Monday, December 18, 2017

சுவிற்சர்லாந்து நடைபெற்ற இராசநாயகம் ஐயா அவர்களுக்கான நினைவேந்தல் வணக்க நிகழ்வு


சுவிற்சர்லாந்து பேர்ன் நகரில் தமிழ்மக்கள் மனங்களில் என்றும் வாழும் பெருமனிதன் திருவருள்சேர் திருநாவுக்கரசு இராசநாயகம் ஐயா அவர்களுக்கான நினைவேந்தல் வணக்க நிகழ்வு.
கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரச அதிபரும், வடமாகாண பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளரும், மகாதேவா சிறுவர் இல்லத்தின் தலைவருமான மதிப்பிற்குரிய திருவருள்நிறை திருநாவுக்கரசு இராசநாயகம் ஐயா அவர்கள் 02. 11. 2017 வியாழக்கிழமை அன்று இறையிணையடி அடைந்திருந்தார்.
இவர் ஈழமண்ணின் விடுதலைப்போர்க் காலத்திலும், பெரும்போர் அழிவின் பெருந்துன்பக் காலத்திலும், பல்பணிகள் தன் வலுவிற்கு அப்பால் ஆற்றிய உயர்ந்த பண்புள்ள மனிதனாவார். ஈழவிடுதலைப் போரின் சான்றுகளாகவும், பல்வேறு காரணங்களால் வறுமையிலும், பெற்றோர், உற்றார், உறவினர் இழந்து இடுக்கண் நிறைந்த வாழ்வியற்சூழலில் ஆட்பட்ட பலநூறு இளந்தமிழ்ச் செல்வங்களை பொறுப்பேற்று, தனது ஆளுமையினால் கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லப்பணியினை சிறக்கச் செய்து ஆற்றற்கரிய பெரும் பணியில் தன்னையிழந்து உழைத்து இப்பெருமான் விண்ணுலகு எய்தியுள்ளார்.
சைவநெறிக்கூடம் இப்பெருமகன் நினைவினை நெஞ்சில் ஏந்தி, இவருடன் இணைந்து பல்பணிகள் ஆற்றிய தமிழ் அமைப்புக்களுடனும், நற்தொண்டாற்றும் செந்தமிழ் உள்ளங்களுடனும் இணைந்து நினைவேந்தல் வணக்க நிகழ்வினை ஐரோப்பாத்திடலில் அமைந்துள்ள ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் மேல் மண்டபத்தில் 17. 12. 2017 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 15.30 மணிமுதல் நடைபெற்றது.
தமிழ்ப் பாடசாலைகள், சைவக்கோவில்கள், தமிழ்ப்பொது அமைப்புக்கள் பிரதிநிதிகளும், கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லப் பொதுப்பணிகளில் கொடை வழங்கிய அன்பர்களும், பொது நன்நோக்கு கொண்ட தனிநபர்களும், இராசநாயகம் ஐயாவின் பயிணினைப் போற்றும் இளையோர், முதியோர் எனப் பல் தரப்பினரும் பங்கெடுத்து நினைவு வணக்கம் செலுத்தினர்.
நிகழ்வின் முதற் தொடக்கமாக சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் தேவாரம் ஓதி அதனைத் தொடர்ந்து பொதுச்சுடரினை ஏற்றினார்.
பல் அமைப்புக்களைச் சேர்ந்த அன்பர்கள் திருவருள்சேர் இராசநாயகம் ஐயா நினைவாக 11 சுடர்விளக்கினை ஏற்றினர். அன்னாரின் உருவப்படத்திற்கு அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் திருமதி. தர்மசீலன் கலாமதி அவர்கள் மாலை அணிவித்தார்.
மாலை அணிவித்தலைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அடுத்து வருகை தந்திருந்த அனைவரும் மலர்களால் நினைவு வணக்கம் செலுத்தினார்கள்.
