Sunday, January 14, 2018

ஏழை குடும்பத்தில் பிறந்து விண்வெளி ஆராய்ச்சி இஸ்ரோ தலைவராக உயர்ந்த சிவன்


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.சிவன், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து உயரிய பதவியை அடைந்துள்ளார். மாங்காயை விற்ற பணத்தில் படித்து முன்னேறியவர் அவர் என, விஞ்ஞானி சிவனின் உழைப்பையும், எளிமையையும் அவரது நண்பர்கள் நினைவுகூர்ந்தனர்.
விஞ்ஞானி கே.சிவனின் சொந்த ஊர் நாகர்கோவிலை அடுத்துள்ள சரக்கல்விளை என்ற கிராமம். இவரது தந்தை கைலாசவடிவு, ஏழை விவசாயி. சிவனுக்கு அண்ணன் ராஜப்பா, ஒரு அக்கா, தங்கை ஆகியோர் உள்ளனர். இவர்கள் 4 பேரையும் விவசாயத்தில் கிடைத்த வருமானத்தைக் கொண்டே படிக்க வைத்துள்ளார் அவரது தந்தை.
சரக்கல்விளையில், தனது 12 வயது முதலே, அதிகாலையில் தந்தைக்கு உதவியாக வயலிலும், தோப்பிலும் அண்ணனுடன் வேலை செய்தவர் சிவன். தனது வீட்டுக்கு எதிரே உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார்.
மகிழ்ச்சியில் சரக்கல்விளை
விஞ்ஞானி சிவன் நாட்டின் உயரிய பதவிக்கு உயர்ந்துள்ளதை அறிந்து, சரக்கல்விளையில் அவரது நண்பர்களும், உறவினர்களும் பூரித்துப் போயினர். சிறுவயதில் இருந்தே சிவனிடம் காணப்பட்ட உழைப்பை பெருமையாகக் கூறினர். சரக்கல்விளையில் விஞ்ஞானி சிவன் படித்த அரசு ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி, ஆசிரியர்கள் கொண்டாடினர்.
தந்தைக்கு உதவி
‘இஸ்ரோ தலைவராக உயர்ந்திருப்பதற்கு அவரது ஒழுக்கம், நேர்மை, உழைப்பு, புத்திக்கூர்மை, எளிமை போன்றவைதான் காரணம்’ என்றார், அவரது உறவினரான சரக்கல்விளை ஓய்வுபெற்ற ஆசிரியர் அய்யாவு(81). அவர் மேலும் கூறியதாவது:
சிவனின் தந்தை கைலாசவடிவு மாந்தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வார். தந்தை மரத்தில் ஏறி மாங்காயை பறித்துப் போட, சிவனும், அவரது அண்ணனும் மரத்தடியில் நின்று மாங்காய் மண்ணில் விழாதவாறு சாக்குப்பையில் சேகரிப்பர். சிவன் 12 வயது சிறுவனாக இருந்தபோதே தந்தையுடன் மாங்காய்களை சந்தைக்கு கொண்டுசென்று விற்று வருவார். மாங்காயை விற்ற காசில்தான் பெரும்பகுதி படிப்பை முடித்தார்.
சமீபத்தில் பக்கவாதம் வந்து திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். பரபரப்பான பணியின்போதும், என்னைப் பார்க்க வந்து அவர் ஆறுதல் கூறியதை மறக்க முடியாது என பூரிப்புடன் கூறினார் அய்யாவு.
அரசு வீடு மட்டுமே
சிவனின் நண்பர் மதன்குமார் கூறியதாவது: எப்போதும் எளிமையாகவும், நட்புடனும் தொடர்பில் உள்ளார். எந்த காரியத்துக்கும் சிபாரிசு போன்றவற்றை அவர் விரும்புவதில்லை. ஊருக்கு வந்தாலும் ஆடம்பர விழாக்களில் பங்கெடுக்க விரும்பமாட்டார்.
அவருக்கென்று திருவனந்தபுரத்தில் அரசு கொடுத்த வீடு மட்டுமே உள்ளது. சமீபத்தில் அவரது அண்ணன் ராஜப்பா உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். கிராமத்து மக்களோடு மக்களாக துக்க நிகழ்ச்சியில் எளிமையாக பங்கேற்று சென்றார். பூர்வீக வீட்டில் அண்ணனின் குடும்பத்தினர் உள்ளனர். அவரது அக்கா சரஸ்வதி, தங்கை மகேஸ்வரி ஆகியோர் பக்கத்து கிராமங்களில் வசிக்கின்றனர்.
2 மகன்கள்
சிவனுக்கு சித்தார்த், சிஷாந்த் என்ற 2 மகன்கள். சித்தார்த் பி.டெக். முடித்து விட்டு வேலைக்கு முயற்சி செய்தபோது பல நிறுவனங்கள் சிவனை தொடர்புகொண்டு பணி வழங்க முன்வந்தன. அப்போது, தனது மகன் தகுதி அடிப்படையில் பணியில் சேரட்டும். சிபாரிசில் பணி கிடைப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்று சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டார். சிஷாந்த் அனிமேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார்.
சென்னை எம்ஐடியில் ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங்கில் நல்ல மதிப்பெண் எடுத்து சிவன் தேர்ச்சிபெற்றபோது, இவரது ப்ராஜக்ட் நுட்பங்களைப் பார்த்து அமெரிக்கா, ரஷ்யா போன்ற வெளிநாடுகளில் இருந்து அதிக சம்பளத்துக்கு வேலை கிடைத்தது. ‘இந்தியாவில் குக்கிராமத்தில் பிறந்த நான், எனது நாட்டுக்கே எனது அறிவை பயன்படுத்துவேன்’ என்று கூறி அவற்றை மறுத்துவிட்டார். அந்த உணர்வுதான், அவரை இந்திய மக்கள் அனைவரின் அன்பை பெறும் அளவுக்கு உயரிய பொறுப்பை கொடுத்துள்ளது என்றார் மதன்குமார்.
இஷ்ட தெய்வம்
‘சரக்கல்விளையில் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்து வணங்கிய பின்பே, அனைத்து காரியங்களிலும் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் சிவன். ஒவ்வொரு முறையும் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே இக்கோயிலில் வந்து பூஜை செய்து செல்வார். அவரது விஞ்ஞான சாதனை குறித்து நண்பர்கள் பெருமையாக பேசினால், “எல்லாம், அந்த பத்ரகாளியம்மன் அருள்தான். எனது உழைப்பு இரண்டாம்பட்சம்” என தன்னடக்கத்துடன் கூறுவார்’ என்றார் அவரது நண்பர் தினகரன்.
- Thehindu

No comments:

Post a Comment