Saturday, June 25, 2011

இசைப்பிரியா ஊடகவியலாளரா… புலி உறுப்பினரா… என்பதல்ல இப்போதுள்ள பிரச்சினை…!!! விஸ்வா

By athirady • June 25, 2011

இசைப்பிரியா புலிகளின் ஊடகப்பிரிவில் பணியாற்றியவர் அல்லவென்றும், அவர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் எனவும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இல்லை அவர் ஒரு ஊடகவியலாளர் மட்டும்தான் என புலம்பெயர் தளத்திலிருந்து வெளியாகும் இணையத்தளங்கள் சில தெரிவிக்கின்றன.
இப்போது இது ஒரு பிரச்சினையே அல்ல. இசைப்பிரியா விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியில் பணியாற்றியவர் என்பதும் உண்மை. அதே வேளையில் அவர் ஒரு விடுதலைப்புலி உறுப்பினராக இருந்தவர் என்பதும் உண்மை. இது வன்னியில் வாழ்பவர்களுக்கு நன்கு தெரியும். இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை.
இசைப்பிரியா என்ற அந்தப் பெண் கொல்லப்பட்டு நிர்வாணமான நிலையில் மிக அலங்கோலமாக கிடக்கும் காட்சி ‘சனல்4’ ஆவணப் படத்தில் காட்டப்பட்டுள்ளது என்பதுதான் பிரச்சினை. அவர் அப்போது அணிந்திருந்தது விடுதலைப் புலிகளின் சீருடையல்ல. சுடிதார் உடையையே அவர் அணிந்திருந்திருந்தார். சாதாரணமாக பார்க்கும் போது அவரை ஒரு போராளி என சொல்ல முடியாது. அவரது தோற்றம் அப்படி. அவ்வாறான பெண் கொலை செய்யப்பட்டு உடைகள் களையப்பட்ட நிலையில் உடல் ஆவணப்படத்தில் காட்டப்படுகின்றது.
இசைப்பிரியா எவ்வாறு படையினரிடம் அகப்பட்டார்? பிடிபட்டாரா சரணடைந்தாரா என்பது எல்லாம் சரியாகத் தெரியாது. அவர் படையினரால் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவே நம்பப்படுகின்றது. இதேபோல் பலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். பல பெண்போராளிகள் கொல்லப்பட்ட நிலையில் அவர்களது ஆடைகள் களையப்பட்டு வாகனங்களில் படையினரால் ஏற்றப்படுகின்ற காட்சிகள் ‘சனல்4’ ஆவணப்படத்தில் காட்டப்படுகின்றன. அத்துடன் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆண், பெண் போராளிகள் கொல்லப்படுகின்ற காட்சிகளும் காட்டப்படுகின்றன. இது தொடர்பாக ஆராய்வதும், சம்பந்தப்பட்டவர்களை நீதிக்குமுன் நிறுத்த வேண்டியதும் தான் தற்போது அரசாங்கத்திற்கு உள்ள பொறுப்பு.
இதனைத்தான் ஐ.நாவும், சர்வதேச சமூகமும், மனித உரிமைகள் அமைப்புகளும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக் கொண்டிருக்கின்றன. இலங்கை அரசாங்கம் தங்களுக்குள்ளேயே இதனை விசாரித்து இதற்கான பரிகாரம் காணப்பட வேண்டும் என்றே கேட்கப்பட்டுள்ளது. இல்லாது விட்டால் சர்வதேச விசாரணைகளுக்கு முகம் கொடுக்கவேண்டி வரும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை ஒரேயடியாக மறுக்கின்றது இலங்கை அரசாங்கம். ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட அனைத்தையும் மறுக்கின்றது. ‘சனல்4’ ஆவணப்படத்தில் காட்டப்படும் காட்சிகள் அனைத்தையும் பொய்யெனக் கூறுகின்றது. இதுதான் இப்போதுள்ள பிரச்சினை.
ஐ.நா நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டவை உண்மையானவையே. அரசபடைகள் புரிந்த போர்க் குற்றங்கள் மட்டுமல்ல விடுதலைப் புலிகள் புரிந்ததாக வெளிப்படுத்தப்பட்டுள்ள போர்க் குற்றங்களும் உண்மையானவையே. இவ்விடயங்கள் வன்னியின் இறுதிக்கட்டப் போருக்குள் சிக்குண்டு மீண்ட மக்களுக்கு அதிகம் தெரியும். அரச படைகள் போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை என அரசாங்கம் கூறிக்கொண்டிருப்பதும் தவறானது. விடுதலைப்புலிகள் அவ்வாறு குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை என வெளிநாடுகளிலுள்ள புலிகளின் ஆதரவாளர்கள் கூறுவதும் தவறானது. விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் தலைமையும் அழிக்கப்பட்டுவிட்டன. எஞ்சியவர்கள் பலர் சரணடைந்து அரசாங்கத்தினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு புதிய வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
