Friday, April 6, 2018

அசோகசுந்தரி!!


அசோகசுந்தரி என்பாள், பத்மபுராணத்தில் சிவபெருமான்பார்வதி தம்பதியரின் மகளாக வருணிக்கப்படுகின்றாள். இவள் நகுசன் என்பவரை மணந்ததாகவும், "யயாதி" என்பானின் தாய் என்றும் அப்புராணத்தில் மேலும் சொல்லப்பட்டுள்ளார்.
பெயர்
தனக்கோர் பெண் குழந்தை இல்லையே என்ற உமையவளின் சோகத்தை நீக்கிய அழகி (சுந்தரி) என்பதால் அவளுக்கு "அசோக சுந்தரி" என்ற பெயர் உருவானது.
தொன்மக் கதை
கற்பக மரம் கோரியதைத் தரக்கூடியது என அறிந்து, பார்வதி அதை வேண்டி அசோகசுந்தரியைப் பெற்றதாகவும், அவள் சந்திர வம்சத்து நகுசனை மணப்பாளென்று அன்னை ஆசியளித்தாளென்றும் சொல்லப்படுகிறது. பின் குந்தன் எனும் அசுரன் அவளைக் கவர முயன்றதாகவும், அவ்வசுரனை நகுசன் அழிப்பானெனச் சபித்து, அசோக சுந்தரி மீண்டு வந்ததாகவும், பின் அவ்வாறே நகுசன் அவனை அழித்ததாகவும் அக்கதை, பத்ம புராணத்தில் தொடர்கின்றது. இந்த நகுசனே சிறிதுகாலம் இந்திரப் பதவியில் அமர்ந்திருந்தான்.
சிவன் மகள்
அசோக சுந்தரியை அன்றி, தென்னக நம்பிக்கைகள், காளிதேவியை சிவன் மகளாகச் சொல்கின்றன. அப்பர் சுவாமிகளும் (பொ.பி 7ஆம் நூற்றாண்டு),
நம்பியாண்டார் நம்பிகளும்(பொ.பி 11ஆம் நூற்றாண்டு) பாடிய பாடல்கள் 11ஆம் நூற்றாண்டு வரை கூட, காளி தேவி, சிவன்மகளாகவே கருதப்பட்டிருக்கின்றாள் என்பதற்குச் சான்றாகின்றன. கேரளத்தில் இன்றும் காளியை சிவபுத்திரியாகக் காணும் மரபு தொடர்கின்றது.

No comments:

Post a Comment