Friday, July 13, 2018

புதிய பூதத்தை வெளியே கொண்டுவந்துள்ள விஜயகலா! தந்திர நரியின் எந்திர விளையாட்டு இது!


“கிணறு வெட்ட பூதம் வெளிவந்தது என்பது பழமொழி” பூதம் வெளிவர வேண்டும் என்பதற்காகவே கிணறு வெட்டப்பட்டது என்பது இன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் புது மொழியாக இருக்கிறது.
கடந்த முற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக, தமிழீழ விடுதலைப் புலிகள் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 2009ம் ஆண்டு தமிழ்த் தேசிய அரசியல் அரங்கிலிருந்து புலிகள் ஆயுத ரீதியாக அகற்றப்பட்டிருந்தாலும், அவர்களுக்குப் பின்னரான ஒரு பெரு வெளி தமிழ்த் தேசிய அரசியலில் காணப்படுகின்றது என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.
விரும்பியோ விரும்பாமலோ புலிகளின் வளர்ச்சியில் ஆரம்ப காலங்களில் இந்தியாவின் பங்கிருந்தது. அது இந்திய அரசின் பூகோள நலனை மையமாகக் கொண்டது. புலிகளை வைத்து ஆசிய அரங்கில் காய் நகர்த்தல்களை அன்றைய மத்திய அரசாங்கம் செய்தது.
எனினும் பின்னர் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது. புலிகள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற மனநிலைக்கு இந்திய அரசாங்கம் வந்தாலும், புலிகளின் தேவை இந்தியாவிற்கு இன்றளவும் இருக்கிறது என்பது, யுத்த முடிவிற்குப் பின்னரான சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்ததன் பின்னர் உணரப்பட்டது.
இன்று புலிகள் ஆயுத ரீதியாக அழிக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் கடந்தும், புலி என்ற வார்த்தையை மகிந்த ராஜபக்ச தரப்பும் சரி, ரணில் விக்ரமசிங்க தரப்பினரும் சரி கைவிடுவதாக தெரியவில்லை.
மீண்டும் புலிகள் வருவார்கள், நாட்டின் இறையான்மைக்கு ஆபத்து வருகிறது, புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதே தவிர, சர்வதேச நாடுகளில் புலிகள் இயங்கிக் கொண்டிருக்கிறார் என்று தன்னுடைய பிரசாரத்தை மேற்கொண்டிருக்கும் ராஜபக்ச தரப்பு, அதிகாரத்தைக் கைப்பற்ற புலிகளை நினைவுபடுத்துகிறது.
மறுபுறத்தில், ஆட்சியேற்று மூன்றாண்டுகள் கடந்தாலும், பெருமளவிலான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அரசாங்கம் காலத்தை வீணடிக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கிறது. இன்னொரு புறத்தில் ஊழல் பிரச்சினை அரசாங்கத்திற்கு தலையிடியாக மாறியிருக்கிறது.
இவையொருபுறமிருக்க, கூட்டமைப்பினருக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்னும் அழுத்தமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கத்திற்கு கொடுத்த ஆதரவினை நீக்க வேண்டிய நிலைவரும் என்றும் எச்சரித்திருக்கிறார்.
குறிப்பாக வடக்கில் இருந்து இராணுவ வீரர்களை வெளியேற்றுவது என்பது கூட்டமைப்பின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று. ஆனால், அரசாங்கம் இராணுவத்தினை வெளியேற்றினால், மகிந்த ராஜபக்சவின் வலைக்குள் வீழ்ந்துவிடுவோம் என்பதில் தெளிவாக இருக்கிறது.
எப்பாடு பாட்டேனும் வடக்கிலிருந்து இராணுவத்தினை வெளியேற்றும் முடிவினை அராசாங்கம் நிறைவேற்றாமல் காலத்தை இழுத்தடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது.
வடக்கில், தொடர்ந்தும் வாள் வெட்டுக்களும், குழுச் சண்டைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வளவு இராணுவம், காவல்துறையினர் இருந்தும் அவர்களை இனம் கண்டு கட்டுப்படுத்த முடியவில்லை என்பது வேடிக்கையானது.
