சட்டம் இயற்ற முன்வராதது வருந்தத்தக்கது.
அகதிகளைக் கட்டாயப்படுத்தி தமது நாட்டுக்குத் திருப்பி அனுப்பவும் முடியாது.
அகதிகளுக்கு தேசிய அளவில் சட்டம் இயற்றுவது அவசியம் என்று இந்திய சட்ட ஆணையமும், தேசிய மனிதஉரிமைகள் ஆணையமும் வலியுறுத்தியுள்ளன.
இதனைக் கருத்தில் கொண்டு அகதிகளுக்கு தனியான சட்டம் இயற்ற மத்திய அரசு முன்வர வேண்டும்" என்று நீதிபதி அருள் வர்மா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வாதிட்ட சட்டவாளர் முத்துகிருஸ்ணன் இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில்,
“திகார் சிறையில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு சட்ட ஆலோசனை கிடைப்பதில்லை. இதனால் வேறு வழியில்லாமல் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக உள்ளது.
அகதிகள் விவகாரத்தில் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று சட்ட ரீதியாகப் போராட உள்ளேன்.
நீண்டகாலமாக இந்தியாவில் வாழும் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். இந்தத் தீர்ப்பினால் சிறையில் வாடும் இலங்கை அகதிகள் நாடு கடத்தப்படமாட்டார்கள் என்று நம்புகிறேன்“ என்று தெரிவித்தார். |
No comments:
Post a Comment