ஈழத்தில் இருந்து உருவாக்கி அளிக்கப்ட்ட நீத்தார் நிகழ்வு நினைவு வணக்க உரைகளுடன் தொகுக்கப்பட்ட விவரண ஒளிக்காட்சியாக மணடபத்தில் வெண்திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அன்னாரின் தொண்டினை விளக்கியதுடன், அவரின் பன்முக ஆற்றலை எடுத்தியம்பும் நிகழ்க்காட்சி விவரணமாக இது அமைந்தது. நேரில் சென்று வணக்கம் செலுத்தமுடியாத எமக்கு நேரில் நிகழ்வில் பங்கெடுத்த உணர்வினை இந்நிகழ்க்காட்சி அளித்து இங்கு குறிப்பிடத்தக்கது.
விவரண நிகழ்க்காட்சியினைத் தொடர்ந்து நினைவு வணக்க உரையாற்ற வருகை அளித்திருந்த திரு. இனியவன், திரு. குனநாயகம் சற்குணமோகன் (தலைவர் - சூரிச் நட்புறவுச்சங்கம்;), திரு. சதாசிவம் அற்புதராஜா (அருள்மிகு கதிர்வேலாயுதசுவாமி திருக்கோவில் சென்.மார்க்கிறேத்தன்), திரு. பொன்னம்பலம் முருகவேள், ஆசிரியர் - வள்ளுவன்பாடசாலை பேர்ன், திரு. ஆறுமுகம் பாலச்சந்திரன், திரு. காசிநாhதர் மகேஸ்வன், திருமதி. சுகந்தி மூர்த்தி, திரு. பாஸ்கரன், திரு மகாலிங்கம் ஐயா, திரு. நாகராஜா நல்லையா, திரு. இரட்ணா அவர்கள் வணக்க உரையினை ஆற்றினர்.
நினைவு வணக்க உரையின் சுருக்கம் இவ்வாறு அமைந்தது:
கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் இனவிடுதலை உணர்வாளருமான உயர்திரு.திருநாவுக்கரசு இராசநாயகம் காலமாகிவிட்டார் என்ற துயரச்செய்தி எம் செவிகளுக்கு எட்டியது, மனம் கனத்தது, கடந்தகால நிகழ்கால நினைவலைகள் புரண்டு முட்டி மோதிக் கொண்டன. ஐயாவை தெரிந்த. கூடிப்பழகிய நண்பர்கள் கைபேசியூடாக துக்கங்களைப் பகிர்ந்துகொண்டோம். விம்மல்கள் எழுந்தன, உரிமையுடன் நினைவுகள் எம்மிடையே பகிரப்பட்டன.
பூக்கள் எடுத்து வந்து பொற்பாதங்களில் வைத்துவிட்டு கண் மூடி அமைதிவணக்கம் செலுத்த வேண்டுமென்று நினைக்க மட்டுமே முடிகின்றதது.
ஏன் இந்த பரிதவிப்பு இராசநாயகம் ஐயா யார்? இரத்த உறவா? உடன்பிறப்பா? பள்ளிதோழனா? கழக நண்பனா? இப்படி ஏதுமற்ற இவரது இறப்புச் செய்தி கேட்டு எங்கள் மனங்கள் பாடாய் படுத்தியது ஏன்.... மனிதம் அவரிடம் இருந்தது. மக்கள் நேயம் அவரை வழிப்படுத்தியது. எளிமை அவரை அழகாக வெளிச்சம் போட்டு காட்டியது அது தான் காரணம்.
தனது திட்டமிடல் நுண்ணறிவையும், கல்வி ஆற்றலையும் ஒன்று திரட்டி ஏழை மக்களின் வாசற்படிகளில் நின்று கொண்டு நல் வாழ்வினை தேடிகொடுத்தார்.
குழந்தைகளை அள்ளி அணைத்தார். முதியோரை காத்து கனம் பண்ணினார். கற்றோருடன் கலந்து வாழ்ந்தார். அதிகாரிகளுக்கு ஆசானாய் வாழ்ந்து காட்டினார்.