முற்பது ஆண்டுகளாக போராடிய பெரும் படை பலம் கொண்ட புலிகளை தேடியழிக்கத் தெரிந்த இராணுவ வீரர்களுக்கு, ஏன் வாள் வெட்டுக் குழுவினரை கட்டுப்படுத்த முடியவில்லை என்கிற யதார்த்தமான கேள்வி எழுவதில் தவறில்லை.
ஆனால், இராணுவம் வெளியேறாமல் இருக்க வேண்டுமானால், வடக்கில் வன்முறைகள் நடந்தேற வேண்டும் என்பது மேலிடத்தின் கணிப்பாக இருக்கிறது.
மறுபுறத்தில், வடக்கில் வன்முறைகள் நிகழ்கின்றது. ஆனால் அரசாங்கம் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறது என்று கூட்டு எதிர்க்கட்சி குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இன்னொருபுறத்தில் இராணுவக் குறைப்புக் குறித்து கூட்டமைப்பும் வடமாகாண சபையும் தொடர்ச்சியாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
இவர்கள் எல்லோரினதும் வாயை அடைத்து, இராணுவத்தினரை நிலை நிறுத்துவதற்கு அரசாங்கம் இறக்கிய நபர் விஜயகலா மகேஸ்வரனாக இருக்கிறார்.
”மீண்டும் புலிகள் உருவாக்கப்பட வேண்டும்.” அவர்கள் காலத்தில் குற்றச்செயல்கள் நடைபெறவில்லை” என்று மேடையில் பேச, அது தெற்கில் பூதாகரமாக மாறியிருக்கிறது.
அமைச்சரின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று ஒரு தரப்பும், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்னொரு தரப்பும் துள்ளிக் குதிக்கிறது.
ஆனால், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பாக மௌனம் காத்துக் கொண்டிருக்கிறார். விஜயகலா மகேஸ்வரன் பேசிய வார்த்தைகளில் குற்றம் காண முடியாது. அவர் தெரிந்தோ தெரியாமலோ புலிகளின் ஆட்சி குறித்ததான உண்மை நிலையினை வெளியிட்டிருக்கலாம்.
ஆனால், இப்பொழுது எதற்காக வெளியிட்டார் என்பது தான் கேள்வி. ஏனெனில், இப்பொழுது, புலிகளின் மீள் எழுச்சி சாத்தியப்படக்கூடிய ஒன்று எனவே இராணுவத்தினரை வடக்கில் இருந்து வெளியேற்ற முடியாது என்று ஆணித்தரமாக அரசாங்கத்தினால் சொல்ல முடியும். அதைத்தான் சொல்லப் போகிறது.
இன்னொருபுறத்தில், அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் விஜயகலா மகேஸ்வரனுக்கு கண்டிப்பாக வாக்குகள் குவியும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
மறுபுறத்திலோ, மகிந்த ராஜக்ச எப்படி புலிகள் வருகின்றார்கள் என்று வாக்குச் சேகரித்தாறோ அதேபோன்று ரணில் விக்ரமசிங்க தரப்பினரும் வாக்குகளை சேகரிக்க புலிவேஷத்தைப் பயன்படுத்துவார்கள்.
ஆக, ஒரு கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தியிருக்கிறார் பிரதமர். வடக்கில் இராணுவக் குறைப்பு சாத்தியமற்ற ஒன்று என்பதை தெள்ளத் தெளிவாக இன்று விஜயகலாவின் பேச்சோடு நிரூபித்திருக்கிறது அரசு.
இலங்கை அரசியலில் ரணில் விக்ரமசிங்க தந்திர நரி என்று முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் குறிப்பிட்டதாகவும், அது தற்போது தான் தமக்கு நன்றாக புரிந்திருப்பதாகவும், அண்மையில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
அது ஒவ்வொரு இடத்திலும் தெள்ளத் தெளிவாக புலப்பட்டு நிற்பதை தமிழர் தரப்பு சிந்தித்துக் கொண்டால், தமிழருக்கு எதிராக இறுக்கப்படும் முடிச்சுக்களை இனம் காண முடியும்.
இல்லையேல், 2009ம் ஆண்டு சம பலத்தை இழந்த தரப்பு, அதற்கு கீழான அனைத்து பலங்களையும் இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை.
You my like this video



No comments:

Post a Comment