Wednesday, August 31, 2011

மர்ம மனிதர் நடமாட்டத்தினால், அச்சத்துடன் இரவைக் கழிக்கும் யாழ். குடாநாட்டு மக்கள்!

[ புதன்கிழமை, 31 ஓகஸ்ட் 2011, 06:28.29 AM GMT ]
விஷமிகள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களினால் யாழ். குடாநாட்டில் ஆங்காங்கே இரவு நேரங்களில் ஏற்படும் பதற்றம் நேற்றும் பல பகுதிகளில் ஏற்பட்டது. பொல்லுகள், தடிகளுடன் பல்வேறு இடங்களிலும் இளைஞர்கள் காவலில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தூர், சிறுப்பிட்டிப் பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு வேளைகளில் ஓடித்திரிந்து மக்களுக்கு அச்சமூட்டிய வாகனம் ஒன்றை அந்தப் பகுதி இளைஞர்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு மடக்கிப் பிடித்தனர்.
கலைமதி கிராமத்தினுள் புகுந்த இந்த வாகனத்தைத் துரத்திச் சென்ற இளைஞர்கள் தாக்குதல் நடத்தி அதனை மடக்கினர் என்று கூறப்பட்டது. இதில் அந்த வாகனத்தின் முன்பக்கக் கண்ணாடிகள் நொருங்கின.
இந்த வாகனத்தில் வந்த சிலர் மூன்று தினங்களாக இரவில் மக்களின் வீடுகளின் கதவுகளைத் தட்டிவிட்டு ஓடிவிடுவர் என்று மக்கள் தெரிவித்தனர். இதனால் மக்கள் மத்தியில் பயமும் பீதியும் ஏற்பட்டிருந்தன.
இந்த வாகனத்தின் சாரதி சிறுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்தவர். தமிழராக இருந்த போதும் நன்கு சிங்களம் பேசக்கூடியவர் என்று மக்கள் கூறுகின்றனர். முதல் நாளே இரவு நேரத்தில் இவரை இந்தப் பகுதியில் கண்ட இளைஞர்கள் சிலர் இவ்வாறு தேவையற்று நடமாடவேண்டாம் என்று எச்சரித்தனர் என்றும் கூறப்படுகிறது.
எனினும் சம்பவதினம், இவருடன் வாகனத்தில் வந்தார்கள் என்று கூறப்படும் நபர்கள் ஊருக்குள் சென்றனர் என்று மக்கள் கூறுகின்றனர். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது பற்றித் தகவல் இல்லை.
திங்கள் இரவு இந்த வாகனம் ஊருக்குள் நுழைந்ததும் அதனை மடக்க இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் துரத்தியுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதித் தள்ளிவிட்டுத் தப்ப முயன்ற வாகனம் அவசரத்தில் பிரதான வீதிக்குச் செல்லும் ஒழுங்கை மாறி ஏறியதால் மேற்கொண்டு பயணிக்க முடியாது சிக்கிக் கொண்டதாக ஊரவர்கள் கூறினர்.
வாகனமும் சாரதியும் அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நேற்றிரவு வரை வாகனம் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், சாரதி விடுவிக்கப்பட்டார்.
வாகனத்தை மடக்கியபோது விசாரித்ததில் தான் கூலிக்கு வாகனம் ஓட்டும் ஒருவரே தவிர வேறு எதுவும் தனக்குத் தெரியாது என்று சாரதி தெரிவித்துள்ளார்.
வாகனத்தில் இலக்கத் தகடுகள் தெளிவாக உள்ளன. அதனைக் கொண்டு விசாரணை நடத்தி வாகனம் யாருக்குச் சொந்தமானது, அதில் வந்தவர்கள் யார் என்பதைப் பொலிஸார் கண்டுபிடிக்க முடியாதா? ஏன் அவர்கள் மெத்தனமாக இருக்கிறார்கள்?'' என்று கேள்வி எழுப்பினார் ஊரவர் ஒருவர்.
அச்சுவேலிப் பொலிஸாருடன் இது குறித்துத் தொடர்பு கொண்டபோதும் உத்தியோகபூர்வமாகத் தகவல்கள் எதனையும் பெற முடியவில்லை.
இதற்கிடையே, அச்சுவேலி வடக்குப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் இருவரின் நடமாட்டம் காணப்பட்டதாக நேற்றிரவு பதற்றம் ஏற்பட்டது. மக்கள் ஒன்று திரண்டு அவர்களைப் பிடிக்க முயன்றபோதும் அச்சுவேலி வடக்குப் பகுதியில் கிழக்குப்புறமாக உள்ள வயல்வெளிகள் ஊடாக அவர்கள் ஓடி மறைந்தனர் என்று மக்கள் கூறுகின்றனர்.
அச்சத்துடன் கழியும் இரவு.
மானிப்பாய், சுதுமலை, மடத்தடி ஆகிய பகுதிகளில் இனந்தெரியாதோரின் நடமாட்டம் அடுத்தடுத்து இடம்பெறுவதால் இந்தப் பகுதி மக்கள் பீதியடைந்துள்ளதுடன், இரவு நேரங்களில் தூக்கமின்றி விழித்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
மானிப்பாய் எரிபொருள் நிலையத்திற்குப் பின்புறமாகவுள்ள ஒரு வீட்டிற்கு இரவு ஒரு மணிபோல் சென்ற இனந்தெரியாதோர் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளனர்.
அச்சமடைந்த வீட்டுக்காரர் அவலக் குரல் எழுப்பியதும் அவர்கள் ஓடி மறைந்து விட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இதே போல் சுதுமலை மாப்பியன் வீதியிலுள்ள வீட்டிற்கு இரவு 12 மணிபோல் சென்ற இனந் தெரியாதோர் அங்கிருந்தவர்களைக் கதவைத் திறக்கும் படி அழைத்தார்கள்.
இது குறித்து வீட்டில் இருந்தவர்கள் தொலை பேசி மூலம் அருகாமையில் வசிக்கும் உறவினர்களுக்கு அறிவித்ததும் அவர்கள் ஓடித் தப்பியுள்ளனர்.
சுதுமலை வடக்கில் மடத்தடி என்னும் இடத்தில் இரவு நேரம் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியவர்களை அந்தப் பகுதியிலுள்ள இளைஞர்கள் துரத்திச் சென்ற போது அவர்கள் ஓடி மறைந்துவிட்டனர்.
கிராமங்கள் தோறும் அடுத்தடுத்து நடைபெற்று வரும் இந்தச் சம்பவங்களால் மக்கள் நிம்மதி இழந்ததுடன் தூக்கமின்றித் திண்டாடுகின்றார்கள்.

No comments:

Post a Comment