சமூக சூழ்நிலைகள், சமூக கட்டமைப்புக்கள் சீர்குலைந்து மக்களின் வாழ்வியல் நீண்டகாலமாக தடைப்பட்டிருந்த போர்ச்சுழலை சரியாக புரிந்து கொண்டு அனைவருக்கும் வழிகாட்டியாய் நின்றார்.
வீரஞ்செறிந்த விடுதலை போராட்டத்தின் முதுகெலும்பாக நின்ற எமது பாசத்துக்குரிய மக்கள் சிங்கள அரசு பழிதீர்த்து உணவுத்தடை, மருந்து-பால்மா தடை, போக்குவரத்து தடை, பொருளாதாரத்தடையென தடை பட்டியல் நீண்டபோதும்.
பட்டினிச்சாவு மலேரியா, கொலரா என்ற அவலங்கள் மக்களை வாட்டிவதைத்த போதும் சீரற்ற காலநிலைகளால் வீதிகள் துண்டாடப்பட்டு போக்குவரத்து வசதிகள் தடைப்பட்டு கிடந்த போதும்.
அடிக்கடி ஏற்பட்ட இடப்பெயர்வுகளால் மக்கள் சிதைவுற்று அல்லற்பட்ட போதும் மக்களோடு மக்களாக கலந்து மக்களோடு இடம்பெயர்ந்து மக்களுடனேயே தங்கி வாழ்ந்தார்.
ஒரு அரச உயர் அதிகாரி என்பவர் இப்படியும் வாழக் கூடியவரா? என ஆச்சரியத்துடன் திரும்பிப்பார்க்க வைத்தார்.
எமது மக்களின் நாளாந்த தேவைகளையும், நீண்டகால தேவைகளையும் பெற்றுக்கொள்ளும் பொருட்டு செயலகங்களை தேடி அலைவதை தவிர்த்து செயலகங்களை மக்களின் இருப்பிடங்களை நோக்கி நகர்த்தினார்.
குழந்தையின் பிறப்பு பதிவு முதல் கொண்டு காணிப்பதிவு வரை ஆள் அடையாள அட்டை தொடங்கி வைப்பக கணக்கு வரை மிக நேர்த்தியாக செய்து முடித்து கொடுக்க கிராமத்தின் மத்தியில் நடமாடும் சேவை மையங்களை அமைத்து ஓர் இரு நாட்களில் ஒரு குடும்ப அங்கத்தவருக்கோ அல்லது குடும்பத்துக்கோ தேவையான அரச நிர்வாக தேவைகளை நிறைவேற்றி ஓரு நிர்வாகபுரட்சியை ஏற்படுத்திய கடமை உணர்வும் கொண்ட மக்கள் தொண்டன் இந்த இராசநாயகம் ஐயா.
ஒரு தென்னைமர கன்று ஒரு கனிதரு மரக்கன்று என ஒவ்வொரு வீட்டிற்கும் போய் சேரும்படியான அத்தனைத்தேவைகளையும் பெற்றுக்கொள்வதில் அவரது திட்டமிடல் வழிகாட்டல் யாவும் அவரிடமிருந்த மிகப்பெரிய ஆழமான சமூகப்பார்வையே ஐயாவை சமுகப்பற்றாளனாகவே நிரூபித்துக்காட்டியது.
பட்டினிச்சாவு எனும் ஆபத்தான சூழ்நிலையை புரிந்து கொண்டு பகல் பராமரிப்பு நிலையம் அமைத்து சத்துணவுத்திடத்தை நடைமுறைப்படுத்தி மருத்துவ வசதிகள் ஏட்படுத்திக்கொடுத்து உறைவிடம் அமைத்துக்கொடுத்து மக்கள் தேவையின் ஊடாகப்பயணித்த ஓர் மாசற்ற மனிதன் ஐயா அவர்கள்.
யாவற்றையும் கடந்து வன்னி மண் போருக்குள் சிக்கி தவித்த போது மாவட்ட அரச தலைவர்களை சிறிலங்காவின் பிரதமர் அவர்கள் சந்திக்கும் நிகழ்வு ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ஏனையோர் பிரதமருக்கு முன்னால் வாய் முடி இருக்க இராசநாயகம் ஐயா மட்டும் மக்களின் அவலங்களையும் தேவைகளையும் துணிச்சலுடன் முன்வைக்கின்றார்.