விடுதலைப் புலிகளின் போர்க் குற்றங்கள் குறித்து பதில் சொல்ல அந்த இயக்கம் இல்லை. ஆனால், அரசாங்கம் தம்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளது. தாங்கள் போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை. சரணடைந்த போராளிகளை படையினர் மனிதாபிமான முறையில் நடத்தியுள்ளார்கள் அவர்கள் புனர்வாழ்வாளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு வருகின்றார்கள் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறுகின்றார். உண்மையில் படைகள் இறுதிக்கட்டப் போரில் மனிதாபிமான முறையில் நடந்து கொண்ட சம்பவங்களும் இடம்பெற்றுத்தான் உள்ளன. வன்னியில் போர் முடிவிற்கு வந்த வேளையில் சரணடைந்த போராளிகள் பலர் மனிதாபிமான முறையில் நடத்தப்பட்டு அவர்கள் தடுப்பு முகாம்களில் நல்ல முறையில் பராமரிக்கப்பட்ட விடயங்களும் நடைபெற்றுள்ளன.
போர் முடிவுற்று, வன்னியிலிருந்த மக்கள் முகாம்களுக்குள் வசித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் வவுனியா வைத்தியசாலையின் ஒரு விடுதியில் பல போராளிகள் காயப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் ஒருவர் தனது அனுபவத்தைத் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டத்தில் மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். போராளிகள் சரணடைந்து கொண்டிருக்கின்றனர். காயப்பட்ட போராளிகளை கைவிட்டு விட்டு அவர்கள் சரணடைந்து கொண்டிருக்கின்றனர். ஆங்காங்கே காணப்பட்ட ‘பங்கர்’களுக்குள் காயப்பட்ட போராளிகள் முனகிக்கொண்டிருக்கின்றனர். நடந்து செல்ல முடியாதபடி காயங்கள். அது மட்டுமல்ல. நான்கைந்து நாட்களாக உணவுமில்லை. அவ்வேளையில் அவர்களை நோக்கி படையினரின் ஒரு குழுவினர் ஒடி வந்து கொண்டிருக்கின்றனர். தங்களை சுட்டுக்கொல்லப் போகின்றார்கள் என்றே அந்த காயப்பட்ட போராளிகள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் சாவதற்கு தயாரான நிலையில் – எதுவுமே செய்யமுடியாத கையறு நிலையில் இருந்த வேளையில் அவர்கள் சற்றும் எதிர்பாராத சம்பவம் நடைபெறுகின்றது. வந்தவர்கள் சிறிலங்காப் படை மருத்துவப்பிரிவைச் சேர்ந்தவர்கள். உடனடியாக அந்தந்த இடங்களிலேயே வைத்து காயங்களுக்கு மருந்திட்டு அவர்களை மீட்டுச் செல்கின்றனர். அவர்கள் அனைவரும் வேறு ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உணவு வழங்கப்படுகின்றது. பின்னர் அவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்படுகின்றனர். இவை சம்பவத்தில் காயப்பட்டு மீட்கப்பட்ட போராளி ஒருவர் தெரிவித்தவை.
தற்போது தடுப்பு முகாம்களிலிருந்து விடுதலையாகி வரும் சிலரிடம் உரையாடுகின்ற போதும் இவை தெரிய வருகின்றன.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த சில முக்கியமான – மூத்த போராளிகள் கூட தற்போது விடுதலையாகி வன்னியில் நடமாடிக் கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது. எனவே, ஜனாதிபதி கூறியவையும் உண்மையானதே. ஆனால், பலர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு களத்தில் கொல்லப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. அவற்றை ஜனாதிபதியும் அரசாங்கமும் அடியோடு மறுப்பதுதான் தவறானது. படையினரில் முழுப்பேரும் குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை என்றாலும் சில பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். இதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குற்றவாளிகள் இனங்காணப்படுவதோடு இக்குற்றச்செயல்களை வழிநடத்திய உயரதிகாரிகளும் இனங்காணப்பட்டு நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும். ஆனால், இதனை செயற்படுத்த அரசாங்கம் தயங்குகின்றது. சர்வதேச அழுத்தங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வர தமக்கு ஆதரவாக சில வெளிநாடுகளை துணைக்கழைக்க அரசாங்கம் முயன்று வருகின்றது. குறிப்பாக சீனாவையும் ரஷ்யாவையும் அரசாங்கம் முழுவதுமாக நம்பியிருக்கின்றது. ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் ஒரு நிலை ஏற்பட்டால் அதனைத் தடுக்க இவ்விரு நாடுகளும் இலங்கைக்கு சார்பான நிலைப்பாட்டை எடுத்து அதனைத் தடுக்கலாம். ஆனாலும் மேற்குலக சமூகம் வேறு சிலவழிகளில் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
நன்றி! தேசம் நெட்  

No comments:

Post a Comment