Wednesday, August 31, 2011

யாழ் பஸ் நிலையத்தில் அழுதுகொண்டு நின்ற 13 வயதுச் சிறுமி !

31 August, 2011
தான் நிற்கும் இடம் தெரியாமல் யாழ் பஸ் நிலையத்தில் அழுதுகொண்டிருந்த 13 வயதுச் சிறுமியை குடும்பப் பெண் ஒருவர் யாழ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவது.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை யாழ் பஸ் நிலையத்தில் தனிமையில் நின்று அழுதுகொண்டிருந்த 13 வயதுச் சிறுமியான பிரசாந்தினியை மல்லாகத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் ஆறுதல் கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு பாதுகாப்பாக தங்கவைத்துள்ளார். மறுநாள் (நேற்று) காலை யாழ் பொலிஸ் நிலையத்திற்கு பிரசாந்தினியை அழைத்துவந்த மேற்படி அந்தக் குடும்பப் பெண் நடந்தவற்றைக் கூறி பிரசாந்தினியை தன்னுடனே விட்டு விடுமாறு கோரியுள்ளார். இதனை மறுத்த பொலிசார் பிரசாந்தினியை தாமே பொறுப்பேற்றனர்.
இதன் பின்னர் அச் சிறுமியிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது அச் சிறுமி தான் வன்னி மாவட்டம் புதுக்குடியிருப்பினைச் சேர்ந்தவர் என்றும் நடைபெற்று முடிந்த யுத்தத்தின் போது முள்ளிவாய்காலில் தனது தாய், தந்தை உறவினர்களை இழந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் வவுனியா செட்டிக்குள இராமநாதன் முகாமில் இருந்து தனது அக்கா முறையுள்ள உறவினருடன் கொழும்பு சென்று இவ்வளவு காலமும் வசித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பில் தன்னை வைத்து பராமரித்த அக்கா தற்போது வெளிநாடு செல்ல இருப்பதால் என்னைக் கொண்டு வந்து பருத்தித்துறை நெல்லியடியில் விட்டுவிட்டு சென்றார் எனத் தெரிவித்த சிறுமி கதறி அழுதும் உள்ளார்.

நெல்லியடியில் தனது தூரத்து சொந்தக்காரர்களை தன்னால் தேடிப்பிடிக்கமுடியவில்லை என்றும் தான் இருக்கும் இடம் தெரியாமல் சுற்றித்திரிந்து கடைசியில் இங்கு வந்து சேர்ந்தேன் என்றும் அவர் கூறியுள்ளார். யாழ் பஸ் நிலையத்தில் அழுதுகொண்டு இருக்கையிலேயே அந்த அம்மா என்னை தன்னுடைய வீட்டிற்கு கூட்டிச் சென்றார் என்றும் தெரிவித்துள்ளார். இந்தப் 13 வயதுச் சிறுமியின் நிலையைப் பார்த்தீர்களா தமிழர்களே. புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் இதுபோன்ற சிறுவர்களுக்கு தம்மாலான உதவிகளைச் செய்யவேண்டும். மாதம் ஒரு 10 பவுன்களை அனுப்பினால் கூட அச்சிறுமி தனது கல்வியைத் தொடரமுடியும், ஒரு பாதுகாப்பான இடத்தில் வளர முடியும். இன்னும் எத்தனை எத்தனை பிரசாந்தினிகள் ஈழத்தில் ஆதரவற்று தெருக்களில் நிற்கிறார்களோ தெரியவில்லை.

No comments:

Post a Comment