Tuesday, July 12, 2016

25 ஆண்டு துன்பம் போதும்! இலங்கைக்கே போய்விடுகிறேன்!- சாந்தன் கண்ணீர் கோரிக்கை

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சட்டவிரோதமாக 25 ஆண்டுகளாக தமிழக சிறையில் துன்பப்படுகிறேன். நான் இலங்கையின் குடிமகன் என்பதால், என்னை அந்த நாட்டுக்கே அனுப்பி வைத்து விடுங்கள் என மத்திய உள்துறை அமைச்கத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார் வேலூர் சிறையில் உள்ள சாந்தன்.
மத்திய உள்துறை அமைச்சக செயலர், மாநில அரசின் உள்துறைச் செயலர், சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதர், இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் சாந்தன்.
அந்தக் கடிதத்தில், வெளிநாட்டில் வேலைக்குச் சேருவதற்காக கடந்த 91-ம் ஆண்டு படகு மூலம் இந்தியா வந்தேன். அதே ஆண்டில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் என்னைப் போலீஸார் கைது செய்தனர்.
என்னுடைய கைது பற்றி நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்த சி.பி.ஐ ஆய்வாளர் மாதவன், பாஸ்போர்ட்டுடன் இந்தியா வந்து லண்டன், அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வேலை தேடுவதற்காக சாந்தன் வந்தார் எனக் கூறியிருக்கிறார்.
எனக்கு உதவி செய்ய வந்த பயண முகவர் வீரப்பனும், ' முறைப்படி கடவுச்சீட்டில் நான் வந்ததை' வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.
ஆனால், 6.7.1991 அன்று என்னைக் கைது செய்த போலீஸார், 22.7.1991 அன்று 'ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் குற்றவாளி நான்தான்' என வழக்கில் சேர்த்துவிட்டனர். என்னை சட்டவிரோதமாகக் கைது செய்தனர்.
இந்த வழக்கின் உண்மைக் குற்றவாளியான குண்டு சாந்தனை, 91-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ம் தேதி, போலீஸார் சுட்டுக் கொன்றுவிட்டனர். அந்த சாந்தனுக்குப் பதிலாக என்னைக் கைது செய்துவிட்டனர்.
குண்டு சாந்தன் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை, சமீபத்தில் செய்தி ஊடகங்கள் மூலம் கேள்விப்பட்டேன்.
என்னுடைய உண்மையான பெயர் சாந்தன் என்கிற சுபேந்திர ராஜா. இந்த வழக்கில் எனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
2014-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்தியாவில் எனக்கென்று உறவினர்கள் யாரும் கிடையாது. என்னுடைய உறவினர்கள் அனைவரும் இலங்கையில் உள்ளனர்.
என்னுடைய தாயார் வயது முதிர்வின் காரணமாக நோயுற்றுக் கிடக்கிறார். கோவிலில்தான் படுத்துறங்கி வருகிறார். என்னைப் பார்க்க வேண்டும் என தினம்தினம் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அவரைக் கவனிப்பதற்கு யாரும் இல்லை. இலங்கையில் இருந்து இந்தியா வந்து என்னை சந்திக்கவும் அவருக்கு வசதியில்லை. எனவே, இந்தியா-இலங்கை கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஷரத் 8(2), பிரிவு 13-ன்படி என்னை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கைச் சிறையில் தண்டனை பெற்ற தமிழகக் கைதிகள், இந்திய அரசிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். அதேபோல், இலங்கைக் குடிமகனான என்னை இலங்கை அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
சாந்தனின் கோரிக்கை பற்றிப் பேசிய வழக்கறிஞர்.புகழேந்தி, வேலூர் சிறைக் கண்காணிப்பாளரின் அனுமதியோடு இந்தக் கடிதங்களை அனுப்பியிருக்கிறார் சாந்தன்.
இதன்படி மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் சட்டரீதியான முயற்சிகளைத் தொடருவோம் என்றார்.
சாந்தனின் கோரிக்கைக்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?
- Vikatan

No comments:

Post a Comment