நீர் மட்டும் தான் மக்களைப்பற்றி சிந்திப்பீரோ! எவருக்கும் இல்லாத அக்கறை உமக்கு மட்டும் ஏன் என்ற பிரதமரின் மிரட்டலுக்கு ஆளானவர் ஐயா அவர்கள். அரச தலைவனுக்கு முன்னால் தன் பதவியை விட தனது மக்களின் துன்பங்களை போக்க வேண்டும் என்ற எண்ணமே அவர் ஒரு உயர்ந்த மனிதன் என்பதற்கு சாட்சி.
தமது ஓய்வு காலத்திலும் கூட வசதியையும் வாய்ப்புக்களையும் விட்டுவிலகி தாம் பிறந்து வாழ்ந்த மண்ணில் வாழ்ந்து தம் மக்களுக்கு சேவையாற்ற பெருவிருப்புக்கொண்டார். குழந்தைகள் முதியோரில் அக்கறை கொண்டார். அவர்ளுக்காகவே வாழ்ந்தார்.
சும்மா கிடந்து துருப்பிடிப்பதை விட உழைத்து தேய்வதே மேல், என மக்களுக்காவே அர்ப்பணித்து உழைத்தார் பணியின் நிமித்தம் தேய்ந்தார்.
மரணம் சாபம் அல்ல - அது வரம் என்று தேற்றிக்கொள்வோம். குடும்பத்தாரையும் உறவினரையும் நன்றியோடு எண்ணிப்பார்க்கிறோம். வரலாற்று நாயகனாய் இராசநாயகம் ஐயா எமக்குள் வாழ்வார். அவரது குடும்பத்தினருடன் எங்கள் துயரினை பகிர்ந்து கொண்டு ஐயாவின் ஆன்ம ஈடேற்றத்துக்காக மனமுருகி பிராத்திக்கின்றோம்.
ஐயாவின் நினைவேந்தல் நாளில் சைவநெறிக்கூடம் போரில் பாதிக்கப்பட்ட தாயக மக்களுக்கு சென்றடையும் உதவித்திட்டத்திற்கு வருகை அளித்தோர் விரும்பும் தொகையினை வழங்க கேட்டுக்கொண்டது.
சைவநெறிக்கூடம் இந்நினைவேந்தல் வணக்க நிகழ்வினை ஒன்றிணைத்து நடாத்த முன்வந்த காரணம் இம்மனிதர் தனிமனிதனாக வாழாது எமது இனத்தின் துயர்துடைக்கும் பொதுமனிதனாக, அனைத்து அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு உழைத்ததும், போர் நெருக்கடிக்காலத்திலும், அதற்கு அப்பாலும் துணிந்து தன் பணியினை ஆற்றியதாகும் என விழித்துரைக்கப்பட்டது.
இரசாநாயகம் ஐயா அவர்களால் 18 வயதிற்கு மேற்பட்ட இளையோருக்கு உதவ நிறுவப்பட்ட அறக்கட்டளை தொடர்பாக திரு. பொன்னம்பலம் முருகவேள் தனது உரையில் விளக்கினார். அவ்வறக்கட்டளை தொடர்பான படிவங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் நினைவேந்தல் என்பது உணர்வின் வடிவாக மட்டுமல்லாது ஒவ்வொரு தமிழரும் தம்மாலான உதவிகளை நேரடியாகவோ தொண்டாற்றும் தமிழ் அமைப்புக்கள் வாயிலாகவும் உதவிநல்கி செயலில் இரசாநாயகம் ஐயா வழிதொடர வேண்டுகோள் விடுக்கப்பட்டு, நினைவு வணக்க நிகழ்வு மாலை 18.15 மணிக்கு நன்றியுரையுடன் நிறைவுற்றது.


No comments:

Post a Comment