Saturday, May 6, 2017

அவுஸ்திரேலியாவில் புதிய விசா நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன்மூலம் தமது பெற்றோர்களை தம்முடன் அழைத்து வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதத்திலிருந்து புதிய விசா வழங்கும் நடைமுறை அமுலுக்கு வரும். தமது பெற்றோர்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதற்காக 20,000 டொலர் செலுத்த வேண்டும் இதன்மூலம் 10 ஆண்டுகள் பெற்றோரை தம்முடன் தங்க வைத்திருக்க முடியும்.
Turnbull அரசாங்கத்தின் சமீபத்திய குடிவரவுகள் மீதான மாற்றங்களில் ஒன்றாகப் பெற்றோர்களுக்கான இப் புதிய விசா அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன் படி வருடத்துக்கு சுமார் 15,000 பேர் 20,000 டொலர்களை செலுத்தி தமது பெற்றோர்களை இங்கு அழைத்துவந்து 10 வருடங்களுக்கு தம்முடன் தங்கவைக்கலாம்.
புதிய விசாவின் மூலம் 10 ஆண்டுகள் பெற்றோர்களை தங்க வைத்திருக்கு முடியும். ஆனால் அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாகக் குடியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அந்தக் காலப்பகுதியில் பெற்றோர்களுக்கான தனியார் சுகாதார காப்பீடு (private health cover) பிள்ளைகளால் எடுக்கப்பட வேண்டும்.
பெற்றோர்களுக்கு சுகாதாரக் காப்பீடு எடுக்கின்ற அதேவேளை அவுஸ்திரேலியாவில் தங்கள் பெற்றோர்களுக்கு ஏற்படுகின்ற எந்தவொரு கூடுதல் சுகாதார செலவினங்களுக்கும் பிள்ளைகள் நிதி உத்தரவாதம் (financial guarantor) அளிக்க வேண்டும்.
இங்கு குடியேறிவரும் வயதான பெற்றோர்களினால், அவர்களின் சுகாதாரம் தொடர்பில் காலப்போக்கில் வரி செலுத்துவோருக்குக் கூடுதல் செலவினங்கள் ஏற்படுவதாக துணை குடிவரவு அமைச்சர் Alex Hawke தெரிவித்துள்ளார். இப்பிரச்சனை அவுஸ்திரேலியாவுக்கு மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் அநேகமான நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் 5,000 டொலர் செலுத்தி 3 ஆண்டுகளுக்கான விசாவைப் பெறலாம். அல்லது $10,000 செலுத்தி 5 ஆண்டுகளுக்கான விசாவைப் பெறலாம். அதேவேளை மேலும் அதேயளவு பணத்தைச் செலுத்தி மற்றொரு ஐந்து ஆண்டுகளுக்கு விசாவைப் புதுப்பித்தலுக்கான ஒரு வாய்ப்பும் இந்த விசா திட்டத்தில் உண்டு.
அதிக செலவு மற்றும் அவ்விசாவில் வரும் பெற்றோருக்கான நிரந்தர வதிவிடம் பெறுவதற்கான பாதை இன்மை ஆகியன மிகப்பெரும் கவலை தரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விசா தொடர்பிலான சட்டதிட்டங்கள் சுகாதார செலவினங்களை அரசு கட்டுப்படுத்த உதவுகிறது. அதேவேளை விசா கட்டணமாக மில்லியன் கணக்கிலான டொலர்கள் அரசுக்கு வருவாயாகவும் கிடைக்கும். ஒதுக்கீடு செய்யப்படும் 15,000 விசாக்களும் முதல் வருடத்தில் நிரப்பப்படுமாயின் 150 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும். இதன்மூலம் அரசு childcare - குழந்தைகள் பராமரிப்பைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளலாமென துணை குடிவரவு அமைச்சர் Alex Hawke குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் பெற்றோருக்கான புதிய விசாவிற்கு நிதியளிப்பவர்கள் அவுஸ்திரேலிய குடிமக்கள் அல்லது அவுஸ்திரேலிய நிரந்தரக் குடியிருப்பாளர்கள், அல்லது தகுதியான நியூசிலாந்து குடிமக்களாக இருக்க வேண்டும்.
இந்தப் புதிய மாற்றங்களை, அடுத்தவாரம் சமர்பிக்கவுள்ள வரவுசெலவுத் திட்டத்தில் அரசு அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளது. இது பாராளுமன்றத்தில் நிறைவேறும் பட்சத்தில் இவ்வருட நவம்பர் மாதத்திலிருந்து இப்புதிய விசாக்கள் வழங்கப்படும்.

No comments:

Post a